தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக்கோட்பாடுகள் என்பதை அடுத்து க.பஞ்சாங்கத்திண் பெண்ணியல் சார்ந்த கட்டுரை வரிசைகளில் முக்கியத்துவம் பெறுவது பெண்-மொழி- புனைவு. இதே பெயரில் கட்டுரை ஆசிரியரின் நூலொன்றும் வந்துள்ளதாக, நவீன இலக்கிய கோட்பாடு நூல் நமக்குத் தெரிவிக்கிறது
பெண்-மொழி-புனைவு
பெண்பற்றிய கற்பிதம் பிற கற்பிதங்களைப்போலவே 'மொழி-புனைவு' என்கிற இரு காரணிகளின் சேர்க்கையால் உருவானது என்பது ஆசிரியரின் கருத்து. இதனை முன்வைத்ததில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு என்பதை உறுதிபடுத்துகிற ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்ததும் அதுவேதான் என்கிறார். "ஒரு தந்தை வழி சமூகத்தில், ‘பெண்ணின் அடையாளம்’ என்பது ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான். ஆண் பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும் பங்கு அளித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது". "இந்த மொழியின் திருவிளையாடல் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைப்பதில் ஆழமான செல்வாக்கு செலுத்தியுள்ள தொல்காப்பியத்தில் எவ்வாறு ஆணின் மொழியாக வெளிப்படுகிறது? இவ்வாறு ஆண் கற்பித்துள்ள 'அர்த்தத்தை மாற்றி பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க இன்று எவ்வாறு தன் இயக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்? எனும் இரண்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது " என எடுத்த எடுப்பிலேயே தமது கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார், க. பஞ்சாங்கம்.
" இது இந்த உலகத்தின் இயற்கை ; இது இந்த பெண்ணின் இயற்கை குணம்" என்று ஒரு பொருளின் இயற்கைப் பண்பை அறிந்துகொண்டதாக உரிமைகொண்டாடுவதெல்லாம் நம்முடைய 'மொழி' என்கிற வாய்ப்பாடு மூலம் நமக்கு வந்து சேர்ந்த புனைவுகள்தாம்" எனக் கட்டுரையைத் தொடங்குகிற ஆசிரியர் லக்கான் (Jacques lacan) மற்றும் •பூக்கோ(Michel foucault) என்கிற இரு பிரெஞ்சு அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் தமது வாதங்களை வைக்கிறார். "அம்மாவிடம் இருந்து பிரித்துத் தன்னைத் தனியாக அடையாளம் காணும் உணர்வைக் குழந்தையானது குறியீட்டு ஒழுங்குடைய மொழி எனும் அமைப்பிற்குள் நுழைந்த பிறகுதான் அடைகிறது" என்கிற லக்கான் கூற்றையும்; ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுபாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது", என்கிற •பூக்கோ கூற்றையும் தெரிவித்து, ஒரு பொருளுக்கான அர்த்தத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர் மொழிக்கும் புனைவுக்கும் உள்ள ஆற்றலைத் தெரிவிக்கிறார்.
ழாக் லக்கான் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் உளப் பகுப்பாய்வாளர். பிராய்டின் உளவியல் ஆய்வுமுடிவுகள் உயிரியல் உண்மைகளைக் காட்டிலும் பெரிதும் மொழிக் கூறுடன் இணக்கமானவை என்ற கருத்தியத்தை முன் வைத்தவர். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தன்னைப் பிறராக அறியநேரும் ஆடிப் படிநிலை( Stade du miroir)பற்றி விரிவாக ஆய்வு செய்தவர். மிஷெல் •பூக்கோ ஒரு தத்துவவாதி, முன்னவரைபோலவே பிரான்சு நாட்டைச்சேர்ந்தவர். அறிவுக்கும் அதிகாரத்திற்குமான உறவை வரையறுத்தவர். வெவ்வேறு துறையச் சார்ந்தவர்களாயினும் ‘தன்’ னை கட்டமைத்தலில் (subjectivation) மொழியின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்தியதில் ஒன்றிணைகிறவர்கள்.
"அதிகாரம் எப்பொழுதும் தான் அதிகாரம் செலுத்துகிற பொருளின் மொழியை பிடுங்கிகொள்கிறது அல்லது அடக்கிவைத்துவிடுகிறது" (ந.இ.கோ.பக்.58)" என்ற பூக்கோவின் கருத்துருவாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை ஆசிரியரின் சொற்றொடரில் உள்ள 'அதிகாரத்தை' எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். 'அதிகாரம்' என்ற ஒற்றைசொல்லின் பின்புலத்தில் பல காரணிகள் தனித்தோ, இணைந்தோ இருக்கின்றன. ஆண்-பெண்; தடித்தவன்-மெலிந்தவன்; கற்றவன்-கல்லாதவன்; பெரும்பான்மை-சிறுபான்மை; கோபம்-அமைதி; என்கிற இருமை வரிசைகளில் முதலாவது அதிகாரத்தைப் பொதுவில் கைப்பற்றுகிறது. நியதிக்கு மாறாக இந்த ஜோடியில் இரண்டாவது முதலாவதை அதிகாரம் செலுத்துகிற தருணமும் உருவாகலாம். அப்போதும் இந்த ஜோடிகளில் ஒன்று, அவர்களுக்கிடையில் ஏதோவொரு செயல்பாட்டில் மற்றதிடம் போட்டியிட முடியாத கட்டத்தில் தான் அடிமையாக, பிறமை எஜமானனாக அதிகாரத்தைக் கையிலெடுகிறது. எதிரியின் ஆயுத உரிமத்தை இரத்து செய்து நிராயுதபாணியாக்கினால் வெகு எளிதாக அவனைப் பலிகொடுக்கலாம். மொழி ஆயுதத்தை அதிகாரம் தனதாக்கிக்கொள்ளும் சூட்சமும் அதுவேதான்.
"தேவ பாடையைப் பேசக்கூடாது மீறிப் பேசினால் நாக்கு வெட்டப்படும்" எனும் மனுதர்ம சட்டம்; "யாகாவாராயினும் நாகக்க" எனும் வள்ளுவன்; "என் காதலன் என்னைவிட்டு அகலும் படியாக ப் பேசிய ஊரார் 'நா'வானது ஏழு நண்டு மிதித்த ஒரு நாவல் பழம்போல அழுகுகிப்போக," சாபமிடும் குறுந்தொகைத் தலைவி; வாயாடி மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற அனுமதித்த பண்டைய சீன நாட்டின் சட்டம்; பெண்ணின் 'நா'விற்கு எதிரான வழக்கிலிருக்கும் பழமொழிகள் என அனைத்துமே ஆசிரியருக்கு அதிகாரத்திற்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் சான்றுகள்.
தொல்காப்பியம்: ஓர் ஆணின் அதிகார அணுகுமுறை
இதன் தொடக்கத்தில் கூறியதுபோல கட்டுரை ஆசிரியருக்கு தொல்காப்பியர் ஆணாதிக்கத்தின் பிரதிநிதி. ஆசிரியர் சொற்களில் எடுத்துரைப்பதெனில் "மொழிக்குள்ள ஆற்றலை புரிந்துகொண்டு......பெண்ணின் வாய் மொழியில் கை வைக்கிறார்". களவின் மரபை நெறிப்படுத்துகிற தொல்காப்பியர் 'சிறத்தல்' தலைவிக்கும், ஐயம் தலைவர்க்கும் உரியதென்பதையும், கைக்கிளையில் "சொல் எதிர் பெறாமல், சொல்லிச் சொல்லி இன்புறுவதற்கு ஆணுக்கே அவர் இடம் தருகிறார் எனக்கூறியும் தொல்காப்பியர் "ஆணோடு கொள்ள நேர்கிற ஆரம்ப உறவிலேயே பெண்ணுக்கான சொல்லாடல் தடை செய்யப்படுகிறது" என்கிறார்.
தொல்காப்பியரை பெண்ணின் எதிரி என நிறுவ ஆசியர் கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு "காதல் வாழ்வின் தொடக்கத்தில் ஏற்படுகின்ற வேட்கை, இடைவிடாது நினைத்தல், மெலிதல், நாணம், நீங்குதல்... முதலான மனநிகழ்வுகளை தலைவன் தலைவி இருவருக்கும் பொதுவெனக்கூறும் தொல்காப்பியர் இம்மன நிகழ்வுகளின் தொடர்விளைவான மொழிப்படுத்தி பேசுவது மட்டும் ஆணுக்கே உரியதென கூறுவது கட்டுரை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பதுபோல எவ்விதத்திலும் நியாயமில்லைதான். அதுபோலவே பஞ்சாங்கத்திடம் தொல்காப்பியர் வாங்கிக் கட்டிக்கொள்ளும் மற்றொரு இடம் கற்பியலில் 'பிரிவின்' கீழ் "மொழி எதிர்மொழிதல் பாங்கற்குரித்தே" எனக்கூறி தலைவின் வாயை அவர் (தொல்காப்பியர்) அடக்கும் இடம். கட்டுரை ஆசியருக்கு தொல்காப்பியர் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் அடையாளம். பெண்களின் மொழி ஒடுக்கப்பட்டு ஆண்களின் மொழி உருவாக்கத்திற்குக் காரணமானவர். தமிழ்மரபில் காணும் பெண்ணின் தாழ் நிலைக்கு தொல்காப்பியரும் பொறுப்பு.
டார்வின் மற்றும் பிராய்டு
தொல்காப்பியரை அடுத்து டார்வினும் பிராய்டும் நண்பர். க.பஞ்சாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். டார்வின் சிந்தனையும், பிராய்டுவின் சிந்தனையும் ‘ஆண் வலிமையானவன் பெண் மென்மையானவள்’ என்ற தொல்காப்பியத்தின் சிந்தனையை முன்வைக்கின்றன என்கிற கருத்தியம் ஓர் உணர்ச்சிவேகத்தில் நண்பரிடம் உருவாகியிருக்கலாம் என்பதென் எண்ணம். "வலிமையுள்ளவை வாழும் மற்றவை மாயும்" என்கிற டார்வின் கூற்றையும் அதுபோலவே பிராய்டின் பகுப்பாய்வு முடிவுகளையும் ஆணாதிக்க குரலாகப் பார்ப்பது சரியாகாது. அறிவியல் முடிவுகள் தொல்காப்பியம்போல பண்பாட்டு அரசியல் பேசவந்ததல்ல, மரபுகளால் கட்டமைக்கப்பட்டதுமல்ல. அவை ஆய்வின் முடிவுகள், பகுத்தறிவின்பாற்பட்டவை. டார்வினினுடைய இயற்கை தேர்வு என்ற முடிவின்படி ஓர் உயிரினத்தின் முடிவானது அதன் உயிர் அணுக்கள், பிற உயிரினங்கள், சுற்று சூழல்கள் சார்ந்த விடயம். இத்தகைய சூழலில் பிறவற்றைவிட சிறந்த முறையின் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஓர் உயிரினமே பிழைத்து உயிர்வாழக்கூடியதாக இருக்கும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே வலிமை என்ற சொற் பிரயோகத்தை பெண்களுக்கு எதிரான அரசியலுக்குரியது என்ற முடிவுக்கு வர இயலாது. அவ்வாறே யூதர் பிரார்த்தனையின்படி "கடவுளே என்னை ஒரு பெண்ணாக படைக்காததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" என்று ஆண்களும்; "கடவுளே என்னை ஆண்களின் விருப்பப்படி படைத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" எனப் பெண்களும் சொல்வதாலேயே அம்மரபிலிருந்து வந்த பிராய்டு ஒரு ஆணாதிக்க ஆசாமியாகத்தான் இருக்க முடியும் என நினைப்பதும், அவர் கண்டறிந்த ‘உளப்பகுப்பாய்வு உண்மை’, ஆணாதிக்க சிந்தனையெனத் தீர்மானிப்பதும் முறையாகாது. ஆணாதிக்க தொல்காப்பியர் மரபிலிருந்து, தமிழ்ப்பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்க ஒரு கட்டுரை ஆசிரியர் கிடைக்கிறபொழுது, பிராய்டு விடயத்திலும் அது ஏன் சாத்தியமாகாது?
பெண்ணியல் கோட்பாடுகள்
இறுதியாக க.பஞ்சாங்கம் மேலை நாட்டுப் பெண்ணியற் கருத்துகள் அடிப்படையில் பெண்ணுக்கான மொழியை உருவாக்கவேண்டுமென்கிறார். "ஆணாதிக்கம் நிறுவியுள்ள இந்தக் குறியீட்டு அமைப்பு முறையில் இருந்து பெண் வெளியேவர மொழி உலகம் உருவாவதற்கு முன்பு இருந்த இயற்கையான- உண்மையான மூலப்பெண்னாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இவள் என்ன செய்யவேண்டுமென்ற கேள்வியையும் எழுப்பி அதற்குப் பதில் கூறுவதுபோல "பெண்ணின பாலியலுக்கான சில கோட்பாடுகள் இருக்குமானால் அவைகள் ஆண்களின் மொழிக்கு வெளியேதான் இருக்க முடியும்" என 'பெண்னெனும் படைப்பு' நூலிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு, பெண்களுக்கான மொழியை உருவாக்க ஹெலென் சீக்ஸ் என்கிற மேலை தேயத்து பெண்மணியின் யோசனைகளைப் (பெண்கள் கவிதைப் படைக்கவேண்டுமென்பது அதிலொன்று) பின்பற்றசொல்கிறார். அதேவேளை தமிழ்ச்சூழலுக்குப் பொருந்துபடியான அப்பெண்மொழி அமையவேண்டும் என முடிக்கிறபோது வழக்கம்போல தமிழினத்தின் மீது கட்டுரை ஆசிரியருக்குள்ள உண்மையானப் பற்றுதலை விளங்கிக்கொள்ள முடிகிறது.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.