ஜனவரி 27: ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகார்த்த நாள்!
இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.
கடந்த நூற்றாண்டு மனித இனம் வெட்கப்படவேண்டிய விதத்தில் ஜேர்மனியில் ஹிட்லர் நடத்திய கொடுமைகள் அளப்பரியவை.அந்த கால கட்டத்தில் ஹிட்லரைப் போலவே பல கொடுமையான பாஸிஸ்ட் தவைர்களாக ஸ்பெயினில் பிராங்கோவும் இத்தாலியில் பெனிட்டோ முசொலினியும்,ஜப்பானில் சக்கரவர்த்தி ஹிறோஹிட்டோவும் ஆட்சி செய்து பல அநியாயங்களை நடத்தினார்கள்.
பெரிய குடும்பத்திற் பிறக்காத, பட்டப் படிப்புக்கள் படிக்காத ஆனால் மக்களைத் தூண்டும் இனவெறிப் பேச்சால் பெரும்பாலான மக்களை உணர்ச்சி வசப்படுத்தி பல கோடி மக்களைக் கொலை செய்து,அதன் எதிரொலியாகத் தனது தாய் நாட்டையே எதிரிகள் புகுந்து துவம்சம் செய்ய,அடோல்ப் ஹிட்லரின் பாஸிஸக் கொள்கை வழிவகுத்ததை,இன்று மக்கள் நினைவு கூருகிறார்கள்.
ஹிட்லர் தனது கொள்கையான,ஜேர்மனியில் 'ஆரிய வம்சத்தை'உயர்த்துவதற்காக மற்றவர்களை மனித மற்ற முறையில் வேட்டையாடி அழித்தான்.