சோழியனின் 'கறுப்பு ஜூலை 1983' பற்றிச் சில வார்த்தைகள் ...
சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த 'காங்ரீட்' தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.