நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோஸ் பிளேஸி'ல் 'சம உரிமை' இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.
நிகழ்வின் முக்கிய அம்சங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1 யுத்தத்தில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலி.
2. தலைவரின் அறிமுக உரை.
3.பிரதம பேச்சாளர்களின் உரைகள்.
4. காணொளிகள் காட்டல்
5. நன்றியுரை.
6. சபையோரின் எதிர்வினைகள்.
ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமானது. நிகழ்வுக்குத் தலைமை வகித்த எல்லாளன் தனதுரையில் நிகழ்வின் பிரதான நோக்கம்பற்றிய அறிமுகத்தையும், தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். முதலில் உரையாற்றியவர் ஊடகவியலாளரும், 'தேசியம்' சஞ்சிகையின் ஆசிரியருமான இலங்கதாஸ் பத்மநாதன் அவர்கள். அவர் தனதுரையில் இலங்கைத்தமிழர்களின் மிகவும் பலவீனமானதோர் அம்சமாக ஆவணப்படுத்தலில் காட்டும் அசிரத்தையைக் குறிப்பிட்டார். அதற்கு உதாரணங்களாகத் தனது சொந்த அனுபவம், கனடாவுக்குக் கப்பலில் வந்தவர் ஒருவரின் அனுபவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தனது உரையினை நிகழ்த்தினார். இலங்கையில் யுத்தகாலத்தில், இறுதிக்காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை யாருக்குமே தெரியாது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிப்பதற்குக்கூடச் சரியான எண்ணிக்கையை யாரும் இதுவரை ஆவணப்படுத்தவில்லையென்பது அவரது பிரதானமான குற்றச்சாட்டாகவிருந்தது. அவரது கவனத்துக்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கை அரசு இவ்விடயத்தில் அமைத்திருந்த ஆணைக்குழுவின் இணையத்தளத்தினைப் பார்த்தேன். அதில் இவ்விதம் காணாமல் போனவர்களில் 19,000 பேர்களின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து உரையாற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான கற்சுறா தனதுரையில் காணாமல் போனவர்கள் என்றால் அது யுத்தச்சூழலில் காணாமல் போன அனைவரையும் உள்ளடக்கியதாகவிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. அமைப்புகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினால் காணாமல் போனவர்கள், அமைப்புகளினால் சிறை வைக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள், துரோகிகள், சமூக விரோதிகள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டுக் காணாமல் போனவர்கள் என அனைவரும் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவருடைய உரை அமைந்திருந்தது.
அடுத்துப் பேசிய சட்டத்தரணி தம்பு கனகசபை அவர்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூரல் / நல்லெண்னத்தை உருவாக்கல் பற்றிய தீர்மானங்களிலிருந்து தன்னிச்சையாக இலங்கை அரசு விலகுவதாக அறிவித்தது பற்றியும், அதன் எதிர்விளைவுகள் பற்றியும், அது சாத்தியமானதா என்பது பற்றியும் தனதுரையில் ஆராய்ந்தார். இலங்கையினால் அவ்விதம் தன்னிச்சையாக விலக முடியாது எனவும், அவ்விதம் விலகினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கக்கூடிய மாற்று வழிகள் பற்றியும் ஆராய்வதாக அவரது உரை அமைந்திருந்தது.
நிகழ்வில் இடையில் இரு காணொளிகளைத் திரையில் காட்டினார்கள். முதலாவதில் சம உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 'புபுடு ஜெயகொட'வின் (Pubudu Jeyagoda) காணாமல் போனவர்கள் பற்றிய உரை இடம் பெற்றது. அடுத்ததாக சம உரிமை அமைப்பின் கொள்கையினை மையமாக வைத்துப்பாடப்பட்ட பாடலொன்றினைக் காட்டினார்கள். பாடியவர் எழுத்தாளரும், கலைஞருமான மெலிஞ்சி முத்தன். இரண்டு காணொளிகளுமே சிறப்பானவை.
நிகழ்வின் இறுதியில் பார்வையாளர் பங்கு பற்றிய கருத்துக்களம் நடைபெற்றது. வரதன், டெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை, ரட்னம் கணேஷ், ,மகேந்திரராஜா, வ.ந.கிரிதரன் எனச் சிலர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
தற்போதுள்ள சூழலில் இது போன்ற கூட்டங்கள் முக்கியமானவை. மிகவும் பயனுள்ளவை.
இக்குறிப்பு நிகழ்வு பற்றிய மிகவும் சுருக்கமான குறிப்பே. விரிவானதல்ல. நிகழ்வினைக் கனகச்சிதமாக நடாத்திய சம உரிமை இயக்கத்தினர் பாராட்டுக்குரியவர்கள். விழாக்காட்சிகள் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.