[ தமிழ் மொழிச் செயற்பாட்டகம் சார்பில் இலண்டனில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய மீள்வாசிப்பு பற்றிய நிகழ்வு பற்றிய , பதிவுகள் இணைய இதழில் வெளியான, எழுத்தாளர் பெளசரின் அறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலைப் பல்வேறு பிரிவுகளாகக் கோட்பாடுகள் வாயிலாக, காலகட்டம் வாயிலாகப் பிரித்தாலும், அவற்றை மேலும் பல உப பிரிவுகளாகப் பிரித்தாலும், அவற்றில் மூன்று காலகட்டங்கள் முக்கியமானவை: முற்போக்கு, நற்போக்கு மற்றும் பிரபஞ்ச யதார்த்தவாதம். இம்மூன்றின் மூலவர்களாக நான் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை மற்றும் மு.தளையசிங்கம் ஆகியவர்களையே குறிப்பிடுவேன்.
மு.த மகத்தான ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. என்னைப்பொறுத்தவரையில் அவர் தனது நூலான 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களில் (தாழ்த்தப்பட்ட சமூகங்களின் இலக்கியம் பற்றிய கருத்துகள்) உடன்பாடில்லையென்றாலும் நிஜவாழ்வில் அவர் அவ்விதமான சொற்பதங்களுக்கேற்ப வாழவில்லையென்பதையும் அறிந்து மதிக்கின்றேன். அச்சொற்பதங்களைப்பாவிக்காமல் அவர் சிறப்பாக அந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தால், அந்நூல் முக்கியமான இடத்திலிருந்திருக்கும். இவ்விதம் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கும் நிலையில் இருந்திருக்காது.
இவரும் தனது குறுகிய வாழ்வில் மறைந்து விட்டார். தனது சமூக,அரசியற் செயற்பாடுகளுக்கேற்ப வாழ்ந்ததாலேயே அவரும் மரணத்தைத்தழுவியதாகவும் அறியப்படுகின்றது.
அவரைப்பற்றி அறிய முயற்சி செய்பவர்கள் கூடுதலாக மு.பொ.வின் பிரபஞ்ச யதார்த்தவாதம் என்றால் என்ன? அது கூறும் தத்துவம் என்ன? என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மார்க்சியமும், மதங்களும் மனிதர்களின் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான விடுதலைக்குத்தான் தமது கோட்பாடுகளுக்கேற்ப வாதங்களை முன் வைக்கின்றன. பிரபஞ்ச யதார்த்தவாதம் என்பது மு.பொ. மார்கசியத்தை உள்வாங்கி, அதனைத் தனது பார்வையில் மேலும் தர்க்கங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு தத்துவத்தை முன் வைக்கின்றார். அது சரியா தவறா என்பதற்கப்பால் , அந்த அவரது தர்க்கச்சிறப்புள்ள சிந்தனைதான் முக்கியமானது. மு.த.வை அறிந்துகொள்வதற்கு அவரது பிரபஞ்ச யதார்த்தவாதக் கோட்பாடுகளை அவர் எவ்விதம் மார்க்சியத்திலிருந்து வந்தடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரது அக்கோட்பாடு பற்றிய கட்டுரைகளிலேயே முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்பே அவரது படைப்புகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதுவே எனது பார்வை.
ஒரு மனிதரின் பங்களிப்பினையும் பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது திறந்த வாழ்வையும் மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா? - வ.ந.கிரிதரன் -
மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள...... 14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -
ஒரு மனிதரின் பங்களிப்பினையும் பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது திறந்த வாழ்வையும் மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா?