ஓராயத்துடனான எனது பயணம்! - க. குருபரன் -
- இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பு பற்றியும், அதனுடனான தனது பயணம் பற்றியும் பொறியியலாளர் க.குருபரன் தன் எண்ணங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றார். புகைப்பட உதவி - ஓராயம். - பதிவுகள்.காம் -
சமூகப்பணி என்பது எனக்கு இளவயதில் இருந்து இயல்பாக வந்ததொன்று. இருப்பினும் நீண்ட காலமாக ஒரு சில காரணத்திற்காக, நல்ல விடயங்களுக்கு நிதி உதவி அளிப்பது, சிறுசிறு பணிகளை நானே செய்வது தவிர, அமைப்புரீதியாக செயல்படுவதைத் தவிர்த்து வந்தேன். ஒரு சில காரணத்திற்காக என்று பொதுப்படையாக கூறிய போதிலும், எனது குணாம்சங்களுடன் கூட்டாக இயங்குவது கடினமானது என்பதே முக்கிய காரணமாகும்.
2020இல் ஒரு சூறாவளி போல் எம்மைக் கடந்து சென்ற பெருந்தொற்று உலகில் பல மாற்றங்களை செய்தது போல், எனது வாழ்விலும் இந்த விடயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட வித்திட்டது. மன உளைச்சல், அழுத்தத்துடன் என்ன செய்வதென்றறியாது எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலமது. இதில் இருந்து ஓரளவேனும் விடுதலை பெற ஏதாயினும் செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் உலகெல்லாம் பரந்து, தொடர்புகள் அற்று சிதறி வாழும் எமது பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து ஏன் கலந்துரையாடக்கூடாது என்ற எண்ணம் எமக்கு வந்தது. யாழ் இந்துவில் 1971 -1978 இல் படித்த நாம், எம்மால் தொடர்புகொள்ள முடிந்த எல்லோரையும் இணைத்து ZOOM ஊடாக இணைந்தோம். நீண்ட நாட்களிற்குப்பின் இடம்பெற்ற சந்திப்பென்பதால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுவாரசியமாகவும் இக்கலந்துரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது. எல்லோரும் வெவ்வேறு துறைகளில் விற்பன்னர்களாக இருந்தது மட்டுமல்லாது சமூகப்பணியிலும் ஈடுபட்டிருந்ததனால் நாம் ஏன் ஒரு அமைப்பொன்றை உருவாக்கி சமூகசேவை செய்ய கூடாது என்ற கேள்வி அப்போது எழுந்தது. இச்சூழ்நிலையில் பிறந்த குழந்தை "ஓராயம்" என்று அழகிய தமிழ் பெயர் சூட்டப்பட்டு பூரணமான யாப்புடன், ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக கனடாவில் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஓராயம் அமையத்தினை இலங்கை உட்பட மற்றைய நாடுகளிலும் பதிவுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த சூழ்நிலைதான் என்னையும் அதில் முற்றாக ஈடுபட வழிவகுத்து, ஓராயம் அமையத்தினால் வரையறுக்கப்பட்ட 6 வேலைத்திட்டத்தில் ஒன்றான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினை வழி நடத்தும் பொறுப்பினை உருவாக்கியது.