அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு..! எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று. - முருகபூபதி -
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதமையினால், உங்கள் முகநூல் குறிப்புகளை தங்கள் பதிவுகள் இணையத்தளம் ஊடாகத்தான் படிக்கின்றேன். அண்மையில் தங்கள் தந்தையார் பற்றிய நினைவுப்பதிவும் படித்தேன். உடனே எனது தந்தையாரும் நினைவுக்கு வந்தார். எமது குடும்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக முதல் முதலில் அங்கீகரித்து ஊக்கம் தந்தவர்தான் எனது தந்தையார். அதன்பிறகுதான் அம்மாவும் குடும்ப உறவுகளும் வருகிறார்கள். ( காரணம் எழுத்து சோறு போடாது என்பதுதான் அவர்களின் பொதுவான சிந்தனை. ஆனால், எனக்கு எழுத்துதான் சோறு போட்டது )
ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் மாதம் வரும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு மாதங்களிலும் நான் உளமாற நேசித்த பல ஆக்க இலக்கிய ஆளுமைகள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் நினைவுகளில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதே அதற்குக் காரணம். கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்களை ( டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர் 8. ) எமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நீங்கள் நினைவூட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே.