கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'இலையுதிர்கால நினைவுகள்' மற்றும் 'வசந்த காலம் 1971' - வ.ந.கிரிதரன் -
நவீன இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களிலொருவர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞர் என்று அறியப்பட்டாலும் இவர் கவிதை, கதை, கட்டுரையென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர். சிறப்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி கவிதைகளைப் படைக்கும் பலர் விடும் முக்கிய தவறு: அவர்கள் தம் உணர்வுகளைக் கவிதைகளாக்குவதில்லை. தம் அறிவினை, புலமையினை வெளிப்படுத்தவே கவிதைகள் எழுதுகின்றார்கள். உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்கள்தம் கவிதைகள் இல்லாததனால்தான் அவர்கள்தம் கவிதைகள் வாசகர்களின் இதயங்களைத் தொட்டு அவர்கள்தம் இதயங்களில் இடம் பிடிப்பதில்லை. இவர்கள் தம் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையெழுதுதலைப் பார்க்கும் போக்கினைக் கைவிட வேண்டும்.
இவ்விதம் கவிதை எழுதுபவர்களுக்கும், அன்று தம் மேதாவிலாசத்தைக் காட்ட மரபுச்சூத்திரத்துக்குள் கவிதைகள் படைத்தவர்களுக்குமிடையில் வித்தியாசமில்லை. சிறந்த மரபுக் கவிஞர்கள் உள்ளனர்.அவர்கள்தம் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. மரபுக்கவிதையின் எதிரியும் நானல்லன். மரபுக்கவிதை படைப்பதாக எண்ணித் தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகக் கவிதைகள் படைத்தவர்களையே குறிப்பிடுகின்றேன். அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதில், புலமையினை வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர்களைப்போன்றே இன்று வாழும் கவிஞர்கள் பலர் உள்ளனர். இவர்கள் புலமையினைக் காட்ட எழுதும் கவிதைகளைக் குறிப்பிடுகின்றேன். இவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்கள் விளைவாக எழுந்த, எழக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையினைக் கருத வேண்டும். அவ்விதம் கருதியே கவிதைகளை எழுத வேண்டும். அவ்விதம் எழுதினால் இவர்கள்தம் கவிதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இவ்விடயத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வித்தியாசமானவர். தன் வாழ்க்கை அனுபவங்கள் தந்த உணர்வுகளையே கவிதைகளாகப் படைக்கின்றார். அதனால்தான் அவற்றைக் கேட்கையில்யே சிந்தையில் இன்பம் பொங்குகின்றது. எம்மை அவரது கவிதை வரிகள் ஈர்க்கின்றன.