ஒரு மகத்தான பணியே போதும் அந்த மனிதனை நினைவு கூரவும், அவரது மரணத்தினையிட்டு வருந்தவும். - எம். பெளசர் -
A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார்.
நீண்டகாலமாக எழுத வேண்டுமன நினைத்திருந்த ஒரு குறிப்பை, அந்தக் குறிப்புக்கு காரணமாக இருந்த நூலை தமிழில் தந்த தோழர் தேவா மரணித்த போதும் விரிவாக எழுத முடியவில்லையே என்கிற நிலையில் , தோழர் தேவாவின் பணி பற்றியும் , தமிழ்பதிப்பாக வந்த “நீண்ட காத்திருப்பு ” பற்றியும் ஒரு சில வரிகளாவது எழுத வேண்டும் என்பதால் அவசரமாக இதனை பகிர்கிறேன். இத்துடன் தோழர் தேவாவைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள ஒரு ZOOM நிகழ்வையும் ஒழுங்கு செய்துள்ளோம் , இதுவே நாம் செய்யும் அஞ்சலி ! எம்மால் இப்போது செய்ய முடிந்தது. விரிவாக எதிர்வரும் 2 ஏப்ரல் - ஞாயிறு அன்று அவரது பல்துறை சார்ந்த பங்களிப்பினை அனைவரும் இந்த ZOOM வழியான நிகழ்வில் பேசுவோம்.
மன்னாரில் பிறந்து, திருக்கோணமலையில் தொழில் செய்து, சுவிட்சலாந்த்தில் வாழ்ந்து , புகலிட நாட்டில் இருந்த அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உதறித் தள்ளி , சொந்த மண்ணில் , அம்மக்களுடன் வாழ்ந்து , மரணிக்கும் திடசங்கற்பத்தில் இருந்தவர் அவர் என்பதே , அவரது இலக்கை, வாழ்வை, அவரது ஒரு பக்கத்தினை புரிந்து கொள்ள அவர் நமக்குத் தந்த நடைமுறை செயல் வாழ்வின் சாட்சியமாகும்.