நூல் அறிமுகம்: தாயிரங்கு பாடல்கள் - ஓர் அறிமுகம்! - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் -
- மணற்கேணி பதிப்பகத்தின் வாயிலாகக் கலாநிதி செல்லத்துரை சுதர்சனின் "தாயிரங்கு பாடல்கள்" என்ற கவிதைத் தொகுதி 2023 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளிவந்துள்ளது. அத்தொகுதிக்குப் பேராசிரியர் நுஃமான் எழுதிய அறிமுகமிது. -
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆளுமையாக அறியப்படுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்; சிறப்புப் பட்டம் பெற்று, அங்கேயே சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், அறிஞர்களுடன் நெருக்கமான உறவு உடையவர். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றவகையில் தமிழியல் ஆய்வில் ஆழமாகத் தடம்பதித்துவருபவர். முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர் என்றவகையில் இதுவரை சுமார் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இளந் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும்.
சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 2004ல் அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி மற்றுமொரு மாலை வெளிவந்தது. அதே ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து என் தேசத்தில் நான் என்ற தொகுதியையும் அவர் வெளியிட்டார். நீண்ட கால இடைவெளியின் பின்னர் காலிமுகம் 22 என்ற அவருடைய இரண்டாவது தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இப்போது, காலிமுகம் 22 தொகுப்புக் கவிதைகளையும் உள்ளடக்கிய அவரது மூன்றாவது கவிதைத் தொகுதி தாயிரங்கு பாடல்கள் என்ற தலைப்பில் வெளிவருகின்றது.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு ஈழம் வழங்கிய ஒரு முக்கியமான கொடை அதன் அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் எனலாம். முப்பது ஆண்டுகால யுத்தமும் அது ஏற்படுத்திய அவலமும் அதன் விளைவாக இன்றுவரை தொடரும் அரசியல் நெருக்கடிகளும் அதன் அடிப்படையாகும். அதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டுக் கவிஞர்கள் இந்தக் குரூர அனுபவத்துக்கு ஆளாகவில்லை. அதனால் துரதிஷ்டவசமாகத் தமிழ்நாட்டுக் கவிதை இந்த அளவு அரசியல் கூர்மைபெறாது போயிற்று.