- இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி -
பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் "கதையும் கதைமாந்தர்களும் - கதை மாந்தர்கள் உருவாக்கமும்" ஆகியவற்றைப்பற்றி இப்பகுதியில் காண்போம். இத்தொடரை எழுத பேராசிரியர் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் இப்பகுதியிலும் பிரதிபலிக்கின்றன. பிற துறைகளைப்போலவே மொழித்துறையிலும் இலக்கியத்திலும் மேற்கத்தியர்கள் ஓடிக்கொண்டிருக்க நாம் நொண்டிக்கொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கிறவர்கள் இடறி விழமாட்டார்கள் என்பதென்ன நிச்சயம்? கதைமாந்தர்களைப் பற்றிய பார்வைகளில் குறையிருக்கலாம். ஆனாலும் நொண்டுபவனைக் காட்டிலும் ஓடுபவன் கூடுதல் தூரத்தில் இருக்கிறான். எல்லையைத் தொட்டு மீண்டும் ஓடுகிறான். அதன் தொடர்ச்சிதான் எடுத்துரைப்பு குறித்த ஆய்வு முடிவுகள், எதிர்வினைகள். நவீன கதையாடல்கள் - (குறிப்பாக மேற்கத்திய நாடுகளில்) அவர்களின் கருத்தியங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் இன்றிருப்பதும் அதற்குக் காரணம்.
1. கதையும் கதைமாந்தர்களும்
எப்பொழுது கதையென்று ஒன்றை சொல்லநினைத்தோமோ அப்பொழுதே கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிட்டார்கள். ஒரு சும்பவத்தை விவரிப்பதற்கு ஒரு மையப்பொருள் தேவையாகிறது அப்பொருள்சார்ந்த நடவடிக்கைககள் தேவையாகின்றன. கதை மாந்தர்கள் நடவடிக்கைகளே கதையை ஆரம்பிக்கவும், முன்னெடுத்து செல்லவும், முடித்துவைக்கவும் உதவுகின்றன. அந் நடவடிக்கைகளைக்கொண்டு கதைமாந்தர்களைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர்கள் நல்லவர் அல்லது கெட்டவர் என கடந்த காலத்தில் (தொன்ம இலக்கியங்களில்) உறுதிபடவும், தற்போதைக்கு (நவீன இலக்கியத்தில்) இவை இரண்டுமான தெளிவற்றதாகவும் அப்புரிதல் இருக்கிறது. க.பஞ்சாங்கத்தின் கதைமாந்தர்களைப்பற்றிய கட்டுரையின் சாரத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்பாக கதை மாந்தர்கள் ஏன்? நேற்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்களுக்கான இடமென்ன? இன்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்கள் இன்னமும் முக்கியம் பெறுகின்றனரா? என்பதைக்குறித்த குறைந்த பட்ச புரிதல் நமக்கு கட்டாயமாகிறது.
ஒரு பெருங்கதையோ, சிறுகதையோ; பண்டைய காவியமோ அல்லது நவீன இலக்கியமோ எதுவாயினும் 'கதை மாந்தர்கள்' எனப்படுவோர் மனித உயிர்கள். அல்லது விலங்காக, பொருளாக இருப்பினும் கதையின் நகர்வுக்கு முக்கியப்பங்கினை அளிப்பவர்கள். வாசகர்கள் அவர்களை அடையாளப்படுத்த முடியும். புதினத்தை வாசிக்கிறபோது திரும்பத் திரும்ப இடம்பெறுகிற பெயர்கள், வாசித்து முடித்த பின்பு அக்கதையோடு சொடர்புபடுத்திச் சொல்ல முடிகிற பெயர்களைக் 'கதை மாந்தர்கள்' எனக் கூறலாம். அவர்களை அடையாளப்படுத்த பெயர், வயது, பாலினம், சமூகப் பின்புலம், அவ்ர்களின் கட,ந்த காலம், தற்போதைய நிலை போன்ற தகவல்கள் கதையிலிருந்து கிடக்கின்றன. இத்தகவல்கள் அம்மனிதர்களின் புற அக கட்டமைப்பை வடிவமைக்கின்றன. அடுத்து நீங்கள் நாவலை சிறிது கவனமெடுத்து வாசிப்பவரெனில் இத்தகவல்களை படைப்பாளிகள் இருவகையில் தருகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்:
நேர்முகச் சித்திரம்: இங்கே படைப்பாளி கதை மாந்தரின் உடற் தோற்றம் மற்றும் உளம் சார்ந்த கூறுகளுக்கு முடிந்தவரை ஓர் முழுமையான வடிவத்தை அளிக்கிறார். இத்தகவல்களை அவர் ஒரு கதைசொல்லியைக்கொண்டோ அல்லது அதே கதைமாந்தரைக்கொண்டோ அல்லது வேறொரு கதைமாந்தர் மூலமாகவோ தெரிவிப்பது வழக்கம்.
மறைமுகச் சித்திரம்: இங்கே சம்பந்தப்பட்ட கதைமாந்தரின் பேச்சுகள், செயல்பாடுகள், அவரது வாழ்க்கையின் ஒரு கண நேர காட்சிகள் கதை மாந்தர் யார் என்பதை கோடிட்டுக் காட்டும். இங்கு வாசகன் ஆற்றலை படைப்பாளி வேண்டுகிறார். முதற் சித்திரத்தைப்போலன்றி இங்கே படைப்பாளியின் எண்ணத்திற்கு மாறான ஒரு கற்பனை வடிவத்தை வாசகர் கட்டமைக்க இது பெரிதும் உதவுகிறது.
பொதுவாக கதை மாந்தர்கள் இருவகைப்படுபர். முக்கிய பாத்திரங்கள் துணை பாத்திரங்களென அவர்களின்பங்களிப்பினை வைத்து அடையாளப்படுத்தமுடியும். அடுத்ததாக செயல்களின் அடிப்படையில் கதைமாந்தர்கள் மதிப்பிடப்படுவதால் பிரெஞ்சில் 'actant ' என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது, ஆங்கிலத்தில் 'agent' என்ற பொருளில். அதாவது 'செயலர்' என்று தமிழில் பொருள் கொள்ளலாம். ஆனால் இந்த செயல்கள் கொண்டு தொன்ம இலக்கியங்களில் நடைபெற்றதுபோல கதைமாந்தர்களை இன்றும் தீர்மானிக்க முடியுமா என்று கேள்வி. இன்று பிரெஞ்சில் மரபான முறையில் சொல்லப்பட்ட ஒற்றைகுணங்கொண்ட (personnage monolithique அல்லது manichéen) கதைமாந்தர் இல்லை. இன்றைய கதைநாயகன் எதிர் நாயகப் பண்பையும் கொண்டவன். திட்டவட்டமாக அவனை நல்லவன் அல்லது கெட்டவன் எனத் தீர்மானிக்கமுடியாது.
"தற்கால அழகியல் கோட்பாட்டில் கதையில் வரும் நிகழ்ச்சிகளைப்பற்றியும், அந்நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளைப்பற்றியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த அளவிற்கு கதைமாந்தர்களைப்பற்றிய ஆராய்ச்சி இல்லை. எனவே தற்கால அழகியல் கோட்பாட்டில் கதை மாந்தர்களைப்பற்றிய கோட்பாட்டை உருவாக்குவது என்பது இன்னும் சவாலாகவே தொடர்கிறது. எனவே இந்த இயலில் இது ஏன் அவ்வாறு நிகழ்கிறது? என்பதையும் ஓரளவு சுட்டிக்காட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது." (ந.இ.கோ. பக்கம் 164) என்கிறார் பேராசிரியர்.
கட்டுரையின் தொடக்கத்திலேயே கதைமாந்தர்கள் எங்கனம் நமது சமூகத்தில் சாகாவரம் பெற்றிருக்கின்றனர் என்பதை இரண்டு உதராணங்கள் மூலம் காட்டுகிறார். முதலாவது, ஒரு திரைப்பட உரையாடல்:
"பத்தினிபெண்ணுக்கு உதாரணமாக ரெண்டுபேரக்கூறு"
கண்ணகி நளாயினி,
"ஏன் ஒங்க அம்மாவும் ஒம் பொண்டாட்டியும் பத்தினியில்லியா"
அடுத்து வரும் உதாரணத்தில் இடைக்கால புலவன் ஒருவன், படைப்புக் கடவுளாகக் கருதப்படும் பிரம்மாவிற்கே சவால் விடுகிறான், "பிரம்மா! நீ படைத்துவிடும் உயிர்கள் பட்டுவிடும் ; அழிந்துவிடும் ; ஆனால் நாங்கள் உருவாக்கிவிட்ட கதை மாந்தர்கள் என்றும் அழிவதில்லை; உனக்குத் தெரியுமா" என்று அப்புலவன் கேட்பதாகச் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து, "இந்த அளவிற்கு மொழியாலான இலக்கியமெனும் புனைவுலகில் கதை மாந்தர்கள் உருவாகி மானுட வாழ்வின் ஊடே சாகாமல் வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் அவர்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள்; அத்தகைய கதைமாந்தர்களை நவீனத் திறனாய்வு கேள்விக்கு உட்படுத்துகிறது." என்று முடிக்கிறார்.
கட்டுரை ஆசிரியரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மனநிலையில் நவீனத் திறனாய்வாளர்களின் கேள்விகள் சங்கடப்படுத்தவே செய்யும். நவீன இலக்கியங்களின் அடிப்படையில், மொழியியல் வல்லுனர்களின் கதைமாந்தர்களைப்பற்றிய கருத்தாக்கங்களைப் பகிர்ந்துகொள்கிற க.பஞ்சாங்கம், அவரும் ஒரு திறனாய்வாளர் என்றவகையில் சில நியாயமான கேள்விகளையும் எழுப்புகிறார். மேற்கத்திய ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதன் அடிப்படையில் பேராசிரியர் எழுப்பும் கேள்விகளென்ன என்று பார்ப்போம்.
கதை மாந்தரின் மரணம்:
ரொலான் பர்த், டி.எச். லாரன்ஸ், வெர்ஜினா வுல்•ப், ஹெலென் சிக்சு மற்றும் கல்லர் ஆகியோரின் கருத்துக்களை க.பஞ்சாங்கம் எடுத்தாண்டிருக்கிறார்.
"தற்கால நாவல்களில் சிறிது சிறிதாக மறைகின்றது என்னவென்றால் , நாவலுக்கேயுரியனவாக உருவான புதிய புதிய கூறுகள் அல்ல; மாறாக அதன் கதை மாந்தர்கள் தாம்; கதை மாந்தர்களின் பெயர்கள் தாம்" - பர்த் (ந.இ.கோ. பக்கம் 164).
"தான் என்பது எப்பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கிறது; பன்முகப்பட்டதாகப் பிரிந்து போகும் படியாக இருக்கிறது; ஒரு கட்டத்தில் சமூகத்தில் இருக்கும் எல்லாமுமாகவும் வாழ்கிற திறமை மிக்கதாகவும் இருக்கிறது; ஒரு குழுவாக இயங்குகின்ற தன்மையுடையதாகவும் இருக்கிறது" - ஹெலென் சிக்சு.
" தனி மனிதனைப் புறந்தள்ளி மீறுகின்ற புதிய மரபிற்கு அழுத்தம் கொடுக்கும்போது புதிதாக ஒரு தளம் உருவாகின்றது . இந்தத் தளத்தில் தனிமனிதனின் சாரத்தைவிட நிகழ்ச்சிகளும் அதன் ஆற்றல்களும் ஒன்றிணைகின்றன. இந்த ஒன்றிணைவு, நாவலில் வெற்றிகரமான உயிருள்ள கதைமாந்தர்களென்றும், இக்கதை மாந்தர்கள் முழுமையாகத் தனித்து இயங்குபவர்கள் என்றும், கதைமாந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மரபார்ந்த நடைமுறைகோட்பாடுகளை எல்லாம் மறுத்து விடுகிறது. இந்நிலையில் அமைப்பியல் வாதிகளின் பார்வையில் கதைமாந்தர்கள் பற்றிய கோட்பாடு என்பது வெறுமனே ஒரு புராணம்தான் எனக் கருதப்படுகிறது. -கல்லர் (Culler)
கதைமாந்தர் இறப்புகுறித்து க.பஞ்சாங்கம் எழுப்பும் கேள்வி:
"மேலே கூறியபடி கதை மாந்தர் என்பவர் இறந்துவிட்டாரா? இந்தப்புதிய அணுகுமுறை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இல்லாமலாக்கிவிட்டதா? அல்லது கதைமாந்தர்கள் பற்றிய மரபார்ந்த சில கோட்பாடுகளைமட்டும் கவசம் அகற்றுவதுமாதிரி அகற்றிக் காட்டுகிறதா? இந்தப் புதியகோட்பாடுகளை முன்வைத்து ஏற்கனவே ஏற்றுக்கொள்ளபட்ட சிலகதைமாந்தர்களை விட்டுவிடவேண்டியதுதானா ? சான்றாக இளங்கோ அடிகளின் கண்ணகி என்ற கதைமாந்தர் வெறுமனே சில வார்த்தை வெளிப்பாடுதானா? ..... தற்கால புனைகதைகளில் கதைமாந்தர் இறந்துவிட்டார் என்பதை ஒத்துக்கொண்டாலும், பின்னோக்கி நகர்ந்து பார்க்கும்போது சென்ற நூற்றாண்டு இலக்கியங்களில் வந்துபோகும் கதை மாந்தர்களை என்ன செய்வது? கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை...குசேலர், கண்ணன் முதலிய கதை மாந்தர்களை கொன்று விடமுடியுமா? "
திறனாய்வாளரான நண்பருக்குள்ள கேள்விகள் நமக்கும் எழக்கூடியதுதான். முதலில் திறனாய்வாளர்கள் கண்டறிகிற உண்மைகளை அல்லது அவர்களின் ஆய்வு முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொண்டதாக வரலாறு இருக்கிறதா? ரொலான் பர்த் பிறந்த நாட்டிலேகூட இன்னமும் நேற்றைய கதைமாந்தர்கள் பலர் உயிர்ப்புடன்தான் உலவுகிறார்கள். பத்தாண்டுகள் கழிந்த பிறகுங்கூட தமிழகத்தைச் சேர்ந்த ஆண்களை அழைத்து "பத்தினிப் பெண்ணுக்கு உதாரணமாக இரண்டுபேரக்கூறு!" எனக்கேட்டால் "கண்ணகி நளாயினி" என்றுதான் பதில் வரும். திறனாய்வாளர்களின் முடிவின் காரணமாக இப்பெயர்கள் தங்கள் செல்வாக்கை இழந்துவிடாது. ஆனால் அதே வேளை இன்றைய படைப்பாளிக்கு ஒரு "கண்ணகியையோ நளாயினியையோ" அல்லது பேராசிரியர் சொல்வதைப்போல இராமன் சீதை வரிசையில் கதைமாந்தர்களை உருவாக்கவும் இயலாது. கடந்த காலத்தில் சமயங்களின் பின் புலத்தில் எழுதப்பட்டவை அநேகம். எனவே கதைமாந்தர்கள் அவதாரப் புருஷர்கள் அல்லது அசாதரணமனிதர்கள். அவர்கள் தெய்வப்பிறவிகள் அல்லது அபூர்வ மனிதர்கள். நம்மில் ஒருவரல்ல என்ற எண்ணம் சமூகத்திற்கு இருந்தது. அவர்கள் ராமனாக இருப்பார்கள் இல்லையெனில் இராவணனாக இருப்பார்கள். சீதையாக இருப்பார்கள் அல்லது சூர்ப்பனகையாக இருப்பார்கள்.கோவலன் கண்ணகியைப் பிரிகிற தவறு நிகழ்ந்தாலும் அது கோவலன் குற்றமன்று முன்வினைப்பயன். இன்றைய படைப்பாளிகள் அப்படி எழுதமுடியாது. அசாதரண மனிதர்கள் இன்றில்லை. படைத்தாலும் நம்பத் தயாரில்லை. இன்று எவனையும் தருமன் அரிச்சந்திரன் என்று சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. ஹெலென் சிக்சு கூறுவதைப்போல இன்று 'தான் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கிறது; ஒரு கட்டத்தில் எல்லாமுமாககவும் வாழ்கிறத் திறமை மிக்கதாகவும் இருக்கிறது. ஆக நவீன இலக்கிய திறனாய்வாளர்களின் ககருத்தாக்கத்தில் உண்மை இல்லாமலில்லை.
கதை மாந்தர்களின் இருப்புமுறை : இரண்டு சிக்கல் - உயிருள்ள மக்களா அல்லது வார்த்தைகளா?
இப்பகுதியில் மேற்கண்ட கேள்விக்கு எதார்த்தவாதிகள் குறியீட்டாளர்கள் இரு தரப்பினர் கருத்துக்களையும் முன்னிறுத்தி கட்டுரை ஆசிரியர் தமது கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
"......கதைபாத்திரத்தின் இருப்பை வலியுறுத்தும் எதார்த்தவாதிகள் தங்கள் விவாதத்தை இப்படி முன்வைக்கின்றனர்; அதாவது கதையின் செயல்பாட்டின் போக்கில் கதைப் பாத்திரங்கள் உருவாகி விடுகின்றன என வலியுறுத்துகின்றனர். நிகழ்ச்சிகளிலிருந்து கதைபாத்திரம் ஒரு விதமான சுதந்திரமான நிலைபாட்டினை மேற்கொள்கின்றது. எனவே சூழலிலிருந்து கொஞ்சம் விலகி நின்று கதை பாத்திரங்களைப் பற்றி விவாதிக்க இடம் இருக்கிறது". -மார்வின் முட்ரிக்
"குறியியல் திறனாய்வாளர் பார்வையில், கதைபாத்திரங்கள் தங்களுக்கான முக்கியத்துவத்தையும் தாங்களே மையமென்ற தகுதியையும், தங்களைப்பற்றிய மரபார்ந்த வரைமுறைகளையும் இழந்து விடுகின்றன. இவ்வாறு இழந்துவிடுவது என்பது கதைமாந்தர்களைச் சடப் பொருளாக உருமாற்றம் செய்துவிடுகிறது என்பதல்ல பொருள்; .........உண்மையில் கதைமாந்தர்கள் பனுவலாக்கப்படுகிறார்கள் என்பதுதான். ஒரு முடிவற்ற பனுவலின் இடைப்பட்ட ஒரு பகுதியாக இருக்கும் கதைபாத்திரங்கள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப வரும் அமைப்புகளாகவும் தொடர்ந்து மற்ற தலமை கருத்துகளோடு இணைந்து பனுவலுக்கான சூழ்நிலைகளை மறுருவாக்கம் செய்துகொள்ளும் திறம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றன. இவ்வாறு குறியியல் திறனாய்வாளரின் பார்வையில், கதை மாந்தர்கள் பனுவலுக்குள் கரைந்துவிடுகிறார்கள்." -வீன்ஸீமர்
மேற்கண்ட இருதரப்பு கருத்துகள் குறித்து கட்டுரை ஆசிரியர் என்ன சொல்கிறார்:
"போலசெய்தல் கொள்கையில்(இப்போலச் செய்தல் கொள்கை, இலக்கியம் என்பது ஏதாவது ஒரு கோணத்தில் எதார்த்தத்தைப்போலச் செய்வது எனக் கருதுகிறது) கதைமாந்தர்கள் உயிருள்ள மக்களுக்கு இணையாக வைக்கப்படுகின்றனர். ஆனால் குறியியல் கொள்கையில் கதை மாந்தர்கள் பனுவல் உருவாக்கத்திற்குள் கரைந்து விடுகின்றனர். இவ்வாறு இரண்டு அணுகுமுறைகளும் இரண்டு வேறுபட்ட கோணங்களிலிருந்து அணுகினாலும் சிறப்பாக புனைகதைகளுக்கேயுரிய கதைமாந்தர்களின் தனித் தன்மையினை ஒழித்துக்கட்டிவிடுகின்றன. இந்நிலையில் கதைமாந்தர்கள் பற்றிய ஆய்வினைக் கைவிட்டுவிட வேண்டியதுதானா? கைவிடமுடியாது என்றால் இரண்டு அணுகுமுறைகளையும் தள்ளிவிடவேண்டியதுதானா? அல்லது வேறொரு புதிய அணுகுமுறையைத் தேடிச் செல்வதா? அந்தப் புதிய அணுகுமுறை எதிரெதிராக இருக்கும் இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கு நடுவே இருந்து தோன்றிக் கதைமாந்தர்களுக்குரிய இடத்தை அங்கீகரிக்குமா? இவ்வாறு ஒரே நேரத்தில் கதை மாந்தர்களை உயிருள்ள மனிதர்களாகவும்(முதல் அணுகுமுறை), அமைப்பின் ஒரு கூறாகவும்(இரண்டாவது அணுகுமுறை) காண்பது சாத்தியம் தானா?" எனக்கேட்டு சாத்தியம்தான் என்கிற ஆசிரியர் (க.பஞ்சாங்கம்). அப்பதிலை சாட்மன் என்பவர் கூற்றோடு உறுதிபடுத்துகிறார்.
இரண்டு தரப்பு வாதமும் சரியானவை அல்லது தவறானவை. எழுத்தென்பதே கற்பனை என்பதைக் கடந்து படைப்பாளியின் சுயசரிதையாக, சொந்த வாழ்க்கையாக அல்லது அவனது வாழ்க்கை அனுபவமாக உள்ள இன்றைய படைப்புலக கதைமாந்தர்களை மையப்பொருளாகக் கருதும் சூழலே நிலவுகிறது. ஆனால் புனைவு என்ற சொல் காரணமாக அது குறியீடுகளால் நிரப்பப்படுகிறதென்பதும் உண்மை, எனவே பனுவலின் ஒரு பகுதியாக கரைந்துவிடும் அபாயமும் உள்ளது. பொதுவில் ஒன்றிரண்டு திறனாய்வாளர்கள் தங்கள் நுண்ணறிவினால் முன்வைக்கிற கருத்துகள் வாசகர்ப் பெருங்கடலில் கரைத்த பெருங்காயம். கதை மாந்தர்களில் தன்னை இனம் காணும் சராசரி வாசகர் மனப்பாங்கினை (இது குறித்தும் விமர்சனங்களுண்டு) அத்தனை எளிதாக ஒதுக்கிவிடமுடியாது.
இருத்தல் அம்ல்லது செய்தல்:-
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கதைமாந்தர்களை செயலர்கள் என வர்ணிக்கப்படுகிறார்கள் எனக் கூறியிருந்தேன். அவர்களை அவ்வாறு செயலுக்குள் அடக்குவது சரிதானா? என்ற மற்றொரு கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. பிராப் என்பவரின் கருத்துப்படி கதைமாந்தர்களை ஏழு செயல்களின் கீழ் அடக்கமுடியுமென்றும், மாறாக கிரோமாஸ் என்பவரின் கூற்றுப்படி செயல் எண்ணிக்கையில் அடங்காததென்றும், செயலர் ஆறுவகைப்படுவர் எனவும் அறிகிறோம். சில அமைப்பியல்வாதிகள் செயல்பாட்டிற்கும் கதைமாந்தர்களுக்கும் இடையிலான படிநிலையைத் தலைகீழாக மாற்றுவதற்கான வாய்ப்புகளைபற்றியும் சிந்தித்துள்ளனர் என்கிற தகவலும் கிடைக்கிறது. இங்கே •பெரெரே என்பவரின் கூற்று முக்கியமானது:
"புனைகதையில் கதைமாந்தர்கள் அமைப்பியல் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். புனைகதையில் பேசப்படும் பொருளும், நிகழ்ச்சிகளும் ஒரு முறையிலோ அல்லது பல்வேறு முறையிலோ எடுத்துரைப்பில் நிலைகொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் கதைமாந்தர்களே. உண்மையில் கதைமாந்தர்களோடு மேற்கண்டவைகள் உறவுகொள்ளும்போதுதான் எடுத்துரைப்பினை அர்த்தமுள்ளதாகவும், புரிந்து கொள்ளத்தக்கதாகவும் ஆக்குகிற ஒத்திசைவுப் பண்பும், நம்பகத்தன்மையும் பனுவலுக்கு ஏற்படுகிறது"- ( ந.இ.கோ. பக்கம் 173)
நிகழ்ச்சியா கதைமாந்தரா? இவ்விவாதமும் நெடுநாளாக எழுப்பப்ட்டுவருகிற ஒன்று. கட்டுரை ஆசிரியர் சிறப்பனதொரு பதிலை அளித்திருக்கிறார்.
" எடுத்துரைப்பில் இந்த இரண்டில் ஒன்றை முழுமையாக முதன்மைபடுத்திபேசுவதைவிட எடுத்துரைப்பின் பல்வேறுவகைகளுக்கு ஏற்ப இவைகளில் ஏதோ ஒன்று ஒப்பீட்டளவில் ஒரு எடுத்துரைப்பில் முதன்மை இடத்திலும், மற்றொரு எடுத்துரைப்பில் இரண்டாவது இடத்திலும் மாறிமாறி இயக்கம் கொள்ளுகின்றன எனக் கருதுவது பொருத்தமாகப் படுகிறது. "
கதைமாந்தர்கள் உயிருள்ள மக்களா? அல்லது வெறும் சொற்களா? என்று தீர்மானிக்கிற பொறுப்பை வாசகர்களிடம் ஒப்படைக்கலாம் என இதற்குமுன்பாகத் தெரிவித்ததைப்போல செயல்பாடா கதைமாந்தரா யாரை மையப்படுத்துவது, அல்லது யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற கேள்விக்கு கட்டுரை ஆசிரியர் " வாசகர்களின் பார்வையில் இந்த விவாதத்தை அணுகும்போது நடுநிலையான ஒரு அணுகுமுறையே பொருத்தமெனப்படுகிறது" (ந.இ.கோ. பக்கம் 175) என்கிறார்.
பனுவலுக்குள் இருந்து எவ்வாறு கதைமாந்தர்கள் மறுவுருவாக்கம் செய்யப்படுகிறார்கள்
"வாசித்தல் என்பது பெயர் சூட்டுவதற்கான ஒரு போராட்டமே. பனுவலிடைய எழுவாயைக் குறியீட்டுப்பொருளாக உருமாற்றம் செய்வதற்கான ஒரு போராட்டமே. இந்த உருமாற்ற செயல்பாடு ஒழுங்கற்றது; பல தவறுடையது; வேறுபட்ட பல பெயர்களுக்கு நடுவே எந்தப் பெயரைக்கொள்வது என்று பல தடுமாற்றம் உடையது" -என்ற சாட்மனின் கூற்றோடு இப்பகுதி தொடங்குகிறது.
இக்கூற்றும் இதைத் தொடர்ந்து வைக்கப்படும் விவாதமும் நவீன இலக்கியத்திற்குங்கூட ஓரள்விற்குத்தான் பொருந்தும். இத்தலைப்பின் தொடக்கத்தில் இன்றைய கதைமாந்தர் தனிப்பண்பு அல்லது ஒற்றைகுணம் கொண்டவரல்ல என்பதைக் கண்டோம். அவ்வாறே கூற்றில் இடம்பெறும் 'வாசித்தல்' என்ற சொல் வாசிக்கிற காரியத்தில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும். படைப்பாளியும் ஒருவகையில் தனது படைப்பை தனக்குத்தானே வாசித்தலாகவும் பொருள்கொள்ளலாம். ஒரு படைப்பாளி படைப்பில் கதைமாந்தருக்குப் பெயர்சூட்டுவது வாசகனுக்கு உதவ அதாவது வாசிப்பு சௌகரியத்தை ஏற்படுத்தித்தர. "கதைமாந்தர்களுக்குப் பெயரிடுதல் என்பதானது ஆளுமையின் தனிக்குணத்திற்குப் பெயர் சூட்டுதலாகும்" என்கிற சாட்மனுக்கு, தனிக்குணங்களே எடுத்துரைப்பு அடைகள் (adjectives) எனத் தெரியவருகிரது. அதற்கு உதாரணமாக நமது காப்பியங்கள், இதிகாசங்களிலிருந்து 'கண்ணகி கற்புக்கரசி'; 'கர்ணன் கொடைவள்ளல்'; 'கூனி சூழ்ச்சிக்காரி' போன்ற தனிமாந்தர்கள் உருவானதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இவையெல்லாமே தொன்ம கதைசொல்லலில் வருவன. நவீன இலக்கியங்களில் தனிப்பண்புடைய கதைமாந்தர் இல்லையென்பது அறியத்தக்கது. "கதைமாந்தர் என்பது பனுவலின் ஒரு கூறு என்ற நிலையிலிருந்து கருத்தியல் சார்ந்த ஒரு தனிக்குணமென எப்பொழுதும் நடப்பதில்லை" என்ற கட்டுரை ஆசியரின் கூற்று இங்கே கவனிக்கத்தக்கது.
பார்ஸ்டர் கதை மாந்தர் விளக்கம்
அடுத்ததாக பார்ஸ்டர் மற்று ஈவன் ஆகியோரின் கதைமாந்தர்பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.இவற்றைப்பற்றி பெரிதாகச்சொல்ல ஒன்றுமில்லை என்பதால் நண்பர்களுக்குத் தகவல்களாக அவற்றைத் தந்திருக்கிறேன்.
கதைமாந்தர்கள் ஒருகதையில் திரும்பத் திரும்ப வருகிறவர்கள் அல்லது அடிக்கடி பனுவலில் குறுக்கிடும் பெயர்கள். பனுவலில் இடம்பெறும் பல்வேறுபட்ட கதைமாந்தர்களை பார்ஸ்டர் இருவகையாக பிரித்திருப்பதையும் அதற்கான காரணத்தையும் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்,
அவை 1. வளரும் கதைமாந்தர் 2. வளராக் கதைமாந்தர்.
1.வளராக் கதைமாந்தர்கள்: கேலி, கிண்டல் நையாண்டிகுணத்துக்குச் சொந்தக்காரர்கள் இம்மாந்தரின் தூய்மையான வடிவம் ஒரு தனிப்பட்ட கருத்து அல்லது பண்பை படைக்கிறபோது வெளிப்படுமாம். தவிர இக்கதைமாந்தரை ஒரேயொரு வாக்கியத்தில் விளக்கிடமுடியுமாம். கதையின் போக்கில் வளர்ச்சி அடையா கதைமாந்தர்கள் இவர்கள் என்கிறார் ஆசிரியர். இகதைமாந்தர்களின் செயல்பரப்பு குறுகிய எல்லையைக் கொண்டிருப்பதும், வளர்ச்சியின்மையும், அவர்களை நம்மால் எளிதாக நினைவில் நிறுத்த முடியும் என்கிறார்கள்.
வளரும் கதை மாந்தர்கள்: மேற்கண்ட பண்பிற்கு எதிரானவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்டிருப்பவர்கள். கதைப்போக்கில் வளர்ச்சி அடைபவர்களாகவும் விளங்குவார்கள்.
பார்ஸ்டருடைய கதைமாந்தரில் உள்ள குறைகளையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை:
முதலதாக பார்ஸ்டர் பயன்படுத்தும் வளரா என்ற சொல் கதைமாந்தர்களிடம் ஆழமுமில்லை, உயிரோட்டமுமில்லை எனக் கருத்தை வைக்கிறது ஆனால் பார்ஸ்டரின் கூற்றுக்கு மாறாக டிக்கன்ஸனுடைய பல நாவல்களில் வளரா கதைமாந்தர்கள் பெரிதும் உயிரோட்டம் உடையவர்களாகவும் ஆழம்மிக்கவர்களாகவும் விளங்கிறார்கள் என்கிறார் கட்டுரை ஆசிரியர்.
இரண்டாவதாக வளரும் கதை மாந்தர் வளராக் கதைமாந்தர் எனப்பிரிப்பதால் கதைமாந்தர் பற்றிய சிக்கல்கள் பெரிதும் எளிமைபடுத்தியதுபோலாகிறது என்கிறார்.
ஈவன் கதை மாந்தர் விளக்கம்:
பார்ஸ்டரின் குறைகளைத் தவிர்க்க ஈவன் இப்புதிய பிரிவினையை கதைமாந்தருக்கு அளித்ததாக தெரியவருகிறது. அவர் இதனை ஒரு தொடர் நிகழ்வாக குறியீடு செய்து வகைமைப் படுத்துகிறார்.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.