['புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக 'அ.ராமசாமி எழுத்துகள்' என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-] ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.
ஹெப்ஸிபா ஜேசுதாசனுக்குக் கிட்டியுள்ள விதிவிலக்குத் தன்மையை மனதில் கொண்டு அவரது நாவல்களின் படைப்புலகத்தையும், அதில் வெளிப்படும் வாழ்க்கை பற்றிய, இலக்கியம் பற்றிய அவரது கருத்துநிலை களையும் அறிய முயல்கிறது இக்கட்டுரை. ஒரு படைப்பாளியின் படைப்புலகத்தையும் அதன் வழி வெளிப்படும் வாழ்க்கை, இலக்கியக் கோட்பாடுகளை அறிந்து கொள்ள அடிப்படைப்பாளியின் ஒட்டுமொத்தப் படைப்புகளும் மிக அவசியம். ஆங்கிலத்தில் மூன்று கவிதைத் தொகுதிகளையும் தமிழில் நான்கு நாவல்களையும் எழுதியுள்ள ஹெப்ஸிபாவின் நான்கு நாவல்களும் இங்கு ஆய்வுப் பொருளாகியுள்ளன.
ஹெப்ஸிபாவின் புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா என்ற இரண்டு நாவல்களும் சிறிது இடைவெளியோடு 1964,1967 களில் வெளிவந்துள்ளன. அடுத்த இரண்டு நாவல்களான அனாதை, மானி என்ற இரண்டும் முறையே 1978, 1982 களில் வெளி வந்துள்ளன. இந்த நான்கு நாவல்களையும் ஒருசேர வைத்துப் பார்க்கும் நிலையில் முதல் மூன்று நாவல்களிலும் ஒருவிதமான தொடர்ச்சியைக் காண முடிகின்றது. ‘பனைவிளை’ என்ற தென் தமிழ் நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு சில மனிதர்கள் இம்மூன்று நாவல்களிலும் வருகின்றனர். புத்தம் வீட்டின் முக்கியப்பாத்திரமான ‘ லிஸி’யும் அவளது கணவரான தங்கராஜுவும், அவனது தம்பி ‘ செல்லப்பனு’ம் மூன்று நாவல்களிலும் வருகின்றனர். தங்கராஜூவின் தம்பியான செல்லப்பனே, ‘ டாக்டர் செல்லப்பா’ வாகப் பரிணாமம் கொள்கிறான். தங்கராஜுவின் உறவுக்காரனும் நண்பனுமான தங்கையனின் மகன் தங்கப்பன் தான் அனாதை நாவலின் நாயகனான ‘ அனாதை தங்கப்பனா’ கப் பரிணாமம் பெற்றுள்ளான். புத்தம் வீட்டின் நிகழ்வுகள் கூடப் பின்னிரண்டு நாவல்களிலும் நினைவு கூரப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத் தொடர்ச்சியினையும், நிகழ்வுகளின் நினைவு கூர்தலையும் கொண்டு இம்மூன்று நாவல்களையும் ஒருநாவலின் மூன்று பாகங்கள் என்று சொல்ல முடியாது; தனித்தனி நாவல்களே. ஏனெனில் இம்மூன்று நாவல்களின் பின்னணிகள் வேறானவை; பாத்திரங்களின் குணங்கள் வேறானவை; சமூகப் பொருளாதாரச் சூழல்கள் வேறானவை. இம்மூன்று நாவல்களிலும் இடம் பெறும் பாத்திரங்களே கூட ஒவ்வொன்றிலும் வேறு வேறான குணங்களைக் கொண்டவைகளாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன. இதை மனங்கொள்ள ‘ டாக்டர் செல்லப்பா’ வின் பதிப்பக உரையில் காணப்படும் ‘ இந்த டாக்டர் செல்லப்பா புத்தம் வீட்டின் இரண்டாம் பாகம் போன்றது’ என்ற குறிப்பு வாசகர்களைத் தவறான வாசிப்புக்கு இழுத்துச் செல்வதாகவே தோன்றுகிறது. இவ்விசயம் இத்துடன் நிற்க. பனைவிளைக் கிராமத்தில் பழம்பெருமைகளையும் பழைய சமூக மதிப்புகளையும் கொண்ட புத்தம் வீட்டினைச் சுற்றிச் சுற்றி வரும் ‘ புத்தம் வீடு’ நாவலையும், பனையேறியின் மகனான செல்லப்பன் வேலூர், மதுரை முதலான நகரங்களில் வாழ்ந்து ‘டாக்டர் செல்லப்பா’வாக மாறும் நிலையைச் சித்திரிக்கும்’ டாக்டர் செல்லப்பாவையும், பனையேற்றத் தொழிலாளியான தங்கையனால் அனாதையாகக் கைவிடப்பட்டு, தங்கராஜுவால் பட்டப்படிப்பு வரை படிக்க வைக்கப்பட்டு, திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனையொட்டிய ஒண்டுக் குடித்தன வீட்டில் அனாதையாகச் செத்துப் போகும் தங்கப்பனின் வாழ்க்கையைச் சொல்லும் அனாதை நாவலையும், இரண்டாம் உலகப்போரின் கொடூரத்தாக்குதலினால் பர்மாவை விட்டு வெளியேறிச் சிதறுண்டு பனைவிளைக் கிராமத்தை வந்து சேரும் ஒரு இந்தியக் குடும்பத்தின் அவலத்தைச் சொல்லும் மா-னீ நாவலையும் ஒரு சேர வைத்துப் பார்க்கும் நிலையில் ஹெப்ஸிபாவின் படைப்புலகம் பல்வேறு கிளைகளைக் கொண்ட பரந்து விரிந்த தளங்களையும், களங்களையும் கொண்டதல்ல என்ற உண்மை புலப்படுகிறது. அவரது படைப்புகள் ‘குடும்ப அமைப்பு’ என்ற உலகத்தைத் தாண்டி வெளியில் செல்லவே இல்லை.
இந்தியக் குடும்ப அமைப்பின் ஆதாரக் கண்ணி ‘ திருமணம்’ என்ற பந்தம் ஆகும். இந்தத் திருமண பந்தத்தை மையமாகக் கொண்டே ஹெப்ஸிபாவின் நாவல்கள், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டு, அந்தந்தப் பின்னணியில் இயங்கக் கூடிய யதார்த்தமான பாத்திரங்களை உலவ விடுகின்றன. இயல்பான குணங்களோடு வெவ்வேறு பின்னணியில் இயங்கும் இந்தப் பாத்திரங்களில், யாருடைய செயல்பாடுகளையும் நேரடியாகக் குறைசொல்லாமல், ஆனால் தன் சார்புநிலை எந்தப் பாத்திரத்தின் மேல் உள்ளது என்பதை ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்துகிறார் ஹெப்ஸிபா. சில படைப்பாளிகள் சொல்வது போல் எல்லாப் பாத்திரங்களும் அதனதன் போக்கில் பிறந்து உலாவுகின்றன; அவற்றின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பாளியல்ல என்று தட்டிக் கழித்து விட முடியாதபடி சில பாத்திரங்களின் வழி தனது வாழ்க்கை பற்றிய கோட்பாட்டைக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இப்படிச் சொல்வதன் மூலம் மற்ற பாத்திரங்களை மொண்ணைத் தனமாக இயல்பற்றனவாகப் படைத்துள்ளார் என்பது பொருள் அல்ல; ஒவ்வொரு நாவலிலும் ஒரு பாத்திரத்தின் வழி தனது சார்பை வெளிப்படுத்தியதன் மூலம் அவரின் விருப்பத்தை- வாழ்க்கை பற்றிய புரிதலைத் தெளிவு படுத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது.
பனைவிளைக் கிராமத்தில் பாரம்பரியச் செல்வாக்கோடு நின்ற புத்தம் வீடு, பாரம்பரியப் பெருமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருப்பதையோ, அந்த வீட்டின் ஆண்கள் அந்தப் பெருமையை மீட்டெடுப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையென்றோ, அந்த வீட்டின் மருமகள்கள் அடுப்படியிலும், வீட்டுச் சுவர்களுக்குள்ளும் முடங்கிப் போனது பற்றியோ ஹெப்ஸிபா கவலைப்படவில்லை. கவலைப்பட்டு இவற்றில் ஏதாவதொன்றின்பால் தன்சார்பை வெளிப்படுத்தியிருந்தால் புத்தம் வீடு கவனத்துக்குரிய நாவல்களுள் ஒன்று என்று கணிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. பழைய சமூக மதிப்புக்களில் ஊறிப்போனவர்களின் செயல் பாடற்ற தன்மையை வெளிப்படுத்திய ஒரு நாவலாக நின்று போயிருக்கும். ஆனால் பாரம்பரியச் செல்வாக்கை இழந்து கொண்டிருப்பதோடு, மாறிவரும் சமூக மதிப்புகளை ஏற்றுக் கொள்ளத் திராணி யற்ற புத்தம்வீட்டுப் பெண்ணொருத்தியின்பால் தன் சார்பை வெளிப்படுத்தியதின் மூலம், தன் நாவலுக்கு நேர இருந்த விபத்தைத் தவிர்த்துள்ளார் ஹெப்ஸிபா ஜேசுதாசன். புத்தம் வீட்டு லிஸி தன் குடும்பத்தில் தனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம், சின்னச் சின்ன அபிலாஷைகளுக்கும் தடை இவற்றையெல்லாம் மீறுகிறாள். தான் விரும்பிய ஆடவன் ஒருவனை, புத்தம் வீட்டிற்கு இருப்பதாகக் கருதிக் கொண்ட அந்தஸ்துக்குக் குறைவான ஆனால் வாழ்க்கையை, உழைப்பை நேசித்த ஒருவனை, பனையேற்றத் தொழிலாளியின் மகனான தங்கராஜுவைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதைச் சித்திரிப்பதன் மூலம், புத்தம் வீடு நாவலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாவல் என்ற இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார் எனலாம். இந்தச் சித்திரிப்பின்போது கூட புத்தம் வீட்டு லிஸி, தன் காதலுக்காக உயிரை விடவும் தயாரான, காதலை அடைய வீர சாகசங்கள் செய்பவளாகக் காட்டாமல், செயல்பாடுகளின் இயல்போடு சென்று தன் விருப்பத்தை அடைபவளாகக் காட்டியுள்ளார்.
புத்தம் வீட்டின் லிஸியின் மீது தன் சார்பை வெளிப்படுத்தியதன் மூலம் ஹெப்ஸிபா தனது வாழ்க்கை பற்றிய புரிதலைத் தெளிவு படுத்தியுள்ளார் எனலாம். பழைய சமூக மதிப்புகளும் வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன; மாறிக் கொண்டிருக்கும் போக்கில் லிஸியைப் போன்றவர்களே தனது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றார் எனலாம். இந்த வெளிப்படுத்துதலின் மூலம் மாற்றத்தை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றார் எனலாம். இந்த வெளிப்படுத்துதலின் மூலம் மாற்றத்தை எதிர்கொள்பவர்களின் பக்கம் நிற்காமல் பழைமையின் பக்கம் நின்று கண்ணீர் விடுவதோ, குடும்பப் பாரம்பரியம் தகர்ந்து விட்டது என்று புலம்புவதோ சரியான இலக்கியமன்று. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்பவர்களின் பக்கம் நிற்பதே சரியான இலக்கியவாதியின் கடமை என்ற நிலைபாட்டோடு அதையே தனது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டிருந்தார் என்றும் உணர முடிகிறது.
ஹெப்சிபாவின் முதல் நாவலான புத்தம் வீட்டில் வெளிப்படும் வாழ்க்கை பற்றிய, இலக்கியம் பற்றிய இந்தக் கோட்பாடுகள் பிந்திய நாவல்களிலும் தொடர்ந்து வந்துள்ளன. பனைவிளைக்கிராமத்தின் பனையேறிக் குடும்பத்து முதல் தலைமுறைப் படிப்பாளியான செல்லப்பா தன் திருமண உறவுகளை அமைத்துக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். மருத்துவப் படிப்பைத் தொடங்கிய முதல் வருடமே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறான். அந்த வட்டாரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவரும் எஸ்டேட் ‘ ஓணரு’மான ஜஸ்டின் ராஜின் மகள் எமிலியைத் திருமணம் செய்து கொள்ள நேருகிறது. அவனது மருத்துவப் படிப்புத் தொடர வேண்டுமானால், அதைத் தவிர வேறு வழியில்லை. அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து அவனது தந்தை இறக்க, அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் மணமக்கள் பிரிக்கப்படுகின்றனர். பணத்தையும் எமிலியையும் கொடுத்து செல்லைப்பனை விலைக்கு வாங்கிவிட்டதாக நினைத்த ஜஸ்டின்ராஜ் அதிர்ச்சியடையும்படி செல்லப்பன் நடந்து கொள்கிறான். எமிலியை முழுவதுமாக விலக்கி விடுவது என்று முடிவு செய்கின்றான். பழைய சம்பிரதாயங்களும் கற்கோயில் மாதா முன்னால் கொடுத்த திருமண ஒப்புதல்களும் அவனை ஒன்றும் செய்யவில்லை.
படிப்புத் தொடர்கிறது; மனம் புதிய ரசனைக்கு, சமூக மதிப்புகளுக்குத் தாவுகிறது; புதிய வாழ்க்கையைத் தேடுகிறது; தேர்ந்தெடுக்கிறது. கல்லூரி வாழ்க்கையின் போது இசை மூலம் தனது மனதில் இடம் பிடித்த கமலாவையொத்த, இசையில் விருப்பமுடைய, பாடுவதில் வல்லமையுடைய வசந்தாவை மனைவியாக்குகிறான். இடையூறாக நின்ற சாதி, மதம், அம்மா, படிக்க வைத்த அண்ணன், அண்ணி முதலான அனைத்து உறவுகளையும் ஒதுக்கி விடுகிறான். தன் விருப்பம்போல மனைவியைத் தேடிக் கொண்ட செல்லப்பன் , டாக்டர் செல்லப்பாவாக மாறி நடுத்தர வர்க்கத்துக் கணவன் – மனைவிகளுக்கிடையே ஏற்படும் சகலவிதமான சந்தேகத்தோடும் , சுகதுக்கங்களோடும் செத்துப் போகிறான்.
இந்த நாவலிலும் ஹெப்ஸிபா தன் சார்பைச் சரியான புரிதலிலேயே வெளிப்படுத்தியுள்ளார். தான் செய்வது இன்னதென்று தெரியாமலமேயே, தந்தையின் சொல்கேட்டு கணவனை உதாசீனப் படுத்திய எமிலியைச் செல்லப்பன் அறவே ஒதுக்கி விட்டபொழுது அவனை ஆசிரியர் நிந்திக்கவில்லை. அந்த அறியாப்பருவத்துப் பெண்ணின் சார்பாளராக மாறவில்லை. கிராமத்துச் சமூகத்திலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கைச் சூழலுக்கு மாறும் மனிதர்களின் வாழ்க்கை மாற்றத்தில் இத்தகைய பிடிவாதமும், சுதந்திரமான, மனம் விரும்பியபடி – துணையைத் தேடிக் கொள்ளத் தூண்டும் போக்கும் நிலவும் என்கின்ற சமூகநிகழ்வைச் சரியாகப் புரிந்து கொண்டவராக ஹெப்ஸிபா தன்சார்பை செல்லப்பாவின் பக்கமே வெளிப்படுத்துகின்றார். செல்லப்பன் வசந்தாவை மணந்து கொண்டதைப் பற்றி எமிலி என்ன நினைத்தாள், அவள் வாழ்க்கை என்னவாக ஆனது, என்பது பற்றிக் கூட ஹெப்ஸிபா தம் நாவலில் எழுதவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் முதல் தலைமுறைப் படிப்பாளி ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் படம் பிடிப்பது மட்டுமாகவே இருக்கிறது.
மூன்றாவது நாவலான ‘அனாதை’ வடிவ ரீதியாகவும் கதையைச் சொல்வதிலும் தெளிவற்ற தன்மையைக் கொண்டுள்ளது. இந்நாவல், படித்த ஆனால் வேறொரு சூழலில் வாழ வேண்டிய இளைஞன் ஒருவனின் குடும்ப உறவுகளைச் சித்திரிக்கிறது. தங்கராஜுவின் மகள் ரோஸம்மா, தங்கப்பன் மீது காதல் கொண்டு, பெற்றோரை விட்டுவிட்டு, அவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை உதறிவிட்டு தங்கப்பன் தங்கியுள்ள நாகர்கோவிலுக்கு வந்துவிடுகிறாள். அவளது துணிவு தன் மீது கொண்ட காதலை உணர்த்துவதாகவும், தனக்கும் அவள் மீது அன்பு, காதல் என்ற நிலைக்கு உரியது என்று உணர்ந்த போதிலும் அவனது அனாதை மனது அதை மறுக்கிறது. தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தங்கராஜூ மாமா குடும்பத்திற்கு நேரக்கூடிய அவமானத்தை மனதில் கொண்டு, ரோஸம்மாவின் காதலை ஏற்க மறுக்கிறான். ரோஸம்மாவை பனைவிளக்கே அழைத்துவந்து , பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு திருவனந்தபுரம் போய்விடுகிறான். டுடோரியல் காலேஜில் கிடைக்கும் சம்பளத்திற்கேற்ப, ஆஸ்பத்திரிக்கிளார்க்கின் மகள் மேரியைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆஸ்பத்திரி கிளார்க் வேதமாணிக்கம் கூட அவன் அனாதை என்பதைத் தெரிந்து முதலில் தயங்கினார். பின்னர் அவரது பெண்ணிற்கும் வேறு வழியில்லை என்ற நிலையில் தங்கப்பனுக்குப் பெண் கொடுக்கிறார். திருமணத்திற்குப் பின் தகப்பன் தனிக்குடித்தனம் போவது, குடும்பத்தை நடத்தச் சிரமப்படுவது என்பதோடு பனைவிளைக் கிராமத்தோடு தொடர்பு ஏற்படுவது என்பதாக நாவல் நகர்கிறது. ரோஸம்மாவின் தம்பியும், தங்கராஜுவின் மகனுமான ஞானபாலனின் திருமணத்தையொட்டி குடும்பத்தோடு பனைவிளைக்குப் போகிறான். தங்கப்பனின் மனைவி மேரிக்கு, ரோஸம்மாவோடு தங்கப்பனுக்கு இருந்த பழைய நட்பு தெரிய வருகிறது. அதனால் எழுந்த சந்தேகமும் தாழ்வு மனப்பான்மையும் குடும்பத்தில் நிலவிய நல்லுறவையும் சகஜநிலையையும் சிதைத்து விடுகின்றன. இரண்டாவது பிரசவித்தின் போது மேரி செத்துப் போக, குழந்தையும் அவனிடமிருந்து பிரிக்கப் படுகிறது. ‘அனாதை’ யென உணர்ந்த தங்கப்பன் தற்கொலை செய்து கொள்கிறான்.
தன் படிப்பின் மூலம் கௌரவமான நிலையை அடையும் செல்லப்பாவின் குடும்ப உறவுகளையும், சுதந்திரமான இயக்கங்களையும், ‘டாக்டர் செல்லப்பா’வில் சித்திரித்த ஹெப்ஸிபா, ‘ அனாதை’யில் படிப்பு மட்டுமே உடைய ஒருவன் தன் குடும்ப உறவுகளை அமைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம். தங்கப்பனிடம் படிப்பும், அதுதந்த காதல் பற்றிய , குடும்பம் பற்றிய, எதிர்காலம் பற்றிய புதிய சிந்தனைகள் இருந்தன என்றாலும் அவனது பொருளாதார நிலை அதனை நிறைவேற்ற இடந்தரவில்லை. ரோஸம்மையை ஏற்றுக் கொள்ள மனசு விரும்பினாலும், ‘செய்ந்நன்றி மறப்பது தவறு’ எனச் சிந்திக்கச் செய்கிறது. தங்கப்பனுக்கு ரோஸம்மையிடமிருந்த அன்பை அறிந்த மேரி, அவனைக் குத்திக் காட்டும்போதெல்லாம் ரோஸம்மையின் தியாகத்தை அவனது மனசு அசை போடுகிறது. தன் நினைவாகத் திருமணமே செய்து கொள்ளாத ரோஸம்மைக்குத் தான் செய்த துரோகமே தன்னைப் பழிவாங்குவதாக உணர வைக்கிறது. ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கே செல்லப்பா எடுக்கும் முடிவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். தான் விரும்பிய பெண்ணிற்காக அனைத்து உறவுகளையும் தூக்கி எறிகின்றான் செல்லப்பா. செல்லப்பாவுக்கும் தங்கராஜுவிற்கும் இடையே உள்ள மனநிலை வேறுபாட்டிற்குக் காரணம் அவர்களின் பொருளாதாரச் சூழமைவேயன்றி வேறில்லை. செல்லப்பா கிராமத்தில் தனக்கென இருந்த வேர்களை – பொருளாதார உறவுகளைத் தானே அறுத்துக் கொண்டான். அவ்வேர்களே அவனை மேல்மத்தியதர வர்க்க வாழ்க்கைக்குரியவனாக்குகிறது. ஆனால் தங்கராஜுவோ வேர்களற்றவன்.கிராமத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டு நகரத்தில் எறியப்பட்டவன். கீழ் மத்தியதர வர்க்க வாழ்க்கையின் பிரதிநிதி. அவனது விருப்பங்களும் ஆசைகளும் கானல் நீராகிப் போவது இன்றைய சூழலில் யதார்த்தமான ஒன்றேயாகும். இங்கும் ஹெப்ஸிபா சமூக நிகழ்வின் சரியான புரிதலை உணர்ந்து கொண்டவர் என்பதைக் காட்டி விடுகின்றார். கல்வி, வேலை, வாழும் இடம் முதலியவற்றால் கிடைக்கும் புதிய சிந்தனைகள் மனதில் இருந்தாலும் ஒருவனது பொருளாதாரப் பின்னணி அவனது வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நாவலைப் படைத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
கடைசியாக வெளி வந்துள்ள மா-னீ, அவரது முதல் மூன்று நாவல்களின் படைப்புலகத்திலிருந்து சற்று விலகியது. இந்நாவலில் குடும்ப உறவுகள் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணியில் நிறுத்தப்படாமல், உலகப்போர் என்ற பெரும் நிகழ்வொன்றின் பின்னணியில் நிறுத்தப்பட்டுள்ளன. உலக மொழிகள் பலவற்றிலும் உலகப்போரின் விளைவுகள் பற்றிய நாவல்கள் வந்துள்ளன என்றாலும் தமிழில் மிகவும் குறைவு.
மா-னீ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. இரண்டாம் உலகப்போரின் உக்கிரம் ஒரு குடும்பத்தை எவ்வாறு அலைக்கழித்தது என்பதைச் சொல்வது முதல் நோக்கம். இரண்டாவது நோக்கம், பர்மீய வாழ்க்கை முறையோடு இந்தியாவிலிருந்து போன காட்டிலாகா அதிகாரி ஒட்ட முடியாமல் தவிப்பதும், அவரது மகன்கள் அந்த வாழ்க்கையோடு கலந்து விட முயல்கையில் அவருக்கு ஏற்படுகின்ற அதிர்ச்சியை வெளிப்படுத்துவதும் ஆகும். முதல் நோக்கம் நாவலில் முறையாகத் தரப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் மகன்கள் இருவரையும் பர்மாவிலேயே விட்டுவிட்டு தந்தை, தாய், இளம்வயதுப் பெண் ஆகிய மூவரும் இந்தியாவிற்குக் கிளம்புகின்றனர். கிளம்பிய அன்றே மகள் பிரிந்து விடுகிறாள். அவளை மட்டும் சுமந்து கொண்டு ரங்கூன் செல்லும் ரயில் கிளம்பி விடுகிறது. தாயும் தந்தையும் கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் அரக்கன்யோமா மலைகளைத் தாண்டி இந்தியாவிற்கு வரும் வழியில் மகள் காது நகைகளையும் ஒரு காதையும் இழந்து மூளியாகி சொந்த ஊரான பனைவிளையை அடைகிறாள். பல நாட்கள் கழித்து தாய் வந்து சேருகிறாள். கையில் பணம் எதுவும் இல்லமல் வந்த அவர்களை உறவினர்கள் சரியாக வரவேற்கவில்லை. பின்னர் மகன்களில் ஒருவன் ஒரு கண்ணை இழந்தவனாய், கையில் போதிய பணத்தோடு வந்து தங்கையை சுதந்திரப் போராட்ட வீரன் ஒருவனுக்கு மணம் முடித்து வைக்கிறான். இன்னொரு தமையன் என்ன ஆனான் என்பதே தெரியவில்லை. நாவல் ஒருவழியில் சுபமாக முடிகிறது.
மா-னீ ஒரு வகையில் ‘சுயசரிதை போல’ என்ற குறிப்புடன் வந்துள்ளதால் அவரது சார்பு வெளிப்படும் என்று எவரையும் அடையாளங்காட்ட இயலவில்லை. கிரேஸ் அழகுமணி, ராணி என்ற பெயர்களோடு ‘மானீ’ என்ற அழைக்கப்பட்ட, அந்தக் குடும்பத்தின் இளம் பெண்ணின் பார்வையிலேயே நாவல் செல்கிறது. என்றாலும் ஹெப்ஸிபா குடும்ப உறவுகளில் தான் வெளிப்படுத்தும் ஒரு சார்பினை இந்நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
காட்டிலாகா அதிகாரியின் மூத்த பையனான ரஞ்சன் தான் பர்மீயப் பெண்ணொருத்தியை – செல்வராஜுவின் கௌரவத்திற்குக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவளை – விரும்பி, கர்ப்பமடையச் செய்துவிட்ட நிலையில், அதை நாவலாசியர் விலகி நின்றே பார்க்கின்றார். அதை ஏற்க மறுக்கும் செல்வராஜுவின் செயல்பாடுகளைக் காலத்தோடு ஒட்டாத தன்மையுடையன என்பதைத் தான் எழுதும் தொனியிலேயே வெளிப்படுத்தி விடுகிறார்.
ஹெப்ஸிபாவின் நான்கு நாவல்களையும் அவற்றில் வெளிப்படும் சார்பு நிலையையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால், அவரது வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளும், சமூகம் பற்றிய கோட்பாடுகளும் வெளிப்படுவதை அறியலாம். ஹெப்ஸிபா தன் காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையும் சமூக மதிப்புகளும் மாறி வருகின்றன என்பதை உணர்ந்தவராகத் தன்னை அடையாளங்காட்டுகின்றார். மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ‘சிலவகைப்பட்ட மனிதர்’களின் செயல்பாடுகளின் நியாயப்படுத்துவது அவசியம் என்பதையும் உணர்ந்தவராக வெளிப்படுகின்றார். இந்த நியாயப்படுத்தும் தன்மை, குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரச் சூழநிலையில் குறிப்பிட்ட வகையான தன்மையைக் கொண்டதாக அமையும் என்ற சமூகத்தின் இயங்கியலைப் புரிந்து கொண்டவர்களின் தன்மையாகும்.
சமூகத்தின் இயங்கியல் தன்மையைப் புரிந்து கொண்ட ஹெப்ஸிபாவின் வாழ்க்கை பற்றிய கோட்பாடு அதன் போக்கிலேயே அவருக்குரிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. அந்தக் கோட்பாடே யதார்த்தவாதம் (realisam ) என்பது. இந்த யதார்த்தவாதம், பனைவிடலிகளின் சப்த ஒழுங்கையும், பனையேறிகளின் கோவணத் தையும், அக்காணியின் மணத்தையும், கல்லூரிக் காதலர்களின் கற்பனையையும், அனாதைப் பையனின் வறுமைத்துயரத்தையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதோடு நின்று விடுகிற இயல்புநெறிவாதத்திலிருந்து (Naturalism ) விலகி, சமூக வளர்ச்சியைப் புரிந்து கொண்ட ஆசிரியர், யார் பக்கம் தன் சார்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் தன்மையதாகும். இதுவே ஹெப்ஸிபாவின் இலக்கியக் கோட்பாடாகும். இந்த இலக்கியக் கோட்பாடே – சமூகத்தை வளர்ச்சிப் போக்கில் நகர்த்தும் தன்மையுடைய இலக்கியக் கோட்பாடே – அவருக்கு நாவல் வரலாற்றுக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையினைப் பெற்றுத் தந்தது எனலாம்.
http://ramasamywritings.blogspot.com/2012/02/blog-post_10.html