சமீபத்திய இரு மலேசிய நாவல்கள்! - சுப்ரபாரதி மணியன், திருப்பூர் -
1. நாவல்: கருங்காணு! - அ ரங்கசாமி
மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள்.
1940களில் தொடங்கி சுமார் 20 ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல் மலேசிய தமிழர்கள் மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .
இந்த நாவலில் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பாம் ஆயில் எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .