இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார். இது 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அன்று அவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டனர். நீதியை நிலைநாட்டுவதற்காக எனக் கூறப்படும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்களை தூக்கிலிடத் தேவையான குற்றச்சாட்டுக்களை வரிசைப்படுத்துவது தொடங்கியது. எதுவுமே அறியாத திருமகளின் மகளும் தாயின் மார்பிலேயே பாலருந்தியவாறு சிறைச்சாலைக்குள்ளேயே உறங்கியது. அன்று அவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கைச் சரிதம் இன்று எந்த நிலையில் உள்ளது?