நேர்காணல்: கவிஞரை அறிந்துகொள்வோம் – அவருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! - லதா ராமகிருஷ்ணன் -
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைத் தமிழ்க்கவிஞருக்கு ஆதரவுக்கரம் நீட்டுதல்'
பாரதி இன்று இருந்திருந்தால் சக கவிஞர் ஆத்மாஜீவின் இன்றைய நோய் வருத்தும், நிதிநெருக்கடி அலைக்கழிக்கும் நிலைக்காக வருந்தி மேற்கண்டவாறு தனது கவிதையின் இறுதிவரியை மாற்றியமைத்திருக்கக்கூடும். கவிஞர் ஆத்மாஜீவ் முகநூற் பக்கம் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன்: தரமான கவிஞராக உங்களை அறிவேன். நீங்கள் நடத்திய காலக்ரமம் சிற்றிதழ்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய ஓரிரு கவிதைகளும் அதில் வெளியானதாக நினைவு. இருந்தாலும் உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தாருங்கள். இலக்கியத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ஆத்மாஜீவ்: இயற்பெயர் வி.சி.இராஜேந்திரன், 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்து 28 ஆண்டுகள் அங்குதான் வளர்ந்தேன் வாழ்ந்தேன். கந்தக நிலத்திலிருந்துதான் எனது கலை இலக்கிய வாழ்க்கை துவங்கி வளர்ந்து அவ்விடத்திலேயே முடிந்தது. 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததுதான் எனது கலை சம்பந்தமான துவக்கமாக இருந்தது. நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் தான் எழுத்தார்வம் நாடகத்திலிருந்து சிறுகதைக்கும். கவிதைக்குமாக இடம் பெயர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கலீல் ஜிப்ரானின் "முறிந்த சிறகுகள்" தொகுப்புதான் என்னை கவிதை எழுத கவர்ந்திழுத்தது. அந்த வயதில் எனக்கேற்பட்ட பால்ய காதலின் ஈர்ப்பில் அந்த பெண்ணுக்காக வடிவமைத்து கவிதையென நினைத்து எழுதிப் பழகினேன்.