தொடர் நாவல்: கலிங்கு (2009 -3) - தேவகாந்தன் -
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் மூன்று!
இறுதி யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது தெரிந்தது. எங்கிருந்து தொடங்கியது? எங்கிருந்தோ. வடக்கே பளையிலிருந்து, கிழக்கே மணலாற்றிலிருந்து, தெற்கே மாங்குளத்திலும், மேற்கே மன்னாரிலிருந்தும்கூட தொடங்கலாமென்பது ஊகமாக இருந்தது. அந்தக் கணிப்பீடுகளை உதறிக்கொண்டு அந்த நான்கு முனைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியிருக்கலாம். கணிப்பீடுகளைப் பொய்யாக்குவதுதானே யுத்தத்தின் ஒரு உத்தி? முள்ளியவளை ஒதியமலை தனிக்கல்லடி மக்களுக்கு நான்கு திசைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியதாய்த்தான் தெரிந்தது. நான்கு புறங்களிலிருந்தும் திசைகள் அவ்வப்போது குலுங்கிக்கொண்டிருந்தன. மக்களைப் பொறுத்தவரை வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும், வளர்ப்பு மிருகங்களையும்கூட விட்டுவிட்டு ஓடுங்கள் என்ற ஒரே செய்தியையே அது கொண்டிருக்கிறது. அது அவரவரின், அவரவர்களது குடும்பங்களின் உயிர் காப்பின் முன்நிபந்தனையாகும்.
அப்போது அவர்கள் தறப்பாள், சட்டி பானைகள், சாப்பிடும் இயத்துக்கள், மற்றும் சமையலுக்கான அரிசி பருப்பு ஆகியவற்றோடு, முடிந்தால் கொஞ்சம் மண்ணெண்ணெயும் ஒரு விளக்குமென எல்லாமெடுத்து தயாராகிவிட வேண்டும். ஓடிப் பழக்கமுள்ளவர்கள் அதை இலகுவாய்ச் செய்தார்கள். புதிதாக ஓடுபவர்களுக்கு கொஞ்சம் சிரமமேற்படும். தறப்பாள், அதை மிண்டி நிமிர்த்தும் தடிகள் கட்டைகள் சிலநேரம் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். மறக்கவும் செய்வார்கள். இன்னும் சிலர் யுத்தம் வரப்போகிறதென்று தெரிந்ததுமே வீட்டைமட்டும் விட்டுவிட்டு தளபாடங்களை, வளர்ப்பு மிருகங்களுடன், ட்ராக்ரரிலோ மாட்டு வண்டியிலோ ஏற்றிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே போய்விட்டிருந்தனர். இன்னும் சிலர் வீட்டையே கழற்றி ஏற்றிக்கொண்டு போனதும் உண்டு. கிணறு காவிகள்பற்றிய வடக்கின் கதையை அப்போது ஞாபகம்கொள்ள முடியும்.
2009 பிறப்பதற்குள்ளேயே நாகாத்தை வீட்டிலும் ஏறக்குறைய எல்லாம் எடுத்துவைக்கப்பட்டு தயாராகவிருந்தன. வளர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக மூன்று மூட்டைகளில் தேவையான எல்லாம் பொதிந்திருந்தார்கள். இருந்தும் அவர்கள் தாமதித்தார்கள். இறுதிக் கணமென ஒன்று எல்லோருக்கும் தேவைப்பட்டது.