தமிழ் நாவல்கள்! - நடேசன் -
* ஓவியம் AI
தமிழ் நாவல்கள்.தமிழ் நாவல்களின்மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மீதான எனது விமர்சனத்தை இங்கே பொதுவில் வைக்கிறேன். எனக்குத் தெரிந்த,நான் படித்த இலக்கிய அறிவின் பிரகாரம் ஒரு சமூகத்தை அறிய நாம் கற்பனை அற்ற எழுத்துக்களை வாசிக்க வேண்டும். உதாரணமாக இலங்கைப் போரை அறியப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ், இக்பால் அத்தாஸ் போன்றவர்களை வாசித்தோம்.அவர்கள் முடிந்தவரை உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள்.
யாழ்ப்பாணம் அல்லது இந்தியச் சாதி அமைப்பை அறிய நாம் பத்திரிகைகள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை அணுகுவோம் . ஆனால் கற்பனை எழுத்துகள் என்ற ஆயுதத்தால் தனிமனிதர்களின் மனங்குகைகளை நாம் ஊடுருவிப் பார்க்கமுடியும்.இதற்கு உதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்திலிருந்து உதாரணம் தருகிறேன்.
போர் முடிந்தபின் பாஞ்சாலி தலைவிரி கோலமாக உபபாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் எனத் தனது விருப்பத்துக்குரியஅருச்சுனனிடம் கூறிய போது, அருச்சுனன் கவலைப்படவில்லை ஆனால் சுபத்திரையின் மகன் அபிமன்யு போரில் இறந்தபோது அவனது சோகம், சபதம், பின் நடந்த போர் எல்லாம் நமக்குத் தெரியும் .இது ஆணின் மனதை அழகாகக்காட்டுகிறது – அபிமன்யு தனது மகன் என்பது நிச்சயம் ஆனால் உபபாண்டவர்கள்?