பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் சங்கச் சுரங்கம்-3 நூலுக்கான அணிந்துரை! - பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் -
கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
இவ்வாறான அவருடைய ஆளுமையம்சங்கள் அவர்மீது எமக்கு மிகப்பெரிய மரியாதை உணர்வைத் தோற்றுவித்ததோடு அவரை எமக்கு நெருக்கமானவராகவும் ஆக்கின. நாம் இயங்கி நிற்கும் இயல், இசை ஆகியனசார் கல்வித்துறைகளில் அவ்வப்போது எமக்கெழும் ஐயங்களை யெல்லாம் அவரிடம் தெளிவுபெற்று வருகிறோம். அவ்வகையில் அவருக்கும் எமக்கும் இடையிலான உறவானது நட்பு என்பதான பொதுநிலையை விட மேலானதாகும். எமது நம்பிக்கைக்குரிய வழிகாட்டி யாகவும் ஆலோசகராகவும் கூட அவர் திகழ்ந்துவருபவர்.
இத்தகு பெருமதிப்புக்குரிய பேராசிரியர் அவர்கள் தமது ’சங்கச்சுரங்கம்-3’ என்ற தலைப்பிலான இந்நூலாக்கத்துக்கு அணிந்துரை வழங்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு கல்வியாளனுக்குக் கிடைக்கக் கூடிய அதியுயர் அங்கீகாரமாக இதனை நான் கருதுகிறேன் அவ்வகையில் முதலில் பேராசிரியரவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.