அழகினை மறைத்தலும்! மறைத்தலின் கொடூரமும்! பாத்திமா மாஜிதாவின் 'பர்தா' நாவல் குறித்த ஒரு பார்வையும், சில குறிப்புக்களும்! - வாகீசன் -
அரசியல் புனைவுகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. படைப்பாளிகள் கொந்தளிக்கும் சமகால நிகழ்வுகளைப் பேசு பொருளாக்கித் தமது படைப்புக்களின் ஊடாக உடனுக்குடனேயே தமது வாசகர்களுடன் உரையாடும் சூழலொன்று இன்று உருவாகி வந்துள்ளது. இந்த வகையில் கடந்த சில வருடங்களாக பலத்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருந்த இஸ்லாமியப் பெண்களின் ஆடைகள் குறித்தும் அந்த ஆடைகளுக்கு எதிரான குரல்கள் குறித்ததுமான சம்பவங்களை மையப்படுத்தி 'பர்தா' எனும் நாவல் 'எதிர்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நாவலினை பாத்திமா மாஜிதா எழுதியுள்ளார். கிழக்கிலங்கையில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வரும் இவர் ஏற்கனவே பல சிறுகதைகளை எழுதியிருந்த போதிலும் இது இவர் எழுதிய முதலாவது நாவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலப்பகுதியில் வெளிவந்த இந்நாவல் பல்வேறு ஆளுமைகளினாலும் எழுதாளர்களினாலும் சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாக பரிந்துரை செய்யப்பட்டதும், இதன் வெளியீட்டாளர் இதனை அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அறிவித்ததும் நாம் அறிந்த செய்திகள்.
இந்நாவல் மூன்று தலைமுறைகளின் கதையினைப் பேசி நிற்கின்றது. கிழக்கிலங்கையில் உள்ள மாவடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டு கிளைக்கும் நாவல் கிழக்கு இலண்டன் பகுதி வரை நகர்கின்றது. மாவடி கிராமத்தில் அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து வரும் அந்த இஸ்லாமியப் பின்னணி கொண்ட சமூகத்தில் மதம் என்ற போர்வையின் கீழ் ஏதோ ஒரு தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள் நுழையும் பர்தா என்னுமோர் அந்நிய ஆடையானது ஏற்படுத்தும் களேபரங்களும் குழப்பங்களும் மாற்றங்களுமே இந்தக் கதையின் மையக்கரு.