
என் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 2020 ஏப்ரலில் Costa Ricaவுக்குப் போகலாமென எங்கள் நான்குபேருக்குமான விமானச் சீட்டுகளையும் மூத்த மகள் கொள்ளவனவு செய்திருந்தா. ஆனால், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகச் சொல்லிக்கொள்ளாமல் வந்த கொரோனா எங்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. சரி, அறுபத்தைந்தாவது பிறந்தநாளுக்காவது அங்கு போகவேண்டுமென நினைத்தோம். ஆனால், அதைவிட மேலான சந்தோஷங்களைத் தருகிறேன் என வாழ்க்கை முன்வந்தது. கர்ப்பமடைந்திருக்கும் மூத்த மகளும், மருத்துவப் பயிற்சியில் இருக்கும் சின்ன மகளும் கொஞ்சக் காலத்துக்குப் பயணம்செய்ய முடியாதென்றானபோது, தானாவது எங்காவது என்னைக் கூட்டிச்செல்வது வேண்டுமென மற்ற மகள் விரும்பினா.
அதன்படி ஒரே பிறந்தநாளைக் கொண்ட நாங்கள் இருவரும் மட்டும் பயணம் செல்வதென முடிவானது. எங்கே செல்லலாம் என்றபோது பயணத்துக்காகச் செலவழிக்கும் நேரம் குறுகியதாகவும், போகுமிடம் உறையவைக்கும் ரொறன்ரோவின் காலநிலைக்கு எதிரான காலநிலையைக் கொண்டதாகவும் இருக்கவேண்டுமென நினைத்தோம். அதற்குப் பொருத்தமானதாக இடமாக Aruba இருந்தது. சில தேடல்களின் பின் பயணசீட்டுக்களையும் மகள் வாங்கிவிட்டா. இருந்தாலும், அதுவும் சாத்தியப்படுமா என்ற ஐயத்தைத் தலைகீழாக விழுந்துபோன விமானமும், ரத்துச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த விமான சேவைகளும் வலுவாக ஏற்படுத்திக்கொண்டிருந்தன.
ஆனாலும், முடிவில் Aruba here we come எனப் புறப்பட முடிந்திருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தாலும்கூட, சேர வேண்டிய நேரத்துக்கு எங்களைக் கொண்டுபோய் சேர்ந்திருந்தார் அந்த விமானி. எங்களின் விமானம் முழுவதும் Aruba சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது என்றால், விமான நிலையமோ சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிவழிந்தது. குடிவரவுக்குச் செல்வதற்கான வரிசை முடிவில்லாத வளைவுகளுடன் மிக நீண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலிருக்கும் நேரங்களில் Don Valley Parkway இல் இருப்பதுபோல, அந்த வரிசையும் அசைவற்று நின்றிருந்தது. Skip the line? என்ற பதாகைகளுடன் உத்தியோகபூர்வமான உடைகளில் அங்குமிங்குமாக மாறிமாறி சிலர் நடந்துகொண்டிருந்தனர். விசாரித்தபோது, நாங்கள் நிற்குமிடத்திலிருந்து குடிவரவுப் பிரிவுக்குச் செல்வதற்கு 1 ½ மணி நேரத்துக்குக் கிட்டவாகச் செல்லுமென்றும், ஒருவருக்கு US$155 செலுத்தினால், காத்திருக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்கள். வித்தியாசமான வகையில் லஞ்சம் வாங்கும் ஊழலென எனக்கு அந்த நாட்டின் மீது சற்றுக் கோபம் வந்தது. மகளின் அந்தக் காத்திருப்பு நேரத்துக்கு அந்தக் காசு worthஆ என்று கேட்டேன். அதற்கு அவ, விடுமுறைக்காகத்தானே வந்திருக்கிறோம், எந்த அவசரமும் இல்லை என்றா. முடிவில் அடுத்த 20 நிமிடத்தில் விமானநிலையத்தை விட்டு வெளியேறிவிட்டோம். அதை அறிந்தால் US$155 கொடுத்து முன்சென்றவர்கள் கவலைப்படுவார்களா என்று யோசித்தேன் (ஆனால் பயணத்தின்முடிவில் அப்படிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது விளங்கியது, அங்கு வந்திருந்தவர்களில் பலர் அத்தனை பணம்படைத்தவர்கள்தான் இருந்தார்கள்).