கலைஞர் கருணாநிதி நினைவாக... - வ.ந.கிரிதரன் -
கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.
அரசியலுக்கு அப்பால் கலைஞரின் முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவது தமிழ் இலக்கியப்பங்களிப்பு மற்றும் அவரது திரையுலகப்பங்களிப்பு. இலக்கியப்பங்களிப்பு என்னும்போது அவரது ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியரீதியிலான திட்டங்களையும் குறிப்பிடலாம்.
கன்னியாகுமரியில் அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை இன்று முக்கியமான நில அடையாளச் சின்னமாக மாறியிருக்கின்றது. அவரை எப்பொழுதும் அச்சிலை நினைவு கூர வைக்கும்.
என் பால்ய பருவத்தில் நான் கலைஞரை அறிந்துகொள்ள வைத்த படைப்புகளிலொன்று 'குமுதம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'ரோமாபுரிப்பாண்டியன்' சரித்திர நாவல். வாசிக்கத்தொடங்கியிருந்த என்னை மிகவும் கவர்ந்த மொழி நடையில் அமைந்திருந்த தொடர்நாவல். ராணிமுத்து பிரசுரமாகவும் அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை' வெளியாகியிருந்தது. சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மலரில் வெளியான அவரது 'பூம்புகார்' நாடகத்தையும் குறிப்பிடலாம். இவைதாம் கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்தின.
சிலப்பதிகாரத்தைத் தனது எழுத்துகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் கலைஞர். 'பூம்புகார்' திரைப்படம் முக்கியமான திரையுலகப்பங்களிப்பு. அவரது 'சங்கத்தமிழ்', 'தொல்காப்பியப்பூங்கா', குறளோவியம்' ஆகியவை முக்கியமான அவரது படைப்புகள். அவர் ஆட்சியில் அவரமைத்த வள்ளுவர் கோட்ட'மும் முக்கியமான பங்களிப்புகளிலொன்று.