ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ): ஓர் ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது! - சக்தி சக்திதாசன், லண்டன் -
ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும். 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி ஶசிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும் , திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு. இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் ( Durham ) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார். பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார். சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.