வாசிப்பு அனுபவம் : தாமரைச்செல்வியின் சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு கதைத் தொகுப்பு! - தாருணி பாலேசன், பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா -
எழுத்துலகில் சிகரம் தொட்டு பொன்விழாவைக் கொண்டாடிய திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு: ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’.
சிறுகதையோ, நாவலோ அல்லது கட்டுரையோ வாசித்து முடித்தபின்பு பல எண்ணங்கள் வாசகரின் மனதில் உருவாகும்.
சில சமயங்களில் மகிழ்ச்சியாய் இருக்கும். சிரிப்பு வரும். முடிவு சில சமயங்களில் துக்கத்தைக் கொணரும். தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதோ பற்பல உணர்வுகள் ஒருசேர எம்மைச் சூழ்ந்து கொள்ளும்.
நிறையவே எம்மைச் சிந்திக்கத் தூண்டும். எமது கடந்த கால வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்களை மீட்டிப் பார்க்கச் சொல்லும். எமது வாழ்வின் அர்த்தத்தை தேடச் சொல்லும்.
கிருஸ்ணபகவானை தனது பக்தியால் அருச்சுனன் கட்டிப்போட்டது போல தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வாசகர்களாகிய எம்மைக் கட்டிப்போட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது.
ஒரு பொழுதுபோக்காக வாசித்து முடித்துவிட்டு எம்பாட்டில் கடநது செல்வதற்கு அவரது எழுத்துகள் எம்மை அனுமதிப்பதில்லை. எம் மனதில் பல மாற்றங்களை உருவாக்கும். எம் எண்ணங்களில் உள்ள கறைகளைக் களையச் சொல்லும்.