('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -
- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -
கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால் சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கும்.
குழந்தைகளுக்காகக் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் அத்துறையில் சிறந்து விளங்காமலிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று குழந்தைகளுக்கான படைப்புகளை அவர்கள் பெரியவர்களாகிய அவர்களது பார்வையில் படைப்பதுதான். குழந்தைகளாக மாறிப்படைப்புகளைத் தருவதை அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அதனால் குழந்தைகள் பலரையும் அவர்களது படைப்புகள் கவராமல் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.
குழந்தைகளின் உளவியலை நன்கு உள்வாங்கிக் கவிதை படைத்த கவிஞர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் குழந்தை அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வேந்தனார், சோமசுந்தரப்புலவர், சாரணாகையூம். இவர்கள்தம் குழந்தைக் கவிதைகளில் இவர்கள் குழந்தைகளாகவே மாறி விடுவார்கள். குழந்தைகளுக்குத்தேவை எளிமையான சொற்கள், மீண்டும் மனத்தில் பதியும் வகையிலான எளிமையான அதே சமயம் பாடுவதற்குரிய சந்தச்சிறப்பு மிக்க வரிகள். அவற்றை வாசிக்கையில் குழந்தைகளின் உள்ளங்களில் அவை விபரிக்கும் காட்சிகள் படம் விரிக்க வேண்டும். 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே (சோமசுந்தரப்புலவர்) ', 'காலைத்தூக்கிக் கண்ணிலொற்றி கட்டிக்கொள்ளும் அம்மா' (வேந்தனார்) போன்ற கவிதைகளைப் படிக்கையில் குழந்தைகளுக்கு அக்கவிதைகள் விபரிக்கும் காட்சிகள் மனக்கண்ணில் படமாக் விரிந்து மகிழ்வினைத் தருகின்றன. இவை போன்ற குழந்தைக்கவிதைகளை எழுதியவர் கவிஞர் சாரணாகையூம்.