-1-
கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில்; வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு! அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை. பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான். 'நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு 'கொமன்ற்’ அடிப்பான் பேரன். யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.
உலாந்தா முருங்கைக்காய் மிக நீளமானது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலே யாழ்ப்பாண முருங்கை என்று அழைக்கப்படும் இது, யாழ்குடா நாட்டில் மட்டுமே உலாந்தா முருங்கை என்று அழைக்கப்படுகின்றது. 'உலாந்தா முருங்கை' என்ற பெயர் வந்த வர்த்தமானத்தை என்னுடைய பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டேன். ‘Surveyor’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நில அளவையாளர்' என்பது தமிழாக வழங்கும்பொழுது, யாழ்ப்பாணத்தில் மட்டும் 'உலாந்தா' என்று அழைக்கப்படுவதும் உண்டு.
ஆங்கிலேயருக்கு முன், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டார்கள். இந்த 'உலாந்தர்களே' முதன்முதலில் இலங்கையில், முறைப்படி நிலஅளவை செய்தார்கள். அதைச் செய்தவனை யாழ்ப்பாணத்தில் 'உலாந்தா' என்று அழைத்தார்கள். இந்த 'உலாந்தர்' இந்தோனேசியத் தீவுகளையும் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் அங்கே கண்ட நல்ல முருங்கை வகையை யாழ்ப்பாண விவசாயிக்கு அறிமுகப் படுத்தினார்களாம். இந்த வரலாற்றினை, முன்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், உலாந்தா முருங்கை என்று பெயர் வைக்கப்பட்டதாம்.
சும்மா சொல்லப்படாது! எங்கள் வளவின் தென்மேற்கு மூலையிலுள்ள களிமுருங்கை, பருவ காலத்தில் இலை தெரியாமல் காய்க்கும். நான் ஊரில் வாழ்ந்த காலத்தில், எங்கள் வளவின் களிமுருங்கைக் காய்க்கறியும், மறவன்புலவு வயலில் விளைந்த மொட்டைக் கறுப்பன் நெல் அரிசிப்புட்டும் எனது விருப்பமான உணவு. சின்ன வயதிலும் ஒரு நீத்துப் பெட்டி புட்டு தனியாளாய்ச் சாப்பிடுவன் என்று சாட்சி சொல்ல, அம்மா பக்கத்தில் இருக்கிறார்.
அம்மா முருங்கைக்காய்க் கறி சமைப்பது ஒரு பிரத்தியேகக் கலை! துருவிய தேங்காயைப் பிழிந்து வரும் முதல் பாலில் அவியவிட்டு, தூள்போட்டு, கறி வறட்டல் பருவத்துக்கு வந்தவுடன், சொட்டு நல்லெண்ணை ஊற்றிப் பிரட்டி, பெருஞ்சீரகத் தூள் தூவி இறக்குவார். வாசனை ஒரு கட்டை தூரத்துக்கு அப்பாலும் காந்தமாய் இழுக்கும். இதையே காரணம் காட்டி சிட்னியில் எனது மனைவி, அம்மாவை, 'நெஞ்சை அள்ளும்' இந்த கறிவகைகளை சமைக்க விடுவதில்லை. 'பக்கத்து வீடுகளுக்கு கறி மணக்கும்' என்று நாகரீகம் பேணுவதாகச் சொல்லி என் நாக்கைக் கட்டிப் போட்டுள்ளாள்.
விரதத்துக்கு அம்மா முருங்கைகாய் சமைக்க மாட்டார். தான் அனுஷ்டிக்கும் விரதங்களை நியாயப்படுத்த அம்மா ஒவ்வொரு புராணக்கதை வைத்திருப்பதுபோல, முருங்கைக் காய்க்கும் ஒன்று வைத்திருந்தார்.
சீதை தான் கற்புள்ளவள் என்பதை நிரூபிக்க தீயில் குதித்தாளாம். தடுக்க முயன்ற இராமனுக்கு கையில் அகப்பட்டது சீதையின் கூந்தல். இராமன் எறிந்த, அறுந்த கூந்தல் மரத்தில் தொங்கி முருங்கைக்காய்கள் ஆயினவாம். எனவே 'விரதச் சமயலுக்கு முருங்கைகாய் ஆகாது' என்பது அம்மாவின் ஆசாரம்.
இராமன் வட இந்தியாவில் பிறந்தாலும் அவன் இமயமலைப் பிரதேசத்தில் பிறந்ததாகவோ வாழ்ந்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் முருங்கையின் ஆதிமூலம் (Origin) இமயமலை அடிவாரம் என உசாத்துணை நூல்கள் சொல்லுகின்றன. இருப்பினும், இலங்கை இந்தியா தவிர்ந்த, இமயமலையைச் சூழவுள்ள மற்றைய நாடுகளில் முருங்கைக்காய் உணவுப் பாவணை குறைவு. இந்தியாவிலும் தென் இந்தியாவிலேயே அதிகளவில் அது சாப்பிடப்படுகிறது. இருப்பினும், இலங்கையைப் போல வகை வகையான முருங்கைச் சமையல், இந்தியாவில் இல்லை என்பது எனது அபிப்பிராயம். ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளமளவில் முருங்கைகாயை நறுக்கி சாம்பாருக்குள் போடுவதுடன் தென் இந்தியாவில் முருங்கைச் சமையல்; பெரும்பாலும் நிறைவடைந்துவிடும்.
முருங்கைக் காயை மூன்று அல்லது நான்கு அங்குல நீளத்தில் வெட்டி தனித்தோ, இறால் போட்டுச் சுண்டவைக்கும் வறட்டல் கறியோ, கருவாடு சேர்த்த குழம்போ, தூளே மணக்காத வெள்ளைக் கறியோ, சரக்கு அரைத்து வைக்கும் பத்தியக்கறியோ அல்லது முருங்கை இலை போட்ட தேங்காய்பால் சொதியோ இலங்கையில் மட்டுமே நான் சுவைத்த கறி வகைள். முருங்கையிலே ஈழத்தமிழரின் குஷினி எத்தனை வகையான சுவைகளைக் கண்டு பிடித்தன என்பதைச் சொல்லத் தனி அகராதியே தொகுக்க வேண்டும்.
'முருங்கை இலை வறையும் மீன் குழம்பும் நல்ல கொம்பினேசன் மச்சான்' என்று என் பால்ய நண்பன் பாலன் சப்புக்கொட்டுவான். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, அந்த அருமையான இளவயதுக் காலத்தில், 'வயித்துக் குழப்படிக்குப் பேதி குடிக்கப்போறன்; பத்தியக் கறிக்கு களிமுருங்கைக்காய் வேணும்' என அடிக்கடி அம்மா முன் வந்து நிற்பான் பாலன்.
'கண் பட்டுப்போம், காய்ககாது...' என களிமுருங்கையை அம்மா லேசில் கைவிடார்.
பாலனின் ஆய்க்கினை தாங்காமல் புறுபுறுத்துக் கொணடடே, இரண்டு குறண்டல் காய்களைப் பிடிங்கி, அவனுக்கு குடுப்பார். இருபது வருடங்களின் பின் பாலனை ஆஸ்ரேலியாவில் சந்தித்தேன். சந்திரிக்கா ஆட்சியில் யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்த காலத்தில் ஆஸ்ரேலியாவுக்கு அகதியாக வந்திருந்தான். பிந்திக் கலியாணம் முடித்தாலும், நண்டும் சிண்டுமாக அவனுக்கு எட்டுப் பிள்ளைகள். கிட்டத்தட்ட எல்லாம் ஒரே சைஸ். ஒரு பக்கத்தால் ஒன்று வந்தால் மறு பக்கத்தால் அதே சைஸில் இன்னொன்று வரும். பழைய கதைகளுக்கு நடுவே 'கைதடி முருங்கைக்காய் தாராளமாய் வேலை செய்திருக்கு' என குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்த குழந்தைகளைப் பார்த்து பகிடிவிட்டு நாம் சிரித்து மகிழ்ந்தோம்.
பாலனின் முருங்கைக்காய் பாசம் ஆஸ்ரேலியா வந்தும் அடங்கவில்லை. அவன் வவுனியா விவசாயப் பாடசாலையில் விவசாயம் படித்தவன். அந்த 'சேட்டிபிக்கற்றுடன்' ஆஸ்ரேலியாவில் வேலை கிடைக்கவில்லை. முருங்கைக்கு ஆஸ்ரேலியாவில் இருக்கும் கிராக்கியைப் பார்த்தவன், புறநகர்ப் பகுதியில் காணி வாங்கி முருங்கை சாகுபடி செய்யத் துவங்கினான். அவனது முயற்சி வீண் போகவில்லை. முருங்கை மரங்கள் இங்கும் நன்றாகக் காய்த்தன.
கால ஓட்டத்தில் புதிய இன முருங்கை விதைகளை, தமிழ் நாடு கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்று, பெரியளவில் முருங்கை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தான். சும்மா சொல்லப்படாது, அவனுடைய முருங்கைக்காய்களே விற்பனையில் ஆஸ்ரேலியா எங்கும் சக்கைபோடு போடுகிறது. அவன் இப்பொழுது பென்ஸ் கார் வைத்திருக்கிறான். அது முருங்கைக் காய் உற்பத்தியில், அவன் சாதித்த வெற்றியைக் கட்டியங்கூறிப் பவனி வருகிறது!
பி.கே.எம்.1, பி.கே.எம்.2, கே.எம்.1 ஆகியவை கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக் கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இன முருங்கைகள். இவற்றையே பாலன் இங்கு சாகுபடி செய்கிறான். விஞ்ஞான ரீதியாக விருத்தி செய்யப்பட்ட இப் புதிய இனங்கள், உலாந்தாமுருங்கை போன்று நீளமானதும், களிமுருங்கை போன்று சதைப் பிடிப்பானதுமாக விளங்கின. இவை எல்லாவித மண்ணிலும் வளரும். தபால் மூலமோ நேரே சென்றோ இவற்றின் விதைகளை கோயம்புத்தூர் விவசாய பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவற்றை நான் ஆஸ்ரேலிய 'குவாறன்ரினூடாக' முறைப்படி பெற்றுக் கொடுத்த போது, பாலன் சந்தோசம் தாங்க முடியாமல் என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்னான். உண்மையைச் சொன்னால் இதில் அம்மாவினுடையதும் என்னுடையதுமான முருங்கைக்காயப் பாசமும் அடங்கியிருக்கிறது.
மரமாக முருங்கை வளர்த்ததினால் தான், வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறியதாம். அவை எல்லாம் பழங்கதைகள். புதிய விவசாய முறையில், முருங்கையை மரமாக அல்லாது, செடிபோல வளர்க்க வேண்டும்.
இந்த வகையில், நவீன விவசாய ஆலோசனைகள் கேட்டு பாலன் முருங்கைக் காய்களுடன் என்னிடம் அடிக்கடி வருவான். அவன் வந்தால் அம்மாவுக்கு பரம சந்தோசம். அன்று ஊரிலுள்ள பலரது தலைகள் அவர்களின் ஊர் விடுப்பில் உருளும். 'கைதடியிலை வாங்கின முருங்கைக்காயை இப்ப வட்டியோடை திருப்பித்தாறன் அம்மா. இது குறண்டல் காயில்லை, நல்ல காய்...' என்று, பழையதை மறக்காமல் 'கொமன்ற்' அடித்துச் சிரித்தபடியே முருங்கைக் காய்களை அம்மாவிடம் கொடுப்பான். 'நாவூறு பட்டது' போல இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவனது முருங்கைக் காய்களை பழ ஈக்கள் தாக்கத் தொடங்கின. பழ ஈக்கள் பிஞ்சுக் காய்களைக் குத்தி முட்டை இட்டுவிடும். காய்கள் முத்த, முட்டை இல்லாத ஓட்டைகள் கறுத்துத் தழும்பாகும். இது சந்தைப்படுத்தலை பெரிதும் பாதிக்கும். முட்டை இட்ட காய்களில், முட்டை பொரிக்க, காய் அழுகி விழுந்து விடும். அப்பிள், பீச், பிளம்ஸ், மாங்காய் போன்றவற்றுக்கு உலகமெங்கும் பழ ஈக்கள் பெரும் சவாலாக இருக்கின்றன. இவை இலங்கையிலும் உண்டு. இவற்றை கட்டுப்படுத்த பெருமளவில் பணம் செலவாகும்.
எனவே எனது ஆலோசனைப்படி பாலன் இப்போது 'பசுமைக் கூடத்தில்' (Green house) சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் (Drip irrigation) முருங்கை சாகுபடி செய்கிறான். இந்த முறையில் 2.5 X 2.5 மீட்டர் இடை வெளியில் கொட்டைக் கன்றுகளை நட்டு, ஒரு மீட்டர் வளர்ந்ததும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இதனால் பக்கக் கிளைகள் வளர்ந்து பெருமளவில் காய்க்கும். காய்களைப் பறித்த பின், மீண்டும் ஒரு மீட்டர் உயரத்துக்கு கவ்வாத்துப் பண்ணி வளர்த்தால் வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். பசுமைக் கூடத்தில், மரத்துக்கு மரம், கவ்வாத்துப் பண்ணும் 'மாதங்களை' மாற்றுவதன் மூலம், பாலன் வருடம் முழுவதும் முருங்கைக் காய் விற்கிறான். இவ்வாறு முருங்கையைச் செடியாக வளர்த்து, கவ்வாத்துப் பண்ணி, சொட்டு நீர்ப்பாசனத்தில் வளர்க்கும் முறை, நான் பிறந்து நடைபயின்ற கைதடி மண் உட்பட இலங்கை எங்கும் பயிரிட வேண்டுமென்பது, என் அம்மா சார்பாக நான் காணும் கனவுகளில் மிக முக்கியமானது.
ஒரு நாள் பாலனின் மனைவி முருங்கைக்காயுடன் மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயும், யாழ்ப்பாணத்துப் பச்சை மிளகாயும் கொண்டு வந்து அம்மாவைக் குளிர்வித்தார். முருங்கைச் செடிகளுக்கு நடுவே ஊடு பயிர்களாக மட்டுவில் முட்டிக் கத்தரிக்காயும், யாழ்ப்பாணத்துப் பச்சை மிளகாயும் பாலன் வளர்ப்பதாகவும் அவை விரைவில் சந்தைக்கு வர இருப்பதாகவும் பாலனின் மனைவி சொன்னார்.
அகதியாக வந்து வேலை கிடைக்காமல் 'அப்படி இப்படி' வேலை செய்பவர்கள் மத்தியிலே, சுயதொழில் புரிந்து முன்னேறியுள்ள பாலன் குடும்பத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
- 2 -
என்னுடன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் நண்பன் ரோனி, Food technology பேராசிரியர். ரோனிக்கு அடிக்கடி பல்லுக்கொதி வரும். எமது வீட்டுக்கு வரும் போதெல்லாம் பல் டாக்டரான என் மகனிடம் ஆலோசனை கேட்பான்.
பாலன் அன்று குடும்பத்துடன் வந்திருந்தான். வரும்போது வழமைபோல முருங்கைக் காய், முருங்கை இலை எனத் தாராளமாகக் கொண்டு வந்திருந்தான். பாலனின் மனைவியும் என்னுடைய மனைவியும் அன்று பலவித கொம்பினேசனில் முருங்கை சமைத்திருந்தார்கள். ரோனியையும் அன்று மதிய உணவிற்கு அழைத்திருந்தேன்.
இந்திய உணவு வகைகளை ரோனி விரும்பிச் சாப்பிடுவான். காரமான கறிவகைகளை வேர்க்க விறுவிறுக்க தண்ணீரைக் குடித்துக்கொண்டு அவன் சாப்பிடுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அன்று சாப்பிடும்போது முருங்கைக் காயிலுள்ள சதையை கரண்டி முள்ளால் பிரித்தெடுப்பதற்குக் கஷ்டப்பட்டான். ரோனிக்கு முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலன், முருங்கைக் காய்த் துண்டை முன் பல் இடுக்கில் கவ்வி பெருவிரல் நகத்தால் லாவகமாக சதையை உருவி 'இது யாழ்ப்பாண ரெக்னிக்' என்று சொல்லிச் சிரித்தான்.
'இவ்வளவு கஷ்டப்பட்டு இதைச் சாப்பிட வேணுமோ' என பாலனுடன் சேர்ந்து சிரித்த ரோனி முருங்கைக் காயை தள்ளி வைத்துவிட்டு, அதனுடன் சேர்த்துச் சமைத்த இறாலைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.
ரோனி முருங்கைக்காயைக் குறை சொன்னது, சாப்பாட்டு மேசை அருகே, சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்த அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.
'இஞ்சை பார், என்ரை பல்லை! முருங்கைக்காய் திண்டுதான் இந்த வயதிலும் பல்லுக் கொதியில்லாமல் இருக்கிறன்.' அம்மா அந்தக்காலத்து யாழ்ப்பாண மனுஷி! ரோனிக்கு அடிக்கடி பல்லுக்கொதி வருவதை அவர், மறைமுகமாக குத்திக்காட்டியது வெளியே தெரியாமலிருக்க, நான் சிரித்துச் சமாளித்தேன்.
அம்மா சொல்வது உண்மைதானா என்ற கேள்வி கண்களிலே தொனிக்க, பல்வைத்தியரான என்னுடைய மகனை நிமிர்ந்து பார்த்தான் ரோனி.
'முருங்கைக் காயில் அதிகளவு கல்சியம் இருப்பதாகவும், குறிப்பாக சுண்ணாம்புக் கற்பாறை நிறைந்த மண்ணில் வளரும் முருங்கையில் மேலதிக கல்சியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதை நீ தான் உனது ஆய்வு கூடத்தில் பகுப்பறிந்து சொல்ல வேண்டும்' என, வெளிநாட்டில் பிறந்த என் மகனுக்கு முருங்கைக்காய் பற்றிய அறிவு அதிகம் இருக்காதென்பதால் ரோனிக்கு நான் பதில் சொன்னேன்.
அப்போது, அந்தக் காலத்து பாக்கியராஜா படங்களில் வந்த முருங்கைக் காய் 'மகத்துவத்தை'ச் சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் அவிட்டு விட்ட பாலன், 'எனக்கு எட்டு பிள்ளைகள்' எனக் கண் சிமிட்டி தனது முருங்கைக் காய்க்கு விளம்பரம் தேடிக் கொண்டான். என்ன இருந்தாலும், முருங்கைக்காய்க்கு 'மவுசு' சேர்த்த திரைப்பட இயக்குனர் பாக்கியராஜாவை பாராட்டத்தான் வேண்டும்.
இன்னும் தனக்குக் குழந்தைகள் இல்லை யென்ற குறை ரோனிக்கு. பாலன் சொன்ன தகவல், அவனை உசுப்பி விட்டிருக்கலாம். 'இதை ஒருக்கா பகுப்பாய்வு செய்து பார்க்கத்தான் வேண்டும்' என்று சொல்லி பாலன் கொண்டு வந்த சில முருங்கைக் காய்களையும், ஒரு கிராம் உலர் நிறைக்குத் தேவையான முருங்கை இலைகளையும் எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டான். மாலையில் தேநீர் அருந்திய பின் ரோனி விடைபெறும் போது, யாழ்ப்பாண முருங்கைக் காய் அடைத்த ரின் ஒன்றைக் கொடுத்த அம்மா, 'இதையும் ஒருக்கா சோதிச்சுப் பார்' எனச் சொல்லி வழி அனுப்பி வைத்தார்.
அன்று சனிக்கிழமை!
பல் வைத்தியசாலைக்குச் சென்ற ரோனி மகனுடன் வீட்டிற்கு வந்திருந்தான். பல் வைத்தியர்களான மகனுக்கும் மருமகளுக்கும் அன்று அரை நாள் வேலை. சனிக்கிழமைகளில் வேலை முடிந்து நேராக எமது வீட்டுக்கு மதியச் சாப்பாட்டுக்கு வரவெண்டு மென்பது மகன் மருமகள் இருவருக்கும் என்னுடைய மனைவி இட்ட அன்புக்கட்டளை.
அன்றும் எங்கள் வீட்டில் முருங்கைக் காய் குழம்பு. முள்ளை நீக்கிய பாரைக் கருவாட்டினை முருங்கைக் காயுடன் சேர்த்து மனைவி வறட்டல் குழம்பு வைத்திருந்தாள்.
சாப்பிடும் போது, ரோனி பாலன் காட்டிக் கொடுத்த யாழ்ப்பாண ரெக்னிக்கைப் பாவித்து பல்லிடுக்கில் முருங்கைக் காயை கவ்வி சதையை உருவத் தொடங்கினான். இதைக் கண்டு நாமெல்லோரும் சிரித்த சிரிப்பில் ரோனிக்கு பிரக்கடித்து விட்டது.
தண்ணீரை நிரம்பக் குடித்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன், 'சிரிக்காதேயுங்கோ! முருங்கைக் காயிலை கன விஷயமிருக்கு, பிறகு சொல்லுறன்' என்றவன் சாப்பாடு முடிய தன் தரவுகளை வைத்துக் கொண்டு விரிவுரை நடத்த துவங்கிவிட்டான். 'முருங்கைக் காயில் அதிகளவு கல்சியம் இருப்பது உண்மைதான்! சொன்னா நம்ப மாட்டீர்கள், நான் கொண்டு போன முருங்கை இலையை உலர்த்திப் பெறப்பட்ட ஒரு கிராம் உலர் தூளில், பசும் பாலில் இருப்பதை விட அதிகளவு கல்சியம் இருக்கிறது...!' சாய்மனைக் கதிரையில் படுத்தவாறு ரோனி சொல்வதைக் கேட்ட அம்மா, எழும்பி வந்து ரோனியின் அருகேயுள்ள கதிரையில், நாரியை நிமிர்த்தி இருந்து கொண்டு, 'நான் தந்த யாழ்ப்பாண முருங்கைக்காயிலை கூட இருக்கோ இல்லையோ எண்டதை சொல்லு' எனக் கேட்டார்.
ரோனி அம்மாவை நன்கு அறிவான். யாழ்ப்பாண மண்ணில் அவர் கைம்பெண்ணாக நான்கு பிள்ளைகளையும் வளர்த்து முன்னுக்கு கொண்டு வரப் பட்ட கஷ்டங்களை நான் ரோனிக்கு சொல்லியிருக்கிறேன். அம்மா உடல் இங்கும் உயிர் ஊரிலுமாக வாழ்பவர் என்பதும் அவனுக்கு தெரியும். வேறு நேரமென்றால் அம்மாவுக்கு பகிடியாகப் பதில் சொல்லியிருப்பான். இப்போது அவன் முருங்கைக் காய் விஷயத்திலை படு சீரியஸ்ஸாக இருக்கிறான்.
தனது மடிக்கணணியை விரித்து அதில் தரவுகளைப் பார்த்தவாறு ரோனி தொடர்ந்தான்.
'பாலாவின் ஆஸ்ரேலிய முருங்கையிலும பார்க்க, யாழ்ப்பாண முருங்கைக் காயத்; தோலில் கல்சியம் பத்து வீதம் அதிகமாக இருக்கிறது. இது முருங்கையினத்தின் மரபணு சார்ந்த விடையமில்லை, முருங்கை மரம் கல்சியம் அதிகமுள்ள மண்ணில் வளர்ந்ததால் வந்தாக இருக்கலாம். உங்களின் முருங்கைக் காய்தோல் சப்பும் 'கலாசாரத்தில்' அர்த்தம் இருக்கிறது...' என அம்மாவுக்கு ஏற்ற வகையிலே விஞ்ஞான தகவல்களைச் சொல்லி அவரைக் குளிர்வித்தான்.
'கல்சியம் பல வடிவங்களில் உண்டு. முருங்கையில் இருக்கும் கல்சியம, குடலால் உறுஞ்சக் கூடிய நிலையிலும், உடலால் உள் வாங்கக் கூடிய நிலையிலுமுண்டா...?' என மகன் மருத்துவ ரீதியாக ஒரு கொக்கியைப் போட்டான்.
'எனது பகுப்பாய்வின் படி முருங்கையில் இருக்கும் கல்சியம், 'கல்சியம் ஒக்ஸ்லேற்' பளிங்குகளாகவே இருக்கின்றன. இப் பளிங்கு நிலையில், இவை மனித உடலால் பாவிக்க முடியாது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் முருங்கையில் உள்ள கல்சியம் பளிங்குகளின், 'உடற்தொழில்' மாற்றங்களை மருத்துவ விஞ்ஞானி ஒருவர்தான் கண்டறிந்து சொல்ல வேண்டும்' என தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் சொல்லும் பொறுப்பை வெகு லாவகமாக, வைத்திய போதனாசிரியராகவும் பணிபுரியும் என் மகனிடம் திருப்பி விட்டான் ரோனி.
முருங்கைக்காய் சமாசாரம் விஞ்ஞான ரீதியாக திசை திரும்பியதால் அம்மாவால் அதிகம் புரிந்து கொள்ள முடியவில்லை. கொட்டாவி விட்டவாறே அருகில் இருந்த அவரது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டர். இந்த வயதிலும் அவருக்கு பாம்புக் காது. மெல்லக் குசுகுசுத்தாலும் நன்கு கேட்கும். அவரது புலனெல்லாம் எங்கள் உரையாடலிலேயே லயித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
'கல்சியத்தை விட வேறு என்ன முருங்கைக் காயில் இருக்கிறது...?'
நான் எழுதிய 'கறுத்தக் கொழும்பான்' மாம்பழ ஆராய்ச்சிக் கட்டுரை போன்று யாழ்ப்பாண வாழ்க்கையிலும் உணவிலும் முக்கிய பங்கு வகிக்கும் முருங்கை பற்றியும் படைப்புக் கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே ரோனியிடம் தகவல் சேகரிப்பில் நான் முனைப்புக் காட்டினேன்.
'குறுகிய காலத்துக்குள் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்ய முடியாது. ஆனால் உசாத்துணை நுல் ஆராய்ச்சி நிறையச் செய்தேன். விக்கிபீடியா (Wikipedia) இணையத் தளத்திலிருந்து பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருந்தது'.
'விக்கிலீக்ஸ் (Wikileaks) முருங்கைக் காய் பற்றியும் தகவல்களை லீக்(leak) பண்ணியிருக்குதோ'? என, எமது சம்பாஷனைக்குள் புகுந்தாள் என் மனைவி. அரச அலுவலகமென்றில் அலுவலராகப் பணி புரியும் என்னுடைய மனைவி விக்கிபீடியாவை (Wikipedia), விக்கிலீக்ஸ் (Wikileaks) என தவறாக விளங்கியிருந்தாள்.
'விக்கிலீக்ஸ்' உலகத்திலுள்ள பல அரசாங்கங்களின் தில்லு முல்லுகளையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் இணையத்தளம். ரோனி சொல்வது விக்கிபீடியா. இது 'என்சைக்கிளோபீடியா'வின் (Encyclopedia) இலவச இணையத்தளம். இதிலிருந்து எமக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
ரோனி தொடர்ந்தான். தாய்ப்பால் சுரப்பதை முருங்கை அதிகரிக்கும். ஒரு தேக்கரண்டி காய்ந்த முருங்கை இலைத் தூளில், 14 சதவீதம் புரதமும், 40 சதவீதம் கல்சியமும், 23 சதவீதம் இரும்புச் சத்தும் இருப்பதாக விக்கிபீடியா இணையத் தளத்தில் வாசித்தேன். ஒரு குழந்தைக்கு மூன்று வயது வரை தேவையான விற்றமின் ஏ, சீ ஆகியன முருங்கை இலையில் இருப்பதாகவும் சொல்லி எங்களை அசத்தினான்.
'உதுக்கத்தான் அப்பு பிள்ளைப் பெத்த வீட்டிலை, முருங்கைக்காய் பத்தியம் குடுக்கிறது'. அறைக்குள் இருந்தவாறே அம்மா நமது மண், பரம்பரை பரம்பரையாக வளர்த்த கைமருந்து அறிவைப் பக்குவமாக அவிழ்த்து விட்டார்.
இவற்றுக்கு நடுவே, தன் பங்கிற்கு முருங்கையின் மருத்துவ குணங்களை அறிய இணையத் தளத்தை தட்டி ஆராய்ந்தாள் மருத்தவம் படிக்கும் எனது மகள்.
முருக்கம் பட்டை, இலை, காய் எல்லாம் பல நாடுகளில் சுதேச வைத்தியத்துக்குப் (Traditional medicine) பயன்படுத்தப்படுகிறன. கர்ப்பிணித் தாய்க்கு தேவையான இரும்புச் சத்தும், கல்சியமும் முருங்கையில் இருப்பதாக இணையத்தில் ஒரு ஆராய்சிக் கட்டுரையே இருக்கிறது. கர்ப்பிணித் தாய் தினமும் 3 முதல் 6 தேக்கரண்டி காய்ந்த தூளுக்குச் சமமான முருங்கைக் கீரை சாப்பிட வேணுமாம். இன்னுமொரு கட்டுரையில் வாழைப் பழத்தில் இருப்பதிலும் பார்க்க 4 மடங்கு பொட்டாசியமும், ஓட்ஸில் (Oats) இருப்பதிலும் 4 மடங்கு நார்ச் சத்தும், ஸ்பினாஷ் கீரையிலும் பார்க்க 9 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கை இலையில் இருப்பதாக, கணணிக்கு முன்னால் இருந்து கொண்டே தரவுகளை அடுக்கினாள் மகள்.
அம்மா மெல்ல தனது அறையிலிருந்து எழுந்து வந்தார்.
'முருக்கம் பட்டை உடம்பிலுள்ள கெட்ட நீரை உறுஞ்சி எடுக்கும். உதுக்குத்தான் ஊரிலை சனிக்கிழமை எண்ணை தேய்த்து முழுகியவுடன் முருக்கம் பட்டை போட்டு அவித்த 'ரசம்' குடிக்கத் தாறது. சின்னனிலை அதைக் குடிக்க நீ எத்தினை சன்னதம் போடுவாய்...?' என, என் பிள்ளைப் பராயம் பற்றிய நனவுகளிலே அம்மா தோய்ந்து மகிழ்ந்தார்.
'இது மலையாள மருந்து. முருக்கம் பட்டை போடாமல் மலையாளத்திலை ரசமுமில்லை கசாயமுமில்லை. மலையாளத்துக்கு புகையிலை யாவாரத்துக்கு போன என்ரை அப்பு சொல்லித்தான இது எங்களுக்கு தெரியும். இதுகள் எல்லாத்தையும் விட்டதாலை தான் இப்ப எல்லா விதமான நூதன வியாதிகளும் வருகுது...!'
மகனை விட்டு இப்பொழுது அம்மா, தனது 'அப்பு' பற்றிய நினைவுகளிலே மூழ்கித் திழைத்தார்.
ரோனி தனது மடிக் கணணியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். ரோனி முருங்கையில் கரிசனை காட்டியதில் பாய்க்கியராஜா படச் 'சமாசாரமும்' ஒன்று. எனவே அது பற்றியும் கேட்டேன்.
'சித்த வைத்தியத்தில் ஆண்களின் வீரியத்துக்கும் பெண்களின் நீண்ட நேர காதலுக்கும் முருங்கை பாவிக்கப் படுவதாக விக்கிபீடியா சொன்னாலும், இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத ஒன்று. இதுவும் சின்ன வெங்காயத்திலை செய்த உங்கள் சீனிச் சம்பல் 'சமாசாரம்' போன்றதாக இருக்கலாம்' என ரோனி சொன்ன தகவல்களைக் கேட்ட மகன் தன் மனைவியைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
மதிய உணவு முடிந்து ரோனி சென்ற பின்பும் முருங்கை பற்றிய நினைவுகள் என் மனதில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
-3-
பல்கலைக்கழக பணி நிமிர்த்தம் நான் ஆபிரிக்க நாடுகளுக்கும் செல்வதுண்டு. அங்கும் முருங்கை மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் அவை ஆபிரிக்கர்களால் உணவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு முருக்கம் பட்டை குடி தண்ணீர் சுத்திகரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆபிரிக்காவிலுள்ள நாடுகள் சிலவற்றில் இந்திய வம்சாவளிகளின் தொடர்பு காரணமாக, ஆபிரிக்க சுதேசிகள் சிலர் முருங்கை இலையை தமது சூப்புகளில் சேர்ப்பார்கள். முருங்கைக் காய்களென்றால், மூச்சுவிடாதே! அவை 'சாத்தானின்' விரல்கள். எனவே, அவற்றை மனிதர் சாப்பிட்டால் 'உடலுக்கு கேடுவரும்' என்பது அவர்கள் பயிலும் திருவாசகம். முருங்கை மரத்தை Ben tree என்றும் அழைப்பதுண்டு. முருக்கங் கொட்டையிலிருந்து ‘Ben Oil’ என்ற விலையுயர்ந்த எண்ணை தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணையின் சிறப்பியல்பு, நீண்டகாலத்துக்கு காயாமல் இருப்பதுதான். எனவே மணிக்கூட்டுத் தயாரிப்பிலும் வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பெரிதும் பயன்படுத்தப்படும். சுவிஸ் மணிக்கூடு தயாரிப்பில் இந்த எண்ணையே பயன்படுத்தப்படுகிறது! தன்சானியாவில் (Tanzania) வில் வசிக்கும் எனது கலாசாலை நண்பன் ராஜா Ben Oil’ தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறான். அந்த எண்ணை உற்பத்திக்குத் தேவையான விதைகளைப் பெற கிளிமஞ்சாரோ மலை அடிவாரத்தில் பல முருங்கைப் பண்ணைகள் வைத்திருக்கிறான். ராஜாவை நான் முதன் முதலில் சந்தித்தது மிகவும் சுவையான சங்கதி. இருபதாம் நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளின் முற்பகுதிகளில், நான் ஜேர்மனிக்குச் சென்ற அதே புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் ராஜாவும் வந்திருந்தான். ஆறு வருடப் படிப்பு. முதல் வருடம் ஜேர்மன் மொழிப் பயிற்சி. எங்கள் அனைவருக்கும் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மொழி தெரியாத நிலை. ஒரு நாள் இந்தியனாகத் தெரிந்த ராஜாவிடம் சென்று 'நீ தமிழனா...?' எனக் கேட்டேன். 'ராஜா' தமிழ்ப்பெயர் என்ற எண்ணம் எனக்கு! 'இல்லை..., ஆபிரிக்கன். தன்சானியா!' என்றான்.
என்னதான் ராஜா தன்னை தன்சானிய ஆபிரிக்கன் என்று சொல்லிக் கொண்டாலும், அங்கு படிக்க வந்த கறுப்பு தன்சானியாகள் அவனை தங்களுள் ஒருவனாக ஏற்றுக் கொண்டது கிடையாது. ஆபிரிக்கர்களுக்காகக் கொடுக்கப்படும் புலமைப்பரிசிலை ஒர் இந்தியன் எப்படிப் பெற்று அனுபவிப்பது என்கிற ஆத்திரத்தில் ராஜாவை வெறுப்புடன் பார்த்தார்கள். ஆபிரிக்க நாடுகளில், பல தலைமுறைகளாக இந்தியர்களும் சீனர்களும் குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் அவர்களை ஆபிரிக்கர்களாக சுதேசிகள் ஏற்றுக் கொள்வதில்லை. வெள்ளையர்களைப் பொறுத்த மட்டில், தென் ஆபிரிக்காவிலும் வெள்ளையர்களின் ஆதிக்கம் வலு விழந்து, இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள சிம்பாபுவே வெள்ளையர்களின் நிலைக்கு வந்துகொண்டிருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
ராஜாவின் மூதாதையர்கள் குஜராத்திலிருந்து வணிகர்களாக தன்சானியா வந்தவர்கள். படிக்கும் காலத்திலேயே அவனது உடலில் வணிக இரத்தம் ஓடியது. எதையும் தூர நோக்குடன் நவீனமாகச் சிந்திப்பான். அவன் கிளிமஞ்சாரோ மலையடிவாரத்தில் முருங்கை விதையிலிருந்து Ben Oil என்ற எண்ணை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கவில்லை.
தன்சானியாவுக்கு நான் தொழில் நிமித்தம் சென்றபொழுது கிளிமஞ்சாரோ மலையடிவாரத்திலுள்ள அவனது பண்ணையில் ராஜாவைச் சந்தித்தேன். அங்கு சென்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது ஆபிரிக்க விமானப் பறப்புகள், பெரும்பாலும் கிளிமஞ்சாரோ மலையின் மேலாகவே நடைபெறும். விமானத்திலிருந்து பார்க்கும்போது கிளிமஞ்சாரோ மலை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் தோன்றும். மேகங்களைக் கிழித்துக் கொண்டு தெரியும் பனி படர்ந்த மலை முகடுகள், தேங்காய்ப் பூப்போட்டு நீத்துப் பெட்டியில் அம்மா அவித்துக் கொட்டும் குரக்கன் புட்டை நினைவூட்டும். ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். கதை சொல்லும் வித்தையில் புதிது புகுத்தியவர் அமெரிக்க நாவலாசிரியரான Ernest Miller Hemingway. இவர் கிளிமஞ்சாரோவின் பனிகள் (“The Snows of Kilimanjaro”) என்கிற அற்புதமான நாவலை கிளிமஞ்சாரோ மலையைக் கதைப்புலமாகக் கொண்டு எழுதியுள்ளார். இது பின்னர் சினிமாப் படமாகவும் வந்தது. இந்த நாவலை வாசித்து, படத்தையும் பார்த்த பின்பு கிளிமஞ்சாரோவுக்கு போகும் ஆசை எனக்குப் பன்மடங்காகியது.
தன்சானியாவின் கிழக்கு கரையில் இந்தியப் பெருங்கடல் உண்டு. வடக்கே கென்யாவும், உகண்டாவும், மேற்கே றுவண்டா, புருண்டி, கொங்கோ ஆகியனவும், தெற்கே சம்பியா, மாலாவி, மொசம்பிக் ஆகிய நாடுகளும் தன்சானியாவைச் சூழ்ந்துள்ளன, என்கிற பூகோள விபரத்தை நீங்கள் ஆபிரிக்க வரைபடம் ஒன்றினை வைத்து சுலபமாகக் கண்டு பிடிக்கலாம்.
Tanganyika, Zanzibar என்ற இரண்டு தனித்தனி ஆட்சிப் பிரதேசங்களை இணைத்து 1964ம் ஆண்டு தன்சானியா உருவாக்கப்பட்டது. Tanzania என்ற பெயர், Tanganyika, Zanzibar ஆகியவற்றின் முன் துண்டுகளை இணைப்பதால் பெறப்பட்டது. இன்றைய தன்சானியா அமைந்துள்ள பிரதேசமே உலகில் ஆதிகால மனிதர்கள் அதிகம் வாழ்ந்த பிரதேசம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனித மூதாதையர்களதும், அவர்களிலிருந்து கூர்ப்படைந்த மனிதர்களதும் சுவடுகள் தன்சானியாவில் கண்டுபிடிக்கப் பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு.
முதலாவது மிலேனியத் தொடக்கத்தில் பாரசீக வளைகுடாவில் இருந்து அராபியர்கள் கிழக்கு ஆபிரிக்க கரையோரம் சென்றதால் அங்கு இஸ்லாமிய மதமும், மேற்கு இந்தியாவிலிருந்து இந்தியர்கள் சென்றதால் வணிகரீதியாக இந்தியர்களின் ஆதிக்கமும் தன்சானியாவில் தோன்றியது. தற்போது இந்தியர்களில் பலர் கனடா, இங்கிலாந்து, அமேரிக்கா என புலம் பெயர்ந்து சென்று விட்டாலும், குத்துமதிப்பாக ஒரு லட்சம் இந்திய வம்சாவளியினர் தற்போது தன்சானியாவில் வாழ்வதாக ராஜா சொன்னான். இந்தியர்களின் வணிகரீதியான ஆதிக்கமும் பண பலமும் இந்திய எதிர்பலையை தன்சானியாவில் ஏற்படுத்தியுள்ளதை எனது பிரயாணத்தின் போது மிக எளிதாகத் தெரிந்து கொண்டேன்.
தன்சானியாவிலிருந்து படிக்க வந்தவர்களை ஜேர்மன் சக மாணவர்கள் தங்கள் அடிமைகள் என நட்பு ரீதியாக கேலிசெய்வதுண்டு. 18ம், 19ம் நூற்றாண்டுகளில், தற்போதைய தன்சானியாவின் Zanzibar பிரதேசமே ஆபிரிக்க அடிமைகளை ஏற்றுமதி செய்யும் கேந்திர பிரதேசமென்றும், அங்கிருந்து 718000 அடிமைகள் ஏற்றுமதியானதாகவும் ஆபிரிக்க பேராசிரியர் ஒருவர் சொன்னார்.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் றுவன்டா, புறுண்டி மற்றும் தன்சானியாவின் ணுயணெiடியச தவிந்த பிரதேசங்களை ஒன்றிணைத்து ஜேர்மன் கிழக்கு ஆபிரிக்கா என்னும் பெயரில் ஜேர்மனியர்கள் ஆண்டார்கள். ஆபிரிக்காக் கண்டத்தை துண்டாடுவதிலே, பிரித்தானியரும் பிரஞ்சியரும் பெற்ற வெற்றியை, ஜேர்மனியர்கள் பெறவில்லை. இந்த மனக் கசப்பும் முதலாவது உலக மகாயுத்தத்தை தோற்றுவித்திருக்கலாம். அதில் தோல்வியடைந்த ஜேர்மனியைச் சிறுமைப்படுத்தும் வகையில், வெற்றி பெற்ற நாடுகள் நிபந்தனைகளை விதித்து, நஷ்ட ஈடுகட்ட நிர்ப்பந்தித்தன. முடிவில், ஜேர்மனியின் கொலனிகளைப் பறித்து தமக்குள் பங்கு போட்டுக் கொண்டன. இந்த அவமதிப்புக்களின் எதிர் வினையாகத்தான் நாஜி இயக்கமும், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சூத்திரதாரியான Adolf Hitler தோன்றியதாக வரலாற்று ஆசிரியர் பலரும் எழுதியுள்ளார்கள். ஜேர்மனியர்கள், முதலாம் உலக யுத்தத்தின் தோல்வியினால் ஏற்பட்ட ரணங்களைச் சுமந்தவர்கள். இந்த வரலாறு ஜேர்மனியில் வாழையடி வாழையாக புகட்டப்படுவதை, நான் அங்கு வாழ்ந்த காலத்தில், அநுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். இதன் வெளிப்பாடாக, தன்சானியாவிலிருந்து படிக்க வந்த மாணவர்களை ஜேர்மன் சகாக்கள் 'தங்கள் அடிமைகள்' என கேலிசெய்வார்கள். இந்த சில்லறைச் சேட்டைகளை கறுப்பு தன்சானிய மாணவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ஆனால் ராஜா அமைதி காத்தான். ஆபிரிக்க கண்டத்திலே பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினர் தமக்கு ஏற்படும் அரசியல் சார்ந்த அவமதிப்புகளைச் சமாளிப்பதில் மகா கில்லாடிகள். இப்படியான நேரங்களில், ராஜா தான் காந்தி பிறந்த தேசத்தின் பரம்பரை என, வேதாந்தம் பேசித் திரைபோட்டுக் கொள்வான்.
Dodoma தன்சானியாவின் தலைநகரமாக இருந்த போதிலும், தன்சானியாவின் பெரிய நகரம் Dar es Salaam. இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள பெரிய வணிக நகரமும் இதுவே. இங்கிருந்து 646 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிளிமஞ்சாரோ மலையடிவாரத்துக்கு பஸ்ஸிலேதான் புறப்பட்டேன. அங்கு தான் ராஜாவின் முருங்கைப் பண்ணைகள் இருந்தன.
கிளிமஞ்சாரோ ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை. இந்த மலை பூமத்திய ரேகைக்கு (equator) மூன்று பாகை தெற்கே அமைந்துள்ளது. தன்சானியாவின் வட கிழக்கில், கென்யா எல்லை அருகே அமைந்திருக்கும் இந்த மலைச் சிகரத்தில் நிரந்தரமாக பனி படர்ந்திருக்கும். 70 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள மலை அடிவாரத்தில் கோப்பி, சோளம், வாழை ஆகிய பயிர்கள் பெருமளவில் பயிரிடப் படுகிறன. இங்கொன்றும் அங்கொன்றுமாக காட்டு மரங்களுடன் வளர்ந்த முருங்கைகள், இப்போது செடிகளாக புதிய விவசாய உத்திகளைப் பாவித்து ராஜாவால் அங்கு பயிரிடப்படுகின்றது.
வீட்டைச் சுற்றி ராஜா முருங்கை மர வேலி போட்டிருந்தான். முருங்கை மரங்களில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கின. இலங்கைப் போலீஸ்காரன் அந்தக்காலத்திலே உபயோகித்த 'பேற்றன்' பொல்லுகள் கணியத்திலே அந்தக் காய்கள் குட்டையாகத் தோன்றின. முன்பக்க மதிலுக்கு உள்புறமும் முருங்கை மரங்களே இருந்தன.
'முருங்கை தான் எங்கள் காவல் தெய்வங்கள். மரத்தில் விரல்கள் போல் தொங்கும் காய்களை 'சாத்தானின் விரல்கள்' என ஆபிரிக்க சுதேசிகள் நம்புகிறார்கள். இதனால் முருங்கை மரங்களைத் தாண்டி அவர்கள் உள்ளே வரமாட்டார்கள்' என தனது முருங்கை மர வேலிக்கு விளக்கம் சொன்னான் ராஜா.
'அப்படி என்றால், முருங்கை எண்ணெய் தயாரிப்பதற்கு உனக்கு வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுமே...?' 'முருங்கையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுப்பது இந்தியர்கள், மிகுதி சுதேசிகள்' எனச் சொல்லிச் சிரித்தான் ராஜா. அன்று மாலை ராஜாவின் முருங்கைத் தோட்டத்துக்கு சென்றிருந்தோம். அது தோட்டமல்ல, பெருந்தோட்டம். ஏக்கர் கணக்கில் சொட்டு நீர்ப்பாசன முறையில் வரிசையாக மண்ணை அணைத்து வரம்பு போலாக்கி முருங்கை பயிரிட்டிருந்தான். மொளி மொளியாக நிறையக் காய்த்திருந்தன. முற்றிய காயொன்றை பிரித்துப் பார்த்தேன். சதையில்லை, நிறையக் கொட்டைகள். அது தான் தேவையானதுங்கூட. 'இவை விதைகளுக்காக விருத்தி செய்யப் பட்ட புதிய இன முருங்கை' என்றான் ராஜா.
'ஆபிரிக்க கறுப்பர்கள் முருங்கையை உணவுக்குப் பாவிப்பதில்லையா...?' என என்னுடன் வந்திருந்த மனைவி கேட்டாள். 'இல்லை. இங்குள்ள முருங்கை காய்களில் சதைப்பிடிப்பில்லை. முருங்கைப் பட்டைகள் கிராமப் புறங்களில், விக்ரோரியாக் குளத்திலிருந்து எடுக்கப்படும் குடிதண்ணீர் சுத்திகரிப்புக்கு பாவிக்கப் படுகிறது. ஆபிரிக்காவின் மிகப் பெரிய குளம் இதுதான். இங்கு நைல் நதியின் தண்ணீர் வந்து சேர்கிறது. நைல் நதிக் கரையோரமாக வாழும் ஆபிரிக்கர்கள் விசக்கடிக்கும் வாதத்துக்கும் மருந்தாக முருங்கை இலைச் சாறை இன்றும் பயன்படுத்துகிறார்கள். 2010ம் ஆண்டு மாசிமாதம் வெளியிடப் பட்ட Micro Biology ஆய்வறிக்கையில் முருங்கை இலைச் சாறு பக்ரீயாக் கிருமிகளை 90 தொடக்கம் 99 சதவீதமளவு கொல்வதாகச் சொல்கிறது....' என்று ராஜா பல தகவல்களை விசுக்கியபடி நடந்தான்.
பேசிக்கொண்டே முருங்கை எண்ணை தயாரிக்கும் கட்டிடத்தை வந்தடைந்தோம். ‘Ben Oil’ தொழிற்சாலை என்ற பெயரின் கீழ், வளையல் அணிந்த இந்தியப் பெண்ணின் வலது கரமும் ஆபிரிக்கப் பெண்ணின் இடது கரமும் இணைந்து, வணக்கம் கூறி வரவேற்கும் படம் ஒன்று வரையப் பட்டிருந்தது. அருகிலிருந்த விளம்பரத் தட்டி ஒன்றில் Biofuel என்ற தலைப்பில் ஓர் திட்டம் வரையப் பட்டிருந்தது. அது பற்றி நான் ராஜாவைக் கேட்டேன்.
'முருங்கை விதைகளிலிருந்து biodiesel தயாரிக்கலாம் என நம்பப்படுவதாகவும் இதில் ஜேர்மன் நிறுவனமொன்ற ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னவன், வணிக ரீதியாக இது லாபம் தருமா என்பதை ஆராய்ந்த பிறகே இதில் இறங்க வேண்டுமென்றான். இந்தியரின் வணிக வெற்றிக்கு இவனும் ஒரு சான்று. தன்சானியாவில் வாழும் இந்திய வம்சாவளியான ராஜா, முருங்கை பயிரிட்டே கோடீஸ்வரனாகி விட்டான்!
ஆனால் நாம்...?
முருங்கைக் காயுடனும் இணைந்தது தான் எமது ஈழக் கலாசாரம்!
முருங்கைக் காயை நினைத்ததும், அந்தக்காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் அத்தனை புகையிரதங்களிலும், யாழ்ப்பாண மகாஜனங்கள் அக்கறையுடன் எடுத்துச் செல்லும், முருங்கைக்காய்க் கட்டுகளின் அளவுகளும், எண்ணிக்கையும் என் மனத்திரையில் ஓடுகிறது.
அந்தத் திரையைக் கிழித்துப்பார்த்தால்...?
முருங்கைக்காயின் உண்மையான மகத்துவத்தை முதலில் அறிந்தவன் ஈழத்தவன்தான் என்று, என் அம்மாவுடன் சேர்ந்து கைதடி மண்ணிலிருந்து கூவவேண்டும் போல இருக்கிறது.
கறுத்தக் கொழும்பான் மாம்பழம், முருங்கைக்காய் என்று யாழ்ப்பாணத்தானின் சுவை இன்னமும் அவனுடன் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு, சுவையின் 'பற்று' மட்டும் காரணமாக இருக்க முடியுமா? இந்தச் சுவைகளை ஏதோ ஒரு வழியில் நகர்த்தி, நமது புதிய சூழலிலும் நுகர முடியும்.
ஆனால் தமிழ் பேசி, தமிழிலேயே நமது அனைத்து, இனத்துவக் கலாசாரங்களையும் பேணிவளர்த்த அந்த மண்ணையும், அதன் தனித்துவ அழகையும், ஆயிரங்காலத்து வரலாற்றுச் சிறப்பையும் எவ்வாறு நாடு கடத்துவது?
இயலாமையின் மத்தியில், இயலுமானவற்றைப் பேசி மகிழுதல் மனித சுபாவம். இந்தச் சுபாவமே, இந்த முருங்கைக்காய்க் கட்டுரைக்குப் பின்னால் ஓழிந்து நிற்கிறதா...?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.