நனவிடை தோய்தல் (4) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் : 'டபிள் டெக்கர் பஸ்' பயணம் - இந்து லிங்கேஸ் -
கீரிமலையிலிருந்து ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒன்றென புறப்பட்டஇ.போ.ச769 லைனில ஒன்று இப்ப யாழ்ப்பாணத்தில தரித்து நிற்குது.அது இனி வெளிக்கிட்டால் சாவகச்சேரி வந்து கொடிகாமம் போகும். பிரிட்டிஷ்காரன் கொடுத்த டபிள் டெக்கர் பஸ். தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் வாழ்ந்து அகிம்சைவழி அரசியல் சூடு பிடித்துப்போய் காற்றின் குளிர்மையில கனவுகள் பூத்த காலமது..
பஸ் வெளிக்கிடுது. மேல்தட்டில இடம் பிடிச்சாச்சு.ஒரு மூலையில யன்னல்பக்கமா இருந்தா வடிவா ஊர் மனைகளையும், மரங்களையும், வடிவான நாச்சார் வீடுகளையும் ரசிச்சுக்கொண்டு போகலாம்.அங்கே இருந்தா அந்த முக்கால் மணித்தியாலத்துக்கு மனச்சிக்கல் எல்லாம் மறந்துபோகும்.ஓடிற பஸ்ஸின்ர வேகத்தில புழுதி கிளம்பி போறவாற சனங்கள் நிண்டு கண்களைப் பிசுக்குவது தெரியுது. மண்ணும் சேர்ந்து கிளம்ப காத்தில பாவாடை பறந்திடுமோ என்ற பயத்தில சட்டென இறுக்கிப்பிடிக்கும் பெண்கள். குடும்பமே கதியென அடுப்பின் வெக்கைக்குள் சிறை கொண்ட தாய்க்குலம் சுதந்திரக் காற்றை அணுகி கொடிகளில தோய்த்த உடுப்பைக் காயப்போட்டுக் கொண்டு அண்ணாந்து பஸ்ஸைத்தான் அவர்களின் கண்கள் ஆவலாய் மேயுது. எனக்கு இவையெல்லாம் வேடிக்கை.இடையில யாராவது இறங்கவேண்டுமென்றால் பெல்லை அடிக்க வேணும். அந்தச்சத்தம் மட்டும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்று என்ர காதுக்குள்ள கத்தும். கண்ணை மூடி அயந்துபோனாலும் அந்த ஊர் தன் பெயரை பலாப்பழ, மாம்பழ வாசத்திலேயே தட்டி எழுப்பிப்போடும் .