உன் கடவுளிடம் போ! - கே.எஸ்.சுதாகர் -
* தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம்
தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது. தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை. `இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது. இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.