- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்' . அத்தொடரின் முதற் கட்டுரை இது. ஏனையவை 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவரும். - பதிவுகள்.காம் -
ஒரு காலத்தின் வாழ்க்கையை நான் இவ்விதமாக பதிவு செய்ய நேர்ந்தது. இது ஒரு கடந்த காலமா? இருக்கலாம். இருந்தும், இடைவிடாத இப்போராட்டத்தின் அடித்தளம், நாளைக்கும், நாளை மறுதினமும் முகிழ்க்க கூடிய, புது முளைகளுக்கு உயிர் தர கூடியவையே. நான் சந்தித்த அந்த மனிதர்கள் - அவர்கள் , இன்றும் எனக்கு உயிர் தரும் பெரியோர்கள். அவர்களுக்கு என் வணக்கம்.
சடை சவுக்கு
அந்த குளம் அப்படி கிடந்தது, யாதொன்றும் அறியாதது போல. அவரை தற்செயலாகத்தான் நான் சந்திக்க நேர்ந்தது. குளத்தின் சுற்றளவு, ஓர் ஆறு கிலோமீற்றர் என்றார்கள். குளத்தில் படகு சவாரி, அந்தக் காலை வேளையிலேயே ஆரம்பமாகியிருந்தது. மெல்லிய பனிபடலம் அவ்வப்போது குளத்தின் குறுக்காய், சில இடங்களில் தோன்றி, அவசரமற்று, மெது மெதுவாக, மெல்லிய ஒரு ஓவியம் போல் வழுக்கி, பின் கலைந்து அகன்றது.
சில சிறுவர்கள் தூண்டில்கள் போட்டவாறு ஓரங்களில் நின்றார்கள். இன்னும் சில, ஏழெட்டு வயது சிறுவர்களின் கூட்டமும், அவர்களது முழங்கால் வரை மட்டுமே நீராழம் இருந்த இடங்களில், இறங்கி சிறிய சிறிய பொலித்தீன் பைகளைக் கொண்டு, தம் சிறிய கரங்களாலும் கால்களாலும் தண்ணீரை உதைத்து, உதைத்து அதிர்வலைகளை உண்டுபண்ணி, குட்டி குட்டி மீன்களை விரட்டி அந்த பொலித்தீன் பைகளுக்குள் வரச்செய்து, அவற்றை பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைத்து, பின் தூக்கி, அவற்றை தமது சிறிய முகங்களுக்கு நேராய் பிடித்து, அச்சிறிய மீன்கள் தமது சிறிய கண்களால் உற்றுப்பார்த்து, தமது சிறிய வாலை ஆட்டியவாறு நீந்துவதை கண்டு, சந்தோசமாய் ஆர்ப்பரித்தனர்.
இதைத்தவிர சில வயது வந்த இளைஞர்களும் முதியவர்களும் ஆங்காங்கே அக்குளக்கரையின் ஓரமாக இருந்த காங்கிரீட் திட்டுகளிலும், பைப்புகளிலும் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மிக அமைதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள், மீன்கள் தம்மை ஏமாற்றி தின்று சென்றிருந்த தூண்டில்களை, ஓரளவு ஏமாற்றம் கலந்த சோர்வுடன் அவ்வப்போது இழுத்தெடுத்து, பின் அசராத ஓர் நம்பிக்கையுடன், மீண்டும் தேவையான மீன் தீணிகளை கவனமாக தம் இரண்டு விரல்களால் கோர்த்து, பின் வலது கையின் பெருவிரலையும் தம் சுட்டுவிரலையும் பயன்படுத்தி தூண்டிலை இரண்டொரு தடவை வட்டமாக ஒரு சுழற்று சுழற்றி நாசுக்காக நீரில் விட்டெறிந்தார்கள்.
அவை, நிதானமாக ஓர் இருபது முப்பது யார் தொலைவுக்கு சென்று விழுந்ததும், நூலை அப்புறமாயும் இப்புறமாயும் இழுத்து அசைத்து, ஓர் வசதியான இடத்தில் தூண்டிலை நிலைபெற செய்கின்றார்கள்.
குளிர்வாடை வீசிய அந்த காலைப்பொழுதில், இவற்றையெல்லாம் நோட்டமிட்டபடி வந்த பொழுது, தற்செயலாகவே இவர் என் கண்ணில் பட்டார். ஓர் அறுபது எழுபது வயதிருக்கும். குண்டாகவும் கட்டையாகவும் இருந்த அந்த மனிதர் குளத்தை ஒட்டி மிக செழிப்பாய் வளர்ந்திருந்த மெல்லிய புற்றரையின் ஓரமாய் கால்களை நீட்டி போட்டுக்கொண்டு தன்பாட்டில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.