வெலிக்கடை சிறை படுகொலை 38 ஆண்டுகள்! 1983 ஜூலை 25 – 27 - 28 திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக..! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -
- படுகொலைகள் நடந்த வெலிக்கடைச் சிறைச்சாலை -
மூன்று வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ் பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன். இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப்போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன். நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச்சொன்னார். எனக்கு கதைகேட்பதில் அலாதிப்பிரியம். அவரிடம் அவரது கதைகளைக்கேட்டேன். அனைத்தும் திகிலையும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தன. அவர் சொல்லச்சொல்ல கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். உயிருக்காக போராடிய தருணங்களையும் அனுபவித்த சித்திரவதைகளையும் வேதனைக்குரிய விடயங்களையும் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைச்சம்பவங்களின்போது உயிர்தப்பியவர்! அவரது வாழ்வில் அந்த இரண்டு நாட்கள் மட்டுமல்ல, அதன்பின்னர் மட்டக்களப்பு சிறையில் நடந்த சம்பவங்களும் மறக்கப்படமுடியாதவை. தமிழகத்தில் தஞ்சமடைந்த மட்டக்களப்பைச்சேர்ந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவுக்கு மட்டக்களப்பு சிறையுடைப்பு (23 செப்டெம்பர் 1983) சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கும் எண்ணம் இருந்ததாக ஒரு செய்தி முன்னர் கசிந்திருக்கிறது. அதனை படமாக்கவேண்டுமானால், வெலிக்கடை சிறையில் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து நடந்த படுகொலைகளையும் சித்திரிக்கவேண்டும். சாத்தியமற்ற அந்த முயற்சி கைவிடப்பட்டது. பல நாடுகளில் சிறையுடைப்புகள் நடந்துள்ளன. அந்த உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் பல ஆங்கிலத் திரைப்படங்களை பார்த்திருப்போம். அத்தகைய ஒரு படத்தில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் திரைப்பட நடிகராகவிருந்த டொனால்ட் ரேகன் நடித்திருக்கிறார்.