எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?
எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு' என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.
தமிழக முதல்வர்களில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே முதல்வர் எம்ஜிஆர். அவ்வளவுக்குத் தமிழக மக்களின் பேராதரவையும் , பேரன்பையும் பெற்றவராக விளங்கியவர் அவர். உலகத்தமிழர்கள் மத்தியிலும் அவர் அதே வகையான ஆதரவையும், அன்பினையும் பெற்றவர். கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக வருவதற்கு அன்று எம்ஜிஆரின் ஆதரவில்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்காது. அது அனுபவ அடிப்படையில் நெடுஞ்செழியனுக்குச் சென்றிருக்க வேண்டிய பதவி.