வளமிகு வன்னியின் வனப்புறு பண்டைய கிராமம் குமுளமுனை - த.சிவபாலு -
குமுளமுனை என்பது முல்லைத்தீவு நகரில் இருந்து பத்து மைல்கள் தொலைவில் உள்ள ஒரு வளம் நிறைந்த கிராமமாகும். முல்லைத்தீவுக்கு தென் மேற்குத்தி;சையில் அமைந்துள்ளது. தண்ணீரூற்றிலிருந்து ஆறு மைல்கள் தெற்காகவும் அளம்பில் என்னும் கிராமத்திலிருந்து இரண்டரை மைல் மேற்காகவும் இக்கிராமம் அமைந்துள்ளது. வடக்கே கணுக்கேணிக் குளம் அல்லது முறிப்பு எனப்படும் குளத்தையும் அதன் வயற்பரப்பினையும் எல்லையாகவும், கிழக்கே அளம்பில் கிராமத்தையும் தென் கிழக்கே செம்மலைக் கிராமத்தையும் நாயாறு கடல்நீர் ஏரியையும் மேற்கே தண்ணிமுறிப்புக் குளக்கட்டினையும், குருந்து மலை என்னும் பண்டைய வரலாற்று நகரத்தையும் வடமேற்கே பூதன் வயல் என்னும் குளக் குடியிருப்பையும் எல்லைகளாகக் கொண்ட கிராமமாகும்.
ஷகுமுள்; என்னும் ஒரு வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவ்மரத்தின் இலைகளை அரைத்து பசுக்கன்றுகளுக்கும் எருமைக்கன்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர். கீரைப்பூச்சி என்னும் நோய் வந்தால் இந்த இலையை உண்ணவைப்பதன் மூலம் அந்த பூச்சிகள் அழந்து கன்றுகள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மரத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வூரின் பெயர் காரணப் பெயராக அமைந்திருத்தல் வேண்டும் என்பது இவ்வூரவர்கள் கூறும் கருத்தாகும்.
இக்கிராமத்தில் கரிக்கட்டுமூலை வன்னிமத்தின் கீழ் பரிபாலனம் செய்யப்பட்ட முக்கியமான இடமாகக் காணப்படுகின்றது. பாண்டிய, சோழ, சேர நாடுகளைச் சேர்ந்த வன்னியர்கள் தென்னகத்திலிருந்து படையெடுத்து வந்தவேளை படைகளை நடாத்தி வந்தவர்கள். இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் குடியேறி அப்பிரதேசங்களைத் தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தனர். இவர்கள் இருந்ததற்கான பல சான்றுகள் பல கிராமங்களில் காணக்கிடக்கின்றன. வன்னியை ஆண்ட வன்னி மன்னர்களின் வரலாறு இதுவரை நன்கு அறியப்படாததாகக் காணப்படுகின்றது. இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான தென்னவன்மரவடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேண், நித்தகைக்குளம், ஆமையன்குளம், சூரியன் ஆற்றுவெளி, அமெரிவயல் போன்ற பிரதேசங்கள் பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வசித்த பகுதியாகும். இப்பிரதேசங்களில் இன்று தமிழர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டதோடு பெரும்பான்மை இனத்தினரின் குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்பட்டுவருவதும் கண்கூடு.