200 வருட வரலாற்றுப் பூர்த்தி! இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் இந்த நாட்டுக்கு செய்த பாரிய பங்களிப்பு! - சட்டத்தரணி இரா. சடகோபன், தலைவர், மலையக மக்கள் ஆய்வு அபிவிருத்தி மன்றம் -
மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மக்கள் இந்த நாட்டில் குடியேற மூல காரணமாக அமைந்தது.இலங்கையில் முதல் முறையாக 1820 களை ஒட்டிய தசாப்தத்தின் முற்பகுதியில் இலங்கை க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகும். மலைநாட்டின் கம்பளைக்கருகாமை யில் காணப்பட்ட சிங்ஹபிட்டி என்ற இடத்தில் வெறுமனே 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு தசாப்த காலத்திலேயே இலட்சம் ஏக்கர்களாகப் பெருகி அதற்கப்பாலும் வளர்ச்சியடைந்து, பின்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற்றமடைந்தது.