பகுதி–3
“மாறும் உலகின் முகம்”
இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.
இதற்கான சான்று அல்லது ஆதாரங்களை வெளிகாட்டி நிற்கும் தடயங்கள் இருவகைப்படுகின்றன. ஒரு புறம், அவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்காவின் உள்விவகாரங்களுக்கு உள்ளேயே, அடங்கி போகின்றன. (உலக நாடுகளில் இருந்து வெவ்வேறு விதத்தில் அமெரிக்கா கடன் பெற்று இயங்கும் ஒரு போக்கும், அதற்கான அதன் திட்டங்களும், இவ்வடிப்படையில் இருந்து எழும் அதன் கடன்பெறும் உச்ச வரம்பின் எல்லைப்பாடும், இதனுடன் சேர்ந்து ஒலிக்கும் கேள்விகளான டாலரின் ஆதிக்கம் ,காசடிக்கும் நடைறை அல்லது திறைசேரி முறிகளை விற்று பணம் பறிக்கும் முறை) போன்ற விவகாரங்களில், இதற்கான தடயங்கள் வெளிப்பட செய்கின்றன.
இதனுடன் இணைந்தாற்போல், அமெரிக்கா, அண்மையில் மேற்கொண்ட Hypersonic ஏவுகணையின் தோல்வி ARRW (13.02.2023) பின் இங்கிலாந்தின் VIRGIN ORBIT போன்ற விண்வெளி நிகழ்ச்சிகளின் தோல்வி (09.01.2023) பின் ஜப்பானிய முதல்தர விண்வெளி ராக்கெட்டின் ஏவுதலின் போதான தோல்வி (07.03.2023) -இவை அனைத்தும் மேற்கின் தொழில் நுட்ப அல்லது இராணுவத் துறையின் பின்னடைவுகளைச் சுட்டும் அதேவேளை இம்மூன்று பிரதான நிகழ்வுகளுமே, இவ்வருடத்தின் முதல் ஆரம்ப மாதங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற தோல்விகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.