மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளெல்லாம் புதுக்கவிதைகக்கென்று ஒரு பகுதியினை ஒதுக்கி நிறைய கவிதைகளை வெளியிட்டு வந்தன. வீரகேசரியும் தனது வாரவெளியீட்டில் 'உரை வீச்சு' என்னும் தலைப்பிட்டு கவிதைகளை வெளியிட்டு வந்தது. அக்காலகட்டத்தில் வீரகேசரியின் 'உரை வீச்சில்' எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளிவந்திருந்தன. அதுபோல் தினகரன், சிந்தாமணி, ஈழமணி போன்ற பத்திரிகைகளிலும் எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளியாகியிருந்தன.
அச்சமயத்தில் வீரகேசரியில் ஓர் அறிவித்தல் வெளிவந்திருந்தது. வீரகேசரிக்கு 'உதவி ஆசிரியர்' வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதுபற்றிய அறிவித்தல். எனக்கு அக்காலகட்டத்தில் பத்திரிகையொன்றில் வேலை பார்ப்பது பற்றிய கனவொன்றுமிருந்தது. அச்சமயத்தில் வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவர் சிவப்பிரகாசம் அவர்கள். வீரகேசரிக்கு உதவி ஆசிரியர் தேவை என்ற அறிவித்தலைப் பார்த்ததும் எனக்கோர் ஆசை. உடனடியாக வீரகேசரியின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்பொழுது ஆசிரியர் அங்கில்லை. அங்கிருந்த ஏனையவர்களிடம் உதவி ஆசிரியர் வேலை பற்றி விசாரித்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர்களும் என் எழுத்தனுபவம் போதும். ஆசிரியருடன் வந்து கதையுங்கள் என்றார்கள். ஆசிரியர் விடுமுறையிலிருப்பதாகவும் மீண்டும் வேலைக்கு வரும்போது வந்து கதைக்கும்படியும் கூறினார்கள்.
அவர்கள் கூறியபடி சிறிது நாட்களின்பின் வீரகேசரி காரியாலயம் சென்றேன். ஆசிரியர் சிவப்பிரகாசம் என்னை வரவேற்று தனது அறைக்குள் கூட்டிச் சென்றார். நான் வந்த விடயம் பற்றி விசாரித்தார். நான் உதவி ஆசிரியராக வேலை பார்க்க விரும்பியதைக் குறிப்பிட்டேன். அவர் எனது கல்வித்தகைமைகள் பற்றிக் கேட்டார். நான் மொறட்டுவைப் பல்கலைகக்கழகப் பட்டதாரி என்ற விடயத்தைக் கூறினேன். அதனைக் கேட்டதும் அவர் வேறெதுவும் பற்றிச் சிந்திக்காமல் உடனடியாகக் கூறியதன் சாரம் இதுதான்: உன்னுடைய அப்பா, அம்மா எவ்வளவு கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்திருக்கின்றார்கள். உன்னை அவர்கள் படிக்க வைத்தது இதற்காகத்தானா? நீ போய் உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடு என்பதுதான் அது. அதன் பிறகுதான் நான் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தில் போய் இணைந்துகொண்டது. ஆனால் அதன்பிறகு சில வருடங்களில் இலங்கைத் தீவில் மிகப்பெரிய அளவில் இனக்கலவரம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் உலகின் பல பகுதிகளையும் நோக்கி அகதிகளாகப் படையெடுத்தார்கள். நானும் அவ்விதம் சென்றவர்களிலொருவன். வாழ்க்கைப் புயலுக்குள் அள்ளுண்டு, அடிபட்டுக் காலம் கடந்து சென்றுவிட்டது.
இப்பொழுதும் சில வேளைகளில் அந்த வீரகேசரி அனுபவம் ஞாபகத்துக்கு வருவதுண்டு. வீரகேசரி ஆசிரியர் சிவப்பிரகாசத்தை என் வாழ்வில் நான் சந்தித்தது அதுதான் முதலும், இறுதியும். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை என் வாசிப்பையும், எழுத்தையும் நான் ஒரு போதுமே கை விட்டதில்லை. அவைதாம் எப்பொழுதுமே என் இணைபிரியாத நண்பர்கள். ஆனால் பத்திரிகை ஆசிரியராக இருக்க வேண்டுமென்ற ஆசை மட்டும் என்னை விட்டு , என் மனதை விட்டு ஒருபோதுமே மறைந்துவிடவேயில்லை. அதன் விளைவு தான் கடந்த 13 வருடங்களாக நான் 'பதிவுகள்' இணைய இதழினை அதன் ஆசிரியராகவிருந்து நடாத்தி வருவது. இன்று வாசிப்பது, எழுதுவதுபோல் 'பதிவுகள்' இணைய இதழும் என் வாழ்க்கையிலோர் அங்கமாகிவிட்டது. 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழ் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கலை, இலக்கியவாதிகள் தங்களது படைப்புகளை, அறிந்ததைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.