ரொறன்ரோவில் பரதநாட்டிய அரங்கேற்றம். - குரு அரவிந்தன் -
சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.
சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.