(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (3) - ஜோதிகுமார் -
3
ஏய்டன் நீலமேகத்தின் சாதீய மனத்திண்மை குறித்து சிந்திப்பதும், அச்சிந்தனைக்கூடு, மனித ‘நம்பிக்கை’ பொறுத்த, பின்வரும் தரிசனங்களுக்கு வந்து சேர்வதாகவும் நாவல் காட்டுவதாய் உள்ளது.
“இவனை ஒரு தாழ்ந்த சாதியினனைத் தொட வைத்தேன் என்றால் நான் வெற்றிபெற்றவனாவேன் அல்லது குறைந்த பட்சம் மனமுடைந்து அழ வைத்தாலாவது வெற்றி பெற்றவனென உணர முடியும்”
“ஒரு போதும் அதற்கான வாய்ப்பை இவன் எனக்கு அளிக்கப் போவதில்லை..”
“ஆம். இவன் மௌனமாக இறப்பான். தன்னுடைய ‘நம்பிக்கைகளுக்காக’ உறுதியாக வதைப்பட்டு அமைதியாக உயிர் துறக்கிற ஓர் புனிதரை போல! புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான்…இவன் மிக முட்டாள் தனமான ஒன்றுக்காக, மனித ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கின்றான். ஆனால் இவன் இப்போது இறக்கும் மனநிலைக்கும் அந்த புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடு இல்லை. என்ன அபத்தம்” (பக்கம்-74) (அழுத்தம் எம்முடையது)
அதாவது நீலமேகத்தின் சாதீய பார்வையும் ஏய்டனின் சமூக நீதிக்கான பார்வையும், நம்பிக்கை எனும் ஒரே அடிப்படையில் இருந்து எழுவனவாக தர்க்கிக்கப்படுகின்றது.
‘நம்பிக்கை’ என்ற அடிப்படையைக் கொண்டு நோக்கும் போது, இரண்டுமே ஒன்றுதான் என்பதும், இதன் தொடர்ச்சியாக, இக்காரணத்தாலேயே வாழ்வே அபத்தம் என்ற முடிவுக்கு வருதலும் எவ்வளவு தூரம் அபத்தமானது என்பதும் இலகுவில் கண்டுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.
அதாவது ‘நம்பிக்கை’ என்ற ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு வௌ;வேறான இரண்டு வேறுபட்ட நம்பிக்கைகளை, இவை இரண்டுமே ஏதோ ஒரு வகையில் நம்பிக்கைதாம் எனும் அடிப்படையில் பார்த்து, இவை ‘ஒன்றுதான்’ என முடிப்பதும் அதன் வழியாக, இறுதியில், இக்காரணத்தினாலேயே , இவ்வடிப்படையில், வாழ்வே அபத்தம் எனப் பாடும் பாட்டு இந்திய வரலாற்றில் ‘யாவையும் மாயை’ எனப் பாடப்பட்ட பாடலுக்கு ஒப்பானதேயாகும்.