நதியில் நகரும் பயணம் 12: அம்ஸ்ரடாம்! - நடேசன் -
- 72 கிலோ மீட்டர் நீளமுள்ள 'அம்ஸ்டர்டாம்- றைன் கால்வாய் (Amsterdam–Rhine Canal) -
ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். எஇலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக இருந்தவர் எனவும் – அதற்கான ஆதாரங்களை காட்டினாள்.
இப்படிப் பல தொடர்புகள் ஒல்லாந்துடன் நாங்கள் கொண்டதால் ஒல்லாந்தை மேலும் அறிவோம். அம்ஸ்டர்டாமில் நான்கு நாட்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்தேன். ஆனால், இரண்டு முக்கிய விடயங்கள் நான் பார்க்க நினைத்தவை ; அனி ஃபிராங் மியூசியம் , வான்கோ மியூசியம். ஆனால், குறைந்தது இரண்டு கிழமைக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும் என பின்னால் புரிந்துகொண்டேன். எனது படகில் பலர் முன்னேற்பாடாக பதிவு செய்திருந்ததைப் பார்க்க எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருந்தது.
கோலோனில் இருந்து ரைன் நதி வழியாக புறப்பட்டு எங்கள் படகு மிகவும் பிசியான செயற்கையாக வெட்டப்பட்ட 72 கிலோ மீட்டர் (Amsterdam–Rhine Canal) வழியாக அம்ஸ்டர்டாம் வந்தது. இந்த கால்வாயை, ஒரு வருடத்திற்கு ஆயிரம் கப்பல்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.