இந்தியப் பிரபல எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி நினைவலைகள்..! - வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) -
இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.
1935 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் வாழவந்தி பொன்னேரிப்பட்டிக் கிராமத்தி;ல் குப்பண்ணக் கவுண்டர் - பெருமாயி அம்மாள் விவசாயத் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் சின்னப்பபாரதி. ஆரம்பக் கல்வியை முடித்தபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்;. கல்லூரியி;ல் டாக்டர் மு. வரதராசனின் மாணவராகப் பயின்றதனால் தமிழ்ப்பற்று மிகப்பெற்று எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் பின்னர் சிறுகதை - நாவல் எழுதும் ஆவல்கொண்டார். ரஷ்ய எழுத்தாளர்கள் - பாரதி ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். பாரதிமீது கொண்ட பற்றினால் சின்னப்பன் என்ற பெயரைச் சின்னப்பபாரதி என மாற்றிக்கொண்டார். கல்லூரிக் காலத்தில் மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டவர் மார்க்சிஸப் பாதையை வரித்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்படத் தொடங்கினார். கட்சியில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டார். நில உச்சவரம்புப் போராட்டத்தில் பங்கெடுத்து 650 கி. மீற்றர் நடைப்பயணம் போனார். இந்திரா பிரதமராக இருந்தவேளை கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைதுசெய்யப்பட்ட எழுத்தாளர் இவரெனக் கூறுவர். கட்சியின் வேண்டுகோளை ஏற்று மலைவாழ் மக்கள் மத்தியில் வேலைசெய்தார். விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். பல சந்தர்ப்பங்களில் உயிராபத்தையும் சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.