வாசிப்பு அனுபவம்: வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனின் “டாக்டரின் தொணதொணப்பு” - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஒரு வைத்தியருடன் நோயாளர் கொண்டுள்ள அன்புறவு என்பது எல்லா வைத்தியர்களாலும் இலகுவில் பெறக்கூடியதல்ல. முதலில் டாக்டராக சந்திக்க வரும் நோயாளர் நீண்ட காலத்தின் பின்னும் உறவாக நினைத்து 'அந்த முகத்தை ஒருக்கா பாத்திட்டு போவம்' என்ற உணர்வுடன் சந்திக்க வருவதும், தமது நோய்நிலை மறந்து மகிழ்வதும், டாக்டர். எம். கே. முருகானந்தன் அவர்களின் மருத்துவ அனுபவங்களில் உன்னதமான ஒரு பகுதி. பெருமை கொள்ளலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பு மட்டுமே 'டாக்டரின் தொணதொணப்பு'. மற்றப்படி நோயாளரின் மனதில் அவர் பற்றிய நினைவுகள் அருமருந்து.
இவரது சிறப்பான மருத்துவ அம்சமாக , தன்னுடைய நோயாளரின் நோய்நிலைத் தகவல்களை 1999 ம் ஆண்டில் இருந்தே கணினி மயப்படுத்திப் பாதுகாப்பதைக் கூறலாம். நோயாளரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த நடைமுறையை இன்றும் இலங்கையில் சிலரே கைக்கொள்கின்றனர்.
புத்தகத்தின் ரசனைக் குறிப்பில் திரு.இ.து.குலசிங்கம் அவர்கள் கூறியிருப்பது போல 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக்காதல் நோயாளன் போல் ..' எனும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தினை ஒத்ததாக, இந்த டொக்டரின் மேல் காதல் கொண்ட நோயாளர் மிக அதிகம் என உணர்கிறேன். அதுவே அவரது இளமைக்கும் வெற்றிகளுக்கும் காரணமாகலாம். இவர் வைத்தியராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் இருப்பது மேலதிக சிறப்பு.