லண்டனில் ‘சுவடுகள்’இ ‘பூப்பும் பறிப்பும்’ வெளியீடு! - மீனாள் நித்தியானந்தன், லண்டன் -
லண்டனில் எஸ். அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலும் அவரின் புதல்வி நவஜோதி ஜோகரட்னத்தின் ‘பூப்பும் பறிப்பும்’ சிறுகதைத் தொகுப்பும்; கடந்த வாரம் (8.6.2024) ஹரோ ஐயப்பன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலுக்கு தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் ந. சுசீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில்: ’எஸ். அகஸ்தியர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஜேர்மனியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் அகஸ்தியர் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்தியதில் நான் பெருமைப்படுகின்றேன். அவரது நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுகள் என்பன ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அரசன்பே சரித்திரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு நூல் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எளிமையாகப் பழகவல்ல அகஸ்தியர் அவர்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்கள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த இலக்கியப் பெருமகன் ஆவார். அவர் மறைந்த இருபத்தியொன்பது ஆண்டுகள் கழித்து இந்நூல் அவரது புதல்வி நவஜோதி ஜோகரட்னம் வெளியிடுவது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.