சிறுகதை : அதிகாரம் - சுப்ரபாரதிமணியன் -
சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூசச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான். இடது கையால் அதன் மேல் படாலென்று தட்டு தட்டினான் . தண்ணீர் பொலீரென்று கொட்டி விடும் என்று நினைத்தான். பேருந்து நிறுத்தங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை இப்படி தலையில் தட்டி காசை வரவழைத்த இரு முறை நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து போயின அது போல் இப்போதும் திரும்பத்திருமப அதன் மேல் தட்டினால் தண்ணீர் குபுக்கென்று கொட்டும் என்பதை திடமாய் நம்பினான். . வாஷ்பேசின் கீழ்ப்பகுதியில் இருக்கும் திறந்து மூடும் உபாயத்தை திருகினான். தண்ணீர் வராதது அவனை எரிச்சலடையச் செய்தது. கழிப்பறையிலிருந்து வெளிக்கிளம்பிய் நாற்றம் ரொம்ப நேரம் அங்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.
அவன் பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ள கழிப்பறையைத்தான் பயன்படுத்துவான். அலுவலகத்தில் மற்றவர்கள் இந்தக்கீழ்த்தளக் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள். மற்றவர்கள் என்றால் அய்ந்து பேர். நான்கு பேர் வெளிப்புறப் பணியாளர்கள். இன்னொரு அறையில் கணினியோடு மல்லாடும் ஒருவர் ஆறாவது விரல். முக்கியமான விரல் அவர். பழனி மேல்தளத்தில் உள்ளக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குக் காரணம் அவன் அதிகாரி. ஆறு பேருக்கு அதிகாரி அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்வதால் கையோடு கீழ்த்தளக்கழிப்பறை வாஷ்பேசினை டிபன்பாக்ஸ் கழுவப் பயன்படுத்துவார். இன்னும் இரண்டு தொலைபேசி இணைப்பகங்கள் தெற்கு, கிழக்கு என்று ஏழு கி.மீ தூரத்தில் இருந்தன. அவையும் அவனின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றில் இருவர், நால்வர் என்று பணியாட்கள் இருந்தனர்.எல்லாம் நகரின் மத்தியிலிருந்து தூரத்தில் பொதுமக்களின் பெரும் சேவைக்கென எப்போதோ உருவாக்கப்பட்டவை. ( ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. 1,76,000 கோடி ஊழலுக்குப் பின்னும் உயிர்த்திருக்கும் துறை ) . அவர்கள் இந்தத் தலைமையகத்திற்கு பெரும்பாலும் வரமாட்டார்கள். குட்டி ராஜ்யத்தின் அதிகாரி பழனி.