- இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி -
இது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் 'எடுத்துரைப்பு' என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள் இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையூடாக ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச்சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச்சொல்ல உண்மைகள் உதவிக்கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.
"ஒருவர் தாம் கையாளும் பொருளைக்குறித்து, பிறரால் ஏற்றுக்கொள்ள்பட்ட உண்மைககளின் அடிப்படையில் காலவரிசையில் கூறினால் சரித்திரம் ஆகிறது. மாறாக அப்பொருள் குறித்த சரித்திரத்தை தம்முடைய உண்மைகளின் அடிப்படையில் தம்முடைய விருப்பவரிசையில் ஒருவர் தெரிவித்தால் கதையாகிறது"( பிரேமோன்). இரண்டுமே நடந்து முடிந்த ஒன்றை தெரிந்துகொள்ள முனையும் ஒரு புதிய மனிதருக்கு உரைப்பதாகும். ஆக சரித்திரமும் கதையும் ஒன்றுதான். பிரெஞ்சு மொழியில் Histoire (History) என்றசொல்லுக்கு 'கதை' என்றும் 'வரலாறு' என்றும் 'பொய்' என்றும் பொருளுண்டு. தற்போது அதிகம் வழக்கில் இல்லையென்கிறபோதும் சரித்திரம் என்ற சொல் தமிழிலும் வரலாற்றையும், கதையையும் (உ.ம். பிரதாப முதலியார் சரித்திரம்) குறிக்கும் சொல்லாக அண்மைக் காலம்வரை இருந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் எடுத்துரைப்பியலை பற்றி பேசுவதற்கு Histoire, 'Récit, Intrigue போன்ற சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அத்தனை துல்லியமாக வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் பேராசிரியருடைய அசுர உழைப்பைகண்டு பிரம்மிக்கவேண்டியிருக்கிறது. தமிழில் க.பஞ்சாங்கத்தைத் தவிர்த்து வேறொருவர் எடுத்துரைப்பியல் குறித்து இத்தனை நுட்பமாக தமிழ் மரபில் காலூன்றி பேசியிருக்கிறார்களா? பேசியிருப்பினும், விரிவாகவும் தெளிவாகவும் அப்பொருளைக் கையாண்டிருப்பார்களா எனத்தெரியவில்லை. நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற இந்நூலில் பத்து கட்டுரைகளை எடுத்துரைப்பியல் என்ற தலைப்பின் கீழ் வாசிக்கக் கிடைக்கிறது. "எடுத்துரைப்பியல் சில விளக்கங்கள்" என்ற முதல் கட்டுரை எடுத்துரைப்பியலை அறிமுகம் செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஒன்பது கட்டுரைகள், பாமரரும் விளங்கிக்கொள்ளும் வகையிற் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
1. எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள்
நம்மிடம் வந்தடையும் தகவல்கள் அல்லது செய்திகள் அனைத்துமே திரித்து கூறப்படுவைதான் என்ற உண்மையை நமது தினசரி வாழ்க்கையிலிருந்து உதாரணம் காட்டுகிறார் க.பஞ்சாங்கம். ஒரு முனையிலிருந்து மறுமுனையை சென்றடையும் ஒரு தகவல் அல்லது செய்தி, அச்சம்பவத்தின் கவர்ச்சியைப் பொருத்து, அதைக்கொண்டு சேர்க்கும் மனிதரைப் பொறுத்து விரியவோ அல்லது சுருங்கவோ செய்கிறது. ஒரு நிகழ்ச்சிக்குப் "புனைவு மதிப்பு" உருவாவதன் ரகசியம் மனிதப் பிரச்சினைகளோடு தொடர்பு உடையதென்கிறார். "ஒருவர் சந்தையில் ரத்த வாந்தி எடுத்தான்" என்ற தகவல் ஒவ்வொரு மனிதராகக் கடந்து இறுதியில் "நம்ம தெரு நல்லதம்பி இருக்கான்ல, அதான் ஒங்க சித்தப்பா மகன் நல்லதம்பி , மந்தையில காக்கா காக்காவா வாந்தி எடுத்தானமில்ல. உனக்குத் தெரியுமா? என்னப்பா அதிசயம்!" எனமுடிகிறது. "பேனை பெருமாளுக்கும்" கலையில் மனிதர்கள் எல்லோருமே தேர்ந்தவர்கள்தான். ஒரு கதைக் கட்டுக்கதையாகும் இரகசியத்தை - புனைகதையாக உருமாறும் நுட்பத்தை நம் அன்றாட வாழ்க்கை நரம்புகளின் துணைகொண்டு சொல்ல கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. புனைவும் வசப்படவேண்டும், மனிதர் கற்பனைகளுக்குள் ஊடுறுவும் வல்லமையும் வேண்டும். எனவேதான் மொழியியல், படைப்பியல் இரண்டையும் நன்கறிந்த க.பஞ்சாங்கம் எடுத்துரைப்பு குறித்து பேசுவதை நாம் கேட்கவேண்டியவர்காளாக இருக்கிறோம். பேராசிரியர் சொல்வதுபோல இன்றைக்கு ஊடகங்கள் மூலமாக நம்கவனத்திற்கு வருகிற தகவல்கள், செய்திகள், உண்மையென நம்பிக்கொண்டிருக்கிற வரலாறுகள், ஆவணங்கள், திரைப்படங்கள், துணுக்குகள், சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே எடுத்துரைப்பு களமாக, தளமாக விளங்குகின்றன.
எடுத்துரைப்பின் குணநலன்களைப் பேசவருகிற அவர் பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டுவது அழகு:
"இன்பமெனச் சிறுகதைகள் -எனக்கு
ஏற்றமென்றும் வெற்றியென்றும் சிலகதைகள்
துன்பமெனச் சிலகதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சிலகதைகள் ( ந. இ.கோ. பக்.131)
புனைகதை எடுத்துரைப்பைப் பற்றி பேசுவது கட்டுரை ஆசிரியரின் நோக்கம் என்பதால் 'இலக்கியம், இலக்கியத்தின் வகைமைகள்,கலை, வடிவங்கள் குறித்தும் சுருக்கமான அறிமுகங்கள் உள்ளன. அவை கட்டுரையின் மையப்பொருளை நோக்கி நம்மை அழைத்து செல்ல உதவுகின்றன. "புனைகதை எடுத்துரைப்பு என்பது தொடர் நிகழ்ச்சிகளால் ஆனது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. 'புனைவு மதிப்பு' என்பது மனிதப்பிரச்சினைகளோடு தொடர்புடையவை" என ஆசிரியர் தரும் குறிப்புகளும் கவனத்திற்கொள்ளதக்கவை.
புனைகதை எடுத்துரைப்பு என்பது என்ன?
1. நிகழ்ச்சிகள். 2. நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள். 3. எடுத்துசொல்லும் அல்லது எழுதும் செயல்பாடென்றும் முறையே மூன்று அலகுகளாலானவை எனக்கூறி, அவையே கதை(story), பனுவல் (Text), எடுத்துரைப்பு (Narration) என மொழியியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆசிரியர் தெரிவிக்கிறார். "பனுவலிலிருந்து நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, தேவைக்கேற்ப சுருக்கி எடுத்துக்கொள்ளப்படும் எடுத்துரைப்பு நிகழ்ச்சிகள் - கதை யென்றும்; பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழியாடலே பனுவலென்றும் விளக்கம் கிடைக்கிறது.
எல்லாவிதமான புனைகதை எடுத்துரைப்புகளையும் ஆராய்வதற்குப் பொதுவான ஒரு முறையியலை உருவாக்குவதற்காக இப்பகுதி எழுதப்பட்டதென்பதை முதலாவது காரணமாகவும்; தனிப்பட்ட ஒரு எடுத்துரைப்பு வகையினைப் பிரித்தெடுத்து அதைக் கற்றுகொள்வதற்கான ஒரு வழிமுறையைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நோக்கம் இரண்டாவது காரணமென்றும் கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் அடிக்குறிப்பாக வருகிற செய்திகள் முக்கியமானவை. பல கலைச்சொற்களை சந்திக்கிறோம், அவை நமக்குப் புதியனவும் அல்ல. எனினும் எடுத்துரைப்பியல் பின்புலத்தில் கேட்டிராத தொனியில் அவை ஒலிக்கின்றன. அவற்றில் மூன்று சொற்களைப் பற்றி பேராசிரியர் இங்கு சற்று விரிவாக தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பனுவல் (Text), புதிய வரலாற்றியல் (The New Historicism), மொழியாடல் ( Discourse) ஆகியவையே அந்த மூன்று சொற்கள்.
பனுவலா? பிரதியா?
Text என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் 'பிரதி'யென்றும் மற்றொரு பிரிவினர் பனுவல் என்றும் அழைக்க இரண்டுமே வழக்கிலுள்ளதை ஆசிரியர் சுட்டிக்காட்டிவிட்டு தமக்குப் பனுவல் என்ற சொல்லே ஏற்புடையதென்று தெரிவிக்கிறார். அகராதியை புரட்டிப் பார்த்தபோது எடுத்துரப்பியலில் உள்ள Text என்ற சொல்லுக்கு பிரதி பொருந்திவதைப்போல தெரிகிறது. இன்னொரு பக்கம் நடைமுறை வழக்கில் copy என்ற சொல்லுக்குப் பிரதி என்ற சொல்லை பயன்படுத்தி வருவதைப்பார்க்க, அதே 'பிரதி' என்ற சொல்லை எடுத்துரைப்பியல் மொழிக்கும் பயன்படுத்தினால் குழப்பத்தைத் தராதா என்ற ஐயமும் வருகிறது. இது மொழியியலாளர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. பனுவல் என்ற சொல்லோடு வேறு சில பிரச்சினைகளையும் ஆசிரியர் எழுப்புகிறார். அதிலொன்று, அண்மைக்காலங்களில் படைப்பு,படைப்பாளி, வாசகன் குறித்து தரப்படும் புதிய விளக்கங்கள். விக்கிரமாதித்தன் கதை கேள்விபோல பின் நவீனத்துவவாதிகள் எழுப்பும் கேள்வியை [ஒரு படைப்புக்கு யார் சொந்தம் கொண்டாடுவது " படைத்தவனா" (எழுதாளனா?) "உயிர்கொடுப்பவனா" (வாசகனா?)] ஆசிரியரும் எழுப்புகிறார். ரொலாண் பர்த்தின் கருத்துக்களை முற்றாக மறுத்தும் நூல்கள் பல வந்துவிட்டன. இலக்கியம் என்பது அறிவியல் அல்ல, இங்கே முடிவான உண்மைகளுக்கு சாத்தியமில்லை.
புதிய வரலாற்றியல்
அமெரிக்க திறனாய்வாளர் ஸ்டீபன் க்ரீன்ப்ளாட் என்பதுகளில் பயன்படுத்தியை இப்புதிய இலக்கிய சித்தாந்தம், பிநவீனத்துவத்தின்கீழ் பலகோட்பாடுகளை உள்ளடக்கியதென்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்புதிய வரலாற்றியலின்படி "வரலாற்றுக்குள் புனைவையும் புனவுக்குள் வரலாற்றையும் தேடி அடையலாம்....... வரலாற்று தகவல்கூட ஒரு கதைதான்....ஒவ்வொரு தலைமுறையும் தன் காலத்தின் தேவைக்கு ஏற்ப இறந்த காலத்தை வரலாறு என்ற பேரில் மாற்றி எழுதிக் கொள்ளுகின்றன.."( ந.இ.கோ. பக்கம் 136)
டிஸ்கோர்ஸ் ( Discourse)
மொழியியலில் மிகவும் முக்கியமானதொரு சொல்லாக கருதப்படுகிற இச்சொல்ல்லைக்குறித்து, "எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள் என்ற இக்கட்டுரையின் அடிக்குறிப்பு விரிவாகப் பேசியிருக்கிறது. மிஷெல் •பூக்கோ என்கிற பிரெஞ்சு மொழியியல் அறிஞர் இச்சொல்லுக்கு ஒரு பன்முகப்பார்வையைக் கொடுத்திருக்கிறார். வெகுசன வழக்கில் 'டிஸ்க்கூர்'(Discours) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு சொற்பொழிவு அல்லது உரை(பேச்சு) என்றே பொருள். பிரெஞ்சு அகராதியில் பொருள் தேடினால்: மேடையில் பேசுதல்; கொடுத்த தலைப்பில் விரிவாகப் பேசுதல்; சீராக முன்னெடுத்துச்செல்லும் பேச்சு; மேடைப்பேச்சுகென்று எழுதி தயாரித்த உரை என்றெல்லாம் பொருள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் கணக்கிற்கொண்டே மொழியியலுக்குள் மிஷெல் பூக்கோ இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. இலத்தீன் மொழியை வேர்சொல்லாகக் கொண்ட இப்பிரெஞ்சு சொல்லுக்கு 'சொல்லாடல்' என்ற தமிழ்ச்சொல்லை விட 'மொழியாடல்' என்ற தமிழ்ச்சொல் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
2. கதையும் நிகழ்ச்சியும்
எடுத்துரைப்பியலில் க.பஞ்சாங்கத்தின் இரண்டாவது கட்டுரை.
"கதை என்பது என்ன? 'கதை' என வொன்று இல்லாமல் மனித இருப்பு சாத்தியமா?" என்ற கேள்விகளை எழுப்பும் ஆசிரியர் அதற்கான பதிலையும் கூறிவிடுகிறார். அவரது கூற்றுப்படி கதை என்கிற ஒரு கூறுதான், உலக நிகழ்ச்சிகளை எடுத்துரைப்புப் பனுவலாக மாற்றிப் போடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எனினும் இதொரு நுட்பமான கருத்தியலாகக் கதை பனுவலுக்குள் விளங்குவதால் வாசகருக்கு இது நேரடியாக எளிதில் வசப்படக்கூடியதாக இல்லை எனும் கூற்றை நாம் மறுப்பதற்கில்லை.
"திரும்பத் திரும்பக் கதையை சலிக்காமல் கூறும் பண்பு, ஒரே கதையில் பல்வேறு வடிவங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறம் வெவ்வேறு ஊடகங்களில் அதே கதை எப்படியெல்லாம் மாறி விளங்குகிறது என்பதை அடையாளம் காணும் திறம் ஆகிய திறங்களை உடையவர்களால்தான் கதை வடிவத்தை விளக்க முடியும்" என ஆசிரியர் கூறுவதைப்போல இப்பகுதி சாதாரண வாசகர்களுக்கு அத்தனை எளிதாக விளங்கக்கூடிதல்ல.
கதையின் உள்ளார்ந்த அமைப்பு - குறியியல்:
எடுத்துரைப்பியலில் குறியியல் ( Sémiotique) குறித்து ஆய்வு செய்து அதன் பண்பாட்டை வரையறை செய்தவர் அமெரிக்க அறிஞரான சார்லஸ் சாண்டர்ஸ் பியெர்ஸ் ( Charles Sanders Peirce). பின்னர் சுவிஸ் மொழியியலாளர் பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்(Ferdinand de saussure) என்பவருக்கு குறியியல் சமூகத்தில் பொதிந்துள்ள குறியீடுகளின் உயிர் வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட அறிவியல்.
ஒரு கதையோட்டத்தில் குறியியல் ஆய்வு என்பது இருவகையானது:
எடுத்துரைப்பில் தொழில் நுட்பங்களை ஆய்வதென்பது முதலாவது; கதைசொல்லல் எனும் பிரபஞ்சத்தினுடைய நிர்வாக சட்டதிட்டங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென்பது இரண்டாவது. இவற்றைக்கூட பொது அலகொன்றினால் அள்விட முடியாது. இருவகையான அணுகுமுறைகள் தேவையென்கின்றனர் இத்துறையில் ஆய்வினை மேற்கொண்ட மொழியியல் வல்லுனர்கள்: அவர்களின் முடிவின்படி:
1. அனைத்து தொடர் நிகழ்வுகளையும்கொண்டு உருவாகும் ஒரு கதை புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்த தர்க்கத்தை பிரதிபலிக்கும் சட்டங்களின் கீழ் அணுகுவது முதலாவது வகை.
2. மேற்கண்ட நிர்பந்தந்துடன், அக்கதைக்கென ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேக மரபு; பண்பாடு, இலக்கியம், நிகழ்வு அரங்கேறும் காலம், கதை சொல்லியின் பாணி போன்ற காரணிகள் இணைந்து நடைமுறைபடுத்துகிற சட்டதிட்டங்களின் லீழ் அணுகுவதென்பது இரண்டாவது வகை.
ரஷ்ய எடுத்துரைப்பு ஆய்வாளர் விளாதிமீர் ப்ராப், பிரேமோண்ட், கிரேமோஸ் போன்ற அறிஞர்களின் மொழியியல் உண்மைகளைக்கொண்டு ஆசிரியர் கதையின் உள்ளார்ந்தை அமைப்புகளை விளக்க முற்படுகிறார். குறிப்பாக கிரேமாஸ் (Greimas) திறனாய்வாளரின் நிகழ்ச்சியைக் குறியீடுபடுத்தலில் உள்ள இரண்டு தளங்கள்: 1. வெளிப்படையாகத் தெரியும் எடுத்துரைப்புத் தளம். 2. உள்ளார்ந்து அமையும் தளம். "எடுத்துரைப்பின் அமைப்பியல் பற்றிய புரிதலில் ஓரளவிற்காவது பயிற்ச்யில்லாமல் வாசகர்கள் பனுவலில் சொல்லப்பட்டிருக்கும் இயற்கை மொழிமூலமாக அப்பனுவலுக்குள் இருந்து கதையைக் கண்டுணரமுடியாது" எச்சரிக்கயை மீண்டும் நாம் சந்திக்கிறோம்.
எடுத்துரைப்பியல் பற்றிய கருத்தாக்கங்கள்
எடுத்துரைப்பியலை மதிப்பிட மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் முன்வைத்த அலகுகளைக் குறித்து இப்பகுதி பேசுகிறது. குறிப்பாக மொழியியல் துறை விவாதிக்கிற மொழியின் மேனிலை மற்றும் ஆழ்நிலை அமைப்பு எடுத்துரப்பியலுக்கும் பொருந்தும் எனத் தெரியவருகிறது. லெவிஸ்ட்ரோஸ், கிரேமாஸ் போன்றோரின் அறிவியல் உண்மைகளை தமிழ் நிலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருப்பது சிறப்பு.
ஆழ்நிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது வாய்ப்பாடு அல்லது சூத்திரம் தன்மையது என்பதை உருதிப்படுத்தும் வகையில், மானுடவியல் அறிஞரான லெவிஸ்ட்ரோஸ் தொன்மத்தின் அடிப்படையில் ஆய்வினைமேற்கொண்டு " "எதிர் இணைநிலைகளைக்கொண்டு இயங்குகிற முதுகுடி சார்ந்த படைப்புகளை முழுமையற்ற தன்மைகொண்டவை எனக்காரணம் காட்டி மனித இனம் விலக முடியாது" என முன்வைத்த உண்மையின் அடிப்படையில் கிரேமாஸ் என்பவரின் குறியீட்டுச்சித்திரங்களின் அடிப்படையில் இரண்டுவகையான மிகக்குறைந்த அலகுகளையுடைய எதிரிணைகளை விளக்கியிருக்கிறார்.
மேனிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது கதைச் சுருக்கத்தின் (Plot) பிரச்சினைகளை பேசுவதன் ஊடாக விளக்குதலில் எதிர்கொள்கிற சிக்கல்களை அலசுகிறது. கதை என்பது குறியீடுகளின் தொகுதியான பனுவலிலிருந்து சுருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல், எனவே மொழியியல் வல்லுனர்களுக்கு அது தன்னளவிலேயே புரிய முடியாத புதிர். இந்த ஒரு காரணத்தினாலேயே கதையொன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறபொழுது, இக்கதைச்சுருக்க பிரச்சினையுடனேயே தொடங்கவேண்டியிருக்கிறது. கதையைத் தொடர் நிகழ்ச்சிகளின் பெயர் முத்திரையாக மொழியிலாளர்கள் பார்க்கும் காரணம் இதுதான். ரொலாண்ட் பர்த்தினுடைய ஐந்து வகையான வாசிப்பு முறைகளில் இப் பெயர்முத்திரை வாசிப்பு அணுகு முறையும் ஒன்றெனச் சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் நாம் விளங்கிக்கொள்வது "வாசகர் தமது வாசிப்புத் தளத்தில் தன்னுடைய அறிவுத் தேவைக்கேற்ப ஒரு தலைப்பைக் கதைக்கு அமைத்து கொள்கிறார். வாசிப்பில் முன்னேறிச் செல்ல செல்ல தொடக்கத்தில் இட்ட தலைப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்". கிடைக்கும் வேறொரு சுவாரசியமான செய்தி, "கதைக்கு மாறாக, கதைச்சுருக்கம் கால வரிசைப்படி எழுதப்படவேண்டும், அவ்வாறில்லையெனில் அது கதைச் சுருக்கமாகாது.
நிகழ்ச்சிகள்
"ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுகிற காரியமே நிகழ்ச்சி". இப்பண்பு ஒரு பனுவலில் கதையை உருவாக்கும் ஒரு செயலி. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளே கதையை பனுவலுக்குள் நடத்துகின்றன. இங்கே 'நிலை அமைதி' மற்றும் "இயங்கும் நிகழ்ச்சி" என்கிற இரண்டு சொற்களையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆசிரியர் பனுவலின் கதை நிகழ்வை நிகழ்வுகளின் இயக்கமாக, வெகு எளிமையாக விளக்கிச்சொல்கிறார். அவருடைய மொழியில் சொல்வதெனில் "அடுத்து வருகிற நிலவமைதிகள் வரிசையாக வருகிற நிகழ்ச்சியாக தன்னளவில் வளர்ந்து கொள்கின்றன" இந்நிகழ்ச்சிகள் அவற்றின் செயல்பாட்டளவில் இருவகைப்படுகின்றன. முதலாவது: தமக்கு இணையான வேறொரு மூலத்தை அல்லது தொடக்கத்தை உருவாக்குதல்; இரண்டாவது: ஒரு மூலத்தை அல்லது தொடக்க சம்பவத்தை விரிவு படுத்துகிற கண்ணிகளை பின்னுதல்.
நிகழ்ச்சிகளும் தொடர் ஒழுங்குகளும்
நிகழ்ச்சிகள் இணைந்து ஒழுங்கான தொடர்ச்சிகளாக மாறுவது எப்படி? ஒழுங்கான தொடர்ச்சிகள் எவ்வாறு கதையாகின்றன என்ற வினாக்களை எழுப்பி இரண்டு அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன என்கிறார். ஒன்று: காலம் சார்ந்த தொடர் ஒழுங்கு இரண்டு: காரணகாரிய தொடர் ஒழுங்கு.
காலம் சார்ந்த தொடரொழுங்குவில் "கதைக்காலம் பற்றிய கோட்பாடு மிகச் சிறந்த முறையில் காலவொழுங்கோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே இது "கதையினுடைய எதார்த்தமான பன்முகப்பட்ட பண்பினை மாற்றி அந்த இடத்தைப் பதிலீடு செய்கிறது. இவ்வாறு செய்வதன்மூலம் போலியான ஓர் இயல்புத் தன்மையை ஏற்படுத்துகிறது".
காரண காரிய தொடரொழுங்கில் 'அதுவும் அதற்குப் பிறகும்' என்ற காலம்சார்ந்தும் 'அது ஏன் அல்லது அது ஏனென்றால்' என்ற காரணகாரியத்தோடும் தொடர்ச்சி நிகழ்கிறது.
மிகக்குறைந்த அளவிளான கதை:
மேற்கண்ட இரண்டினுள் எது கதையை முன் நகர்த்துகிறது என்ற கேள்வி ஒரு புறமிருக்க பேராசிரியர் பிரின்ஸ் என்பவரின் மற்றொரு ஆய்வுக் கருத்தையும், நிகழ்ச்சிகளை முன்வைத்து இங்கே நினைவூட்டுகிறார். அது மிகக்குறைந்த அளவிளான கதை என்ற கருத்தியம்: உ.ம். 1. அவன் பணக்காரனாக இருந்தான்; 2. பிறகு நிறைய பணத்தை இழந்தான்; 3. அதன் விளைவாக அவன் ஏழையாகிவிட்டான். . இக்கருத்தியம் மூன்று காரணிகளால் உருவானது: 1. காலத்தொடர்ச்சி 2.காரண காரிய உறவு 3. தலைகீழ் மாற்றம் இம்மூன்றும் காரண காரிய உறவோடு கூடிய அணுகுமுறைக்கு ஒரு முழுமைத் தன்மையை வழங்குபவை.
நிலையான அலகுகளும் செயற்கூறுகளும்
நிலழ்வுகளின் பொது அலகை கண்டறிய ரஷ்ய அறிஞர் விளாடிமீர் ப்ராப் , அந்நாட்டின் வனதேவதை கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அதில் அவர் அறியவந்த உண்மை, தனிக்கதைகளுக்கு இவைதான் காரணமென சுட்டப்படும் தகுதிகொண்ட நிகழ்வுகளும், நிரந்தரமற்ற பிற காரணிகளும் சேர்ந்தே நிலையான அலகுகளை கட்டமைக்கின்றனவென்றுகூறி, தனிக்கதைகளை வடிவமைக்கிற இந்நிலையான அலகுகளை செயல் கூறு என அழைத்தார்.
விளாடிமீர் நிகழ்ச்சியின் செயற்கூறுகளை இருவகையில் பொருள்கொள்கிறார். "செயற்கூறு என்பது எந்த ஒன்றிலும் முழுமையாக செயல்படும் முறையியல்மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளுகிறது", அடுத்ததாக "செயற்கூறு மற்றவையோடு கொள்ளுகிற உறவானது வெவ்வேறுபட்ட அளவை உடையது என்ற முறையில் இயங்கி அதன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுகிறது. பிராப்பின் முடிவுகள் நான்கு :
1. கதை மாந்தர்களின் செயல்பாடுகள் எப்படி, யாரால் நிறைவுற்றன என்பவைபற்றி பொரு படுத்தாமல், அவைகள் ஒரு கதையில் நிலையான கூறுகளாக அமைந்துள்ளன.
2. வனதேவதை கதைகளில் அறியப்படும் செயற்கூறுகளின் எண்ணிக்கை அள்விடக்கூடியதாகும்.
3. செயற்கூறுகளின் வரிசை முறை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாகும்.
4. வனதேவதை கதைகளின் அமைப்பைபொருத்தவரை எல்லா கதைகளும் ஒரே மாதிரியானவை
விளாடிமிர் முடிவை கட்டுரை ஆசிரியர் இப்படி சுருங்க உரைக்கிறார்: "கதையில் ஒரு செயற்கூறு மற்ற செயற்கூறுக்குத் தானாகவே இயங்கிச்செல்கிறது. ஒவ்வொரு செயற்கூறும் இரண்டு மாற்றுக்கூறுகளையும் இரண்டு திசைகளையும் தொடங்கிவைக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கதை உருவாக்கம் நிகழ்கிறது."
விளாடிமிரைத் தொடர்ந்து அவர் வழியில் கதை நிகழ்வுகளில் ஆய்வினை மேற்கொண்டவர் பிரெஞ்சு மொழியியல் அறிஞர் குளோது பிரேமோன் (Claude Bremond): " எல்லா வரிசைமுறைகளும் வளர்கின்றன அல்லது கெட்டுவிடுகின்றன" "ஒரு வளர் நிலையிலான வரிசைமுறை பற்றா குறையினாலோ அல்லது சமநிலை இன்மையினாலோ தொடங்குகிறது.
இறுதியாக பேராசிரியர் இக்கட்டுரையில் ( கதையும் நிகழ்ச்சியும்) "ஒரு தெளிவான முறையியலை இதுவரை அமைக்க முடியவில்லை " என முடிக்கிறார். பிறதுறையில் வேண்டுமானால் எடுத்துரைப்பு நிகழ்வினைப்பற்றிய ஆய்வுகள் ஒரு தெளிந்த முடிவினைக்கொடுத்திருக்க வாய்ப்புண்டு. (இதுவரை பிற துறைகளை, ஆய்வுக்கு மொழியியல் அறிஞர்கள் அதிகம் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை) கதை சார்ந்த தளத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். காரணம் இக்கட்டுரையின் இடையில் சொல்லப்பட்டதுபோல கதைசொல்லும் பிரபஞ்ச நிருவாகத்தில் இருவகையான சட்டங்கள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அவை புரியாததும் புதிருக்குரியதுமான மொழியில் சொல்லப் பட்டுக்கொண்டிருப்பதும்.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.