அஞ்சலி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்தார்!
அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -
கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."
இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார். எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது. அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள். இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி!
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை. யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை. இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.
அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மை. இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.
பேரின்பப் பெருநாள் வாழ்த்து! - செ. சுதர்சன் -
01)
தலைப்பிறை கண்டார் அன்பர்;
தரணியே அன்பால் பொங்கும்
அலையருள் வீசல் கண்டேன்!
ஆதவன் 'அல்லாஹ்' என்றே
கலைக்குரல் எழுப்பி வானில்
கைகளைக் கூப்பல் கண்டேன்!
விலைமதிப் பில்லா நல்ல
வீரிய விரதம் வாழ்க!
02)
பள்ளியின் வாங்கு வானில்
பாடிய செய்தி கேட்டேன்!
அள்ளியே இன்ப வாழ்த்தை
ஆருயிர்த் தோழருக்கு,
கள்ளதில் வண்டு பாடும்
கவியதில் பந்தி வைத்தேன்!
தள்ளியே தாழ்வு போகத்
தளிர்த்தன உலகு எல்லாம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் - மீண்டும் எழுந்து வருக! - வ.ந.கி -
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மையில் உடல் நிலை காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சத்திர சிகிச்சையின் பின்னர் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார். இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கவிஞர் மிக விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த மனோதிடமும், நம்பிக்கையும் உள்ள ஆளுமை அவர்.
அவர் பூரண நலத்துடன் மீளட்டும். இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடட்டும்.
கார்ல் மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!
'
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற'வர்க்கு
துருவத்துச் சுடரென நின்றாய்.
சுடர்ந்தாய். வாழ்க! வாழ்க!
-
மே 14 கார்ல் மார்க்ஸ் அமரரான தினம். -
பயனுள்ள இணைப்பு - https://www.history.com/topics/european-history/karl-marx
அஞ்சலி: முன்னாள் கனடாப் பிரதமர் பிரயன் மல்ரோனி (Brian Mulrony) மறைவு!
குடிவரவாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற கனடியப் பழமைவாதக் கட்சியின் தலைவராக அமரர் பிரயன் மல்ரோனியைக் (Brian Mulroney) கூறலாம். இவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான 'நிர்வாக மறுபரிசீலனை' த் திட்டத்தின் (Administrative Review - ADR) மூலம் கனடாவில் தங்கியிருந்த அகதிக்கோரிக்கைக்காரர்கள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள் ஆயிரக்கணக்கில் பயனடைந்தார்கள். நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்.
இவரது ஆட்சிக்காலத்தில் முதன் முறையாகக் கப்பலில் நியூ ஃபவுணலாந்துக் கரையில் வந்திறங்கிய இலங்கைத் தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். எதிர்ப்புகளை மீறி அவர் அப்போது கூறிய வார்த்தைகள் முக்கியம். அவர் கூறினார் "we are not in the business of turning away refugees." அக்கூற்றே அன்று வந்திறங்கிய தமிழ் அகதிகள் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமானதாகவிருந்தது.
தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக, சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. - வ.ந.கி -
ஜெ.ஜெயலலிதா அவர்கள் - தாய் இதழில் எழுதிய தொடரின் ஒரு பகுதி:
1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.