எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல் – நேர்காணல் கண்டவர்: வ.ந.கிரிதரன்
வணக்கம் முருகபூபதி, முதலில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உங்களுக்கு வழங்கிய இயல்விருது 2022 இற்காக எம் வாழ்த்துகள். பல தசாப்தங்களாக எழுத்துத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். சிறுகதை, நாவல், கட்டுரை என உங்கள் இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. உங்களுக்கு எழுத்துத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குடும்பச்சூழலா அல்லது நூலகங்களா அல்லது ஆசிரியர்களா அல்லது வேறு ஆளுமைகளா?
முருகபூபதி : பாடசாலையில் கற்கும் கலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடமாக அமைந்தது சரித்திரம்தான். இந்தப்பாடத்தில் நூற்றுக்கு நூறு புள்ளிகளும் பெற்றுள்ளேன். இலங்கை - இந்திய மற்றும் உலக சரித்திரம் என்பன கதைபோன்றது. சிறுவயது முதலே வாழ்வில் பெற்ற தரிசனங்களை கதைபோன்று சொல்லும் இயல்பையும் கொண்டிருந்தேன். அதற்கு எனது பாட்டியும் ( அம்மாவின் அம்மா ) முக்கிய காரணம். இரவில் உறங்கும்வேளையில் பாட்டி தையலம்மா எனக்கு பல கதைகளை சொல்லித்தந்தவர். பாடசாலையில் க. பொ. த. சாதாரண தரம் படிக்கும்போது எமது தமிழ்ப்பாட ஆசிரியர் சுபியான் அவர்கள் எம்மிடம் வாசிக்கும் ஆற்றலை வளர்த்தார். ஊக்குவித்தார். அதில் தேறிவந்தவர்களில் நானும் ஒருவன்.