தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -
சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும் என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப் பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்.
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக் களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்கு இவர்தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல் மேற்கு, கீழ் கிழக்கு வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமும்’ என்கிற தலைப்பிலான இவரது ஆய்வு பரவலாகக் கவனம் பெற்ற ஒன்றாகும். சிந்துவெளிப் பண்பாட்டிற்கான திராவிட அடித்தளத்தைப் பண்பாட்டு ஆய்வுகளின் பின்புலத்தில் நிறுவியவர் பாலகிருஷ்ணன். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 2017இல் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.