முகநூற் குறிப்புகள்: கவிதை - வாழிய சென்னை! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
தொடர்நாவல் : கலிங்கு (2009 - 8) - தேவகாந்தன் -
2009 -8
ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.
ஜோதி சாமன்களை அடுக்கிக் கட்டினாள். அவன் தறப்பாளை கழற்றி மடித்தான். ஆயிற்று. மூவரினதும் பயணம் மேலே தொடங்கியது. அது இரணைப்பாலையை நோக்கியதாய் இருந்தது.
நாகியும் குடும்பமும்கூட பின்னால் போய்க்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாகத்தான்.
பொக்கணையும் இரணைப்பாலையும் பிதுங்கி மக்களால் வழிந்துகொண்டிருந்தது. ஊடறுத்துத்தான் செல்லவேண்டி இருந்தது. முந்திவிட எடுக்கிற மூர்க்கம் உயிரச்சத்தின் விளைவெனினும், அது ஒரு சமயத்தில் சகிக்கமுடியாது இருந்தது.
எப்படியோ தறப்பாளைக் குத்தி குந்தியிருக்க இடமொன்றுக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இரணைப்பாலையில் இன்னும் காய்கறிகளும், மற்றும் சமையல் சாமான்களும் வாங்கக்கூடியதாக இருந்தது. முருகமூர்த்தி போய் சமையலுக்கு சில காய்கறி வாங்கிவந்தான்.
அன்றைய பொழுது கழிந்தது.
ஒரு மாதமளவான காலத்தை அங்கே கழித்தார்கள். பணமிருந்தால் அங்கேயே சில நாட்கள் இன்னும் இருந்துவிடலாமென சிலபேருக்குப் பட்டது. முருகமூர்த்தியிடம் ஆபத்து அந்தரத்துக்கென்று கொஞ்சப் பணம் இருந்தது. அதை கடைசிவரை அவன் இறுக்கமாய் வைத்திருந்தே ஆகவேண்டும்.
தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..!(9) - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
அத்தியாயம் ஒன்பது!
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”
அனவருமே சற்று ஆடித்தான் போனோம்.
தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஐயர் கேட்டாக.
“என்ன சொல்லிட்டேள்….. அதுக்கிண்ணு நாள் பாக்கவேண்டாமோ…. பந்தல்கால், பத்திரிகை எதுவுமே இல்லாம…… ”
பேச்சிலே சுதி குறைந்தது.
அண்ணன் சிரித்தபடி பேசினாங்க.
“என்னசாமி பேசிறீங்க…. என்னடா இவங்க நிச்சயார்த்தம்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தாங்க….. பேசின ரேட்டுக்குள்ளையே கலியாணத்தயும் முடிச்சிட்டு, நோவாம நம்மளைக் கழட்டி விட்டுருவாங்களோண்ணு பயப்பிடாதீங்க…. ரெண்டுக்கும் சேத்தே துட்டுக் குடுத்திடுறோம்….”
ஐயர் சமாளித்துச் சிரித்தார்.
“என்ன புசுக்கிண்ணு இப்பிடிச் சொல்லிட்டேள்…. அது அதுக்கிண்ணு முறைகள் உண்டில்லையா….. அதைத்தான் சொல்ல வந்தேன்….. அத்தோட அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டில வெச்சு நடத்தவேண்டிய பங்சன் பாருங்கோ…..”
“சாமி…. நியதிகளையும், முறைகளையும் மனிசனுக்காக, அவன் வசதி, வாழ்க்கைக்காகத்தான் ஆக்கியிருக்காங்க….. அந்த நியதிகளே மனிசனோட வசதிகளுக்கும், வாழ்க்கைக்கும் இடைஞ்சலா வர்ரப்போ அதயெல்லாம் மாத்திக்கவேண்டியதுதான் புத்திசாலித்தனம்…. இண்ணிக்கு பொதுநாள் கிடையாது….. நெறைஞ்ச முகூர்த்தநாள்…. நேரமும் அதுக்கிண்ணு உள்ளதைப் பாத்துத்தான் எல்லாமே செய்யிறோம்…. அந்த நேரத்துக்குள்ள செய்து முடிக்கலாமான்னுதான் கேக்குறேன்….”
ஐயர் உள்பட அனைவரிடமுமிருந்து அமைதியே வெளிப்பட்டது.
பயணக் கட்டுரைகள்: என் கொடைகானல் மனிதர்கள்! (1) பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்! - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்' . அத்தொடரின் முதற் கட்டுரை இது. ஏனையவை 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவரும். - பதிவுகள்.காம் -
ஒரு காலத்தின் வாழ்க்கையை நான் இவ்விதமாக பதிவு செய்ய நேர்ந்தது. இது ஒரு கடந்த காலமா? இருக்கலாம். இருந்தும், இடைவிடாத இப்போராட்டத்தின் அடித்தளம், நாளைக்கும், நாளை மறுதினமும் முகிழ்க்க கூடிய, புது முளைகளுக்கு உயிர் தர கூடியவையே. நான் சந்தித்த அந்த மனிதர்கள் - அவர்கள் , இன்றும் எனக்கு உயிர் தரும் பெரியோர்கள். அவர்களுக்கு என் வணக்கம்.
சடை சவுக்கு
அந்த குளம் அப்படி கிடந்தது, யாதொன்றும் அறியாதது போல. அவரை தற்செயலாகத்தான் நான் சந்திக்க நேர்ந்தது. குளத்தின் சுற்றளவு, ஓர் ஆறு கிலோமீற்றர் என்றார்கள். குளத்தில் படகு சவாரி, அந்தக் காலை வேளையிலேயே ஆரம்பமாகியிருந்தது. மெல்லிய பனிபடலம் அவ்வப்போது குளத்தின் குறுக்காய், சில இடங்களில் தோன்றி, அவசரமற்று, மெது மெதுவாக, மெல்லிய ஒரு ஓவியம் போல் வழுக்கி, பின் கலைந்து அகன்றது.
சில சிறுவர்கள் தூண்டில்கள் போட்டவாறு ஓரங்களில் நின்றார்கள். இன்னும் சில, ஏழெட்டு வயது சிறுவர்களின் கூட்டமும், அவர்களது முழங்கால் வரை மட்டுமே நீராழம் இருந்த இடங்களில், இறங்கி சிறிய சிறிய பொலித்தீன் பைகளைக் கொண்டு, தம் சிறிய கரங்களாலும் கால்களாலும் தண்ணீரை உதைத்து, உதைத்து அதிர்வலைகளை உண்டுபண்ணி, குட்டி குட்டி மீன்களை விரட்டி அந்த பொலித்தீன் பைகளுக்குள் வரச்செய்து, அவற்றை பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைத்து, பின் தூக்கி, அவற்றை தமது சிறிய முகங்களுக்கு நேராய் பிடித்து, அச்சிறிய மீன்கள் தமது சிறிய கண்களால் உற்றுப்பார்த்து, தமது சிறிய வாலை ஆட்டியவாறு நீந்துவதை கண்டு, சந்தோசமாய் ஆர்ப்பரித்தனர்.
இதைத்தவிர சில வயது வந்த இளைஞர்களும் முதியவர்களும் ஆங்காங்கே அக்குளக்கரையின் ஓரமாக இருந்த காங்கிரீட் திட்டுகளிலும், பைப்புகளிலும் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மிக அமைதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள், மீன்கள் தம்மை ஏமாற்றி தின்று சென்றிருந்த தூண்டில்களை, ஓரளவு ஏமாற்றம் கலந்த சோர்வுடன் அவ்வப்போது இழுத்தெடுத்து, பின் அசராத ஓர் நம்பிக்கையுடன், மீண்டும் தேவையான மீன் தீணிகளை கவனமாக தம் இரண்டு விரல்களால் கோர்த்து, பின் வலது கையின் பெருவிரலையும் தம் சுட்டுவிரலையும் பயன்படுத்தி தூண்டிலை இரண்டொரு தடவை வட்டமாக ஒரு சுழற்று சுழற்றி நாசுக்காக நீரில் விட்டெறிந்தார்கள்.
அவை, நிதானமாக ஓர் இருபது முப்பது யார் தொலைவுக்கு சென்று விழுந்ததும், நூலை அப்புறமாயும் இப்புறமாயும் இழுத்து அசைத்து, ஓர் வசதியான இடத்தில் தூண்டிலை நிலைபெற செய்கின்றார்கள்.
குளிர்வாடை வீசிய அந்த காலைப்பொழுதில், இவற்றையெல்லாம் நோட்டமிட்டபடி வந்த பொழுது, தற்செயலாகவே இவர் என் கண்ணில் பட்டார். ஓர் அறுபது எழுபது வயதிருக்கும். குண்டாகவும் கட்டையாகவும் இருந்த அந்த மனிதர் குளத்தை ஒட்டி மிக செழிப்பாய் வளர்ந்திருந்த மெல்லிய புற்றரையின் ஓரமாய் கால்களை நீட்டி போட்டுக்கொண்டு தன்பாட்டில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)
நாள்: 19 நவம்பர் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)
பேசுபவர்: திருமதி உமை பற்குணரஞ்சன்
மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் ! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி , தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும். இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.
தேடியெடுத்த கதையும் கவிதையும்: 'பல்லி தந்த பாடம்' & 'விழித்தெழும் புது யுகம்' - வ.ந.கிரிதரன் -
நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.
என் பதின்ம வயதுகளில் இரவுகளில் என் அறையில் படுக்கையில் சாய்ந்தபடி சுவரில் பூச்சி பிடித்துண்டும் பல்லிகளையு, உணவாகும் பூச்சிகளையும் அவதானிக்கையில் எழுந்த உணர்வின் வெளிப்பாடு இச்சிறுகதை. ஜுலை 6, 1980 வெளியான ஈழநாடு வாரமலரில் வெளியாகியுள்ளது. 'பல்லி தந்த பாடம்' என்னும் தலைப்பில் வெளியான சிறுகதை. இந்நிலையில் மீண்டும் இச்சிறுகதை என் கைகளை வந்தடைந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. அக்காலகட்டத்தில் நான் எழுதிய ஈழநாடு வாரமலரில் வெளியான கடைசிச்சிறுகதை இதுதான். ஈழநாடு வாரமலரில் வெளியான எனது ஆரம்பச் சிறுகதைகளில் என்னிடம் இல்லாத சிறுகதை இதுதான். ஈழநாடு நிறுவனமும் பல தடவைகள் போர்ச்சூழலில் எரிக்கப்பட்ட நிலையில் இச்சிறுகதை மீண்டும் கிடைக்குமென நான் நினைத்திருக்கவேயில்லை. உண்மையில் இச்சிறுகதை கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சிதான். என் பால்ய, பதின்ம மற்றும் இளமைப்பருவங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்த ஈழநாடு பத்திரிகையை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்பொழுதும் என் நெஞ்சில் அதற்கோரிடமிருக்கும்.
பின்னர் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்திருக்கையில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் இச்சிறுகதையில் வரும் பல்லி- பூச்சி அனுபவத்தை மையமாகக்கொண்டு 'பல்லி' என்றொரு சிறுகதை எழுதினேன். அது வேறொரு பார்வையில் எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பல வருடங்கள் கழிந்த நிலையில் இச்சிறுகதையை மையமாகக்கொண்டு விகடனுக்குப் 'பல்லிக்கூடம்' என்றொரு குட்டிச் சிறுகதை அனுப்பினேன். அது விகடனில் அதன் பவள விழாவையொட்டிய காலத்தில் வெளியானதால் முத்திரைக்குட்டிக்கதையாகப் பிரசுரமானது.
இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் -1" - தகவல்: அகில் -
நாள்: ஞாயிற்றுக்கிழமை 07-11-2021
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09
Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/
மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
லண்டனில் உலகத் தமிழ் கலைஞர்கள் கௌரவிப்பு! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
முதல் முறையாக உலகவாழ் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு லண்டன் வோட்டஸ்மித் மண்டபத்தில, ‘கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தெரிவு ஆணைய’த்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
‘ஆச்சாரிய கலாசாகர விருது', ‘நிர்த்திய சிரோன்மணி விருது’, ‘நாட்டிய கலா விபஞ்சி விருது’, ‘கான கலாதரர விருது’. ‘வாத்திய கலாதரா விருது’. ‘சங்கீத இரத்னா விருது’ போன்ற விருதுகளை விழங்கி கௌரவித்திருந்தனர். தமது வாழ்நாளில் கலைச் சாதனைகளைப் புரிந்தவர்களுக்கும், இசை, நடனம். வாத்தியக் கலைஞர்களுக்கும் அவரவர்களின் கலைத் துறைகளின் திறமைகளுக்கேற்ப கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அனைவர்தம் வாழ்வெனும் நந்தவனத்தில் இன்பமென்னும் ஒளிமலர் பூத்துக் குலுங்கட்டும். இந்நன்னாளில் நல்லெண்ணங்களால் நானிலம் சிறக்கட்டும். மாந்தர்தம் வாழ்வினில் மகிழ்ச்சி பொழியட்டும். இந்நாளில் நீங்கள் அனைவரும் இன்ப நீர் வீழ்ச்சியில் நீராடுங்கள் அன்பர்களே!
கூவாமல் கூவும் கோகிலம்: வாழ்த்துவோம்! - குயில் -
கனடாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்து தனது எண்பத்தியேழாவது வயதில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ளார் இலங்கைத்தமிழ்ப் பெண் ஒருவர்.அவரது பெயர் வரதலட்சுமி சண்முகநாதன் (Varathaledchumy Shanmuganathan) . இந்த வயதில் இவ்விதம் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் முதுமானிப்பட்டம் பெற்ற முதலாவது கனேடியர் மற்றும்
முதலாவது கனேடியப் பெண் என்னும் மேலதிகச் சிறப்புகளையும் இவர் இதன் மூலம் பெறுகின்றார். அவரைப்பற்றிய மேற்படி பல்கலைக்கழகச் செய்திக்குறிப்பினைப் பகிர்ந்துகொள்வதுடன் அவரை மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.
பாரதியும் சிறுகதை இலக்கியமும்! - முருகபூபதி -
பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல். ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது, பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர். மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில், மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும் வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர் 1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி அதனை இயக்குவதற்காக பரத்வாஜ் என்ற ஆசிரமத்தையும் அமைத்தார். அத்துடன் பாலபாரதி என்ற இதழையும் நடத்தினார். இவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிறது.
பாரதி மறைந்து நான்கு ஆண்டுகளில் வ.வே.சு. ஐயரின் வாழ்வில் பெருந்துயரம் நேர்ந்துவிடுகிறது. தனது குருகுல மாணவர்கள் சகிதம் அம்பா சமுத்திரம் அருவிக்குச்சென்றவிடத்தில், அவரது மகள் அந்த அருவியில் தவறி விழுந்துவிடவும், அவளைக்காப்பற்ற அருவியில் குதிக்கிறார். தந்தையையும் மகளையும் அருவி இழுத்துச்சென்றுவிட்டது. சடலங்களும் கிடைக்கவில்லை. பாரதிக்கு முன்னர் ஐயர் இறந்திருந்தால், பாரதி, ஐயர் பற்றி ஒரு காவியமே இயற்றியிருப்பார்.
உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? - குரு அரவிந்தன் -
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.
தீபாவளித் திருநாள் - குரு அரவிந்தன் -
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்! தீப ஒளித் திருநாள் என்றும் தீபாவளியை அழைப்பர். இந்து மதத்தவர்களால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை இதுவாகும். மனிதவாழ்க்கையில் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இப்பண்டிகை இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மியான்மர், பிஜி தீவு, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. இப்போது புலம்பெயர்ந்த சில நாடுகளிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான ஆண்டுகளில் பொதுவாக தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகின்றது. தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்குப் புராணக்கதைகள், இராமாயணக் கதைகள் போன்றவற்றின் மூலம் பல காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அறிவியல் வாதிகள் பொருத்தமற்ற புராணக் கதைகள் என்றும் வாதிடுவர். புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளையே இன்று தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் 2021 நவெம்பர் மாதம் 4 திகதி வருவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலாச்சார நாடாகிய கனடாவில், அவர்களின் நாட்காட்டியின் குறிப்புக்கு ஏற்ப, வெவ்வேறு தினங்களில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. சிலர் ‘தீபாபலி’ என்றும் இத்திருநாளைக் குறிப்பிடுவர்.
தீபாவளி அன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அதிகாலையில் தூக்கத்தால் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பலகாரங்களைப் பரிமாறியும் கொள்வர். சிலர் விருந்தினருக்குப் பரிசுகள் தந்தும் மகிழ்வர். பெரியோரை வணங்கி அவர்களி;டம் இருந்து ஆசீர்வாதம் பெறுவர். தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வது மக்களின் வழக்கமாகும்.
கூவாமல் கூவும் கோகிலம்: கலைஞர் போட்ட தவறான கணக்கால் வாழ்விழந்த மு.க.முத்து! - குயில் -
எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு.
மு.க.முத்துவின் மீது இன்னுமொரு விதத்திலும் எனக்கு அவர் மீது அனுதாபமுண்டு. அவரது தாயான கலைஞரின் முதல் மனைவியும், பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே காச நோய் காரணமாக இறந்தபோது அவருக்கு வயது 20. குழந்தையிலேயே தாயன்பை இழந்து வளர்ந்தவர் மு.க.முத்து. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை அவரது தந்தையின் செயற்பாடுகளாலேயே முடிவுக்கு வந்தது. இவ்விதமான வாழ்க்கைப் போராட்டங்களே பின்னர் மு.க.முத்துவின் வாழ்வின் சீரழிவுக்கும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டுமென்றே தெரிகின்றது.
அக்டோபர் 31 கலோவீன் தினம்! - குரு அரவிந்தன் -
மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.
பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும்.
காலத்தால் அழியாத கானம்: 'பாலாற்றில் சேலாடுது' - ஊர்க்குருவி -
கே.வி.மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் மொழியில், சீர்காழி கோவிந்தராஜன் & ஜமுனாராணி குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடற் காட்சியில் நடித்திருப்பவர்கள் எம்ஜிஆர் & எல்.விஜயலட்சுமி. பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: 'கொடுத்து வைத்தவள்'.
'நூலகம்' இணையத் தளத்தில் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன்
எனது 'குடிவரவாளன்' நாவலைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். நியூயோர்க் மாநகரத்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் இருத்தலுக்கான போராட்டத்தை விபரிக்கும் நாவல் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்டது. இவ்வகையில் ஒரு குறிப்பிட்ட காலச் சம்பவங்களை ஆவணப்படுத்தும் நாவலிது.
கூவாமல் கூவும் கோகிலம்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்! -
தமிழை வளர்ப்பது என்றால் எப்படி? தமிழ் நூல்களை அதிக அளவில் தேடிப்பிடித்து இணையத்தில் அல்லது அச்சில் வெளியிடலாம். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை , வெளியிட்ட சஞ்சிகைகளை, நூல்களை, பத்திரிகைகளைச் சேகரிக்கலாம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவை. பலரின் பங்களிப்பு தேவை. ஆனால் இவற்றையெல்லாம் பல சுய இலாபமற்று இயங்கும் அமைப்புகள் செய்து வருகின்றன. உதாரணத்துக்கு மதுரைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். நூலகம் அறக்கட்டளையைக் குறிப்பிடலாம். இணையக்காப்பகத்தில் கூட (Archive.org)) பல அரிய தமிழ்ப்படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உதவ விரும்பினால் இவை போன்ற இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்குக் கொடுங்கள். உதவுங்கள். ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இவற்றை விட எவற்றைச் சாதிக்கப்போகின்றது? எத்தனை மில்லியன்கள் சேர்த்துள்ளார்கள். 2030இல் பார்ப்போம் ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை தமிழ் மொழி வளர்க்க என்ன செய்திருக்கின்றதென்று.
நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
பதில்: நிறமும், கருவும் தான்.
கேள்வி: நிறத்தை பற்றி விளக்குவீர்களா?
பதில்: அவரது நிறங்கள் ஆழமானவை. எண்ணற்றவை. நிறங்களை அவர் தேர்வு - தெரிவு செய்வது வித்தியாசமானது. உதாரணமாக வானத்துக்கான அவரது நிறத்தின் தேர்வு படத்துக்கு படம் வேறுபடும். அதுபோலவே மரங்கள், மேகங்கள், பூக்கள், நீர் - இவை அனைத்துமே - தான் கூற வரும் பொருளுக்கேற்ப அவரது கரங்களில் - வித்தியாசப்பட்டு நிற்கும். நிறங்களை அவரே ஆக்கி கொள்வதாகவும் ஒரு கதை உண்டு. பொதுவில் இது ஓவியர்களுக்கு நடக்கும் ஒன்றே. தங்களுக்கு தேவையான நிறங்களை அவர்களே ஆக்கி கொள்வார்கள். அது, உண்மையாக இருக்கலாம் - இவர் ஆக்கியுள்ள நிறங்களை பார்க்கும் போது – கபில வானம், நீல வானம், செம்மஞ்சள் வானம், எத்தனை வானங்கள். அத்தனையும் வித்தியாச வித்தியாசமான அதிர்வுகளை ஏற்படுத்துபவை.
கேள்வி: கவிஞர் ஜெயபாலன் அவர்கள், வான்கோவின், தூரிகையின் அசைவு குறித்து பேசும் பொழுது, தீப்பற்றியெறியும் காட்சியை போல அவரது தூரிகையின் வீச்சு அவ்வப்போது இடம்பெற்றுள்ளது என குறித்தார். அவரது தூரிகை வீச்சைப் பற்றி (Brush strokes) என்ன கூறுவீர்கள்?
பதில்: அவரது Brush strokes பற்றி என்னால் கூறவே முடியாது. என்னால் மாத்திரம் அல்ல. யாராலும்தான் என்றே கூறுவேன். ஏனென்றால் அப்படி அவை இயங்குபவை. தான் எடுக்கும் பொருளுக்கேற்ப, வண்ணங்களை மாத்திரமல்ல தனது தூரிகையையும் வித்தியாச வித்தியாசமாக பாவித்த மகா கலைஞன் அவன். உதாரணமாக ஒரு மூன்றாம் பரிணாமத்தை பெற்றுக் கொள்ள அவர் சமயங்களில் Pallet Knife பாவித்துள்ளதாகவே படுகின்றது. அதாவது, தான் கூறவரும் பாவத்திற்கு, ஓவியத்தின் செய்திக்கு – தூரிகை அவருக்கு போதாமல் போகின்றது.
அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்! - குரு அரவிந்தன் -
இலங்கையில் இருக்கும் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம்போல, ஹவாயிலும் ஒரு இயற்கைத் துறைமுகம் இருக்கின்றது. பேர்ள் ஹாபர் என்ற பெயரைக் கொண்ட இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகயுத்தத்தின் திருப்புமுனையாக இருந்தது. இந்த பேர்ள் ஹாபர் துறைமுகம்தான் அமெரிக்காவின் பசுபிக்பிராந்திய முக்கியமான கடற்படைத் தளமாக இருந்தது. சுமார் 80 வருடங்களுக்கு முன், அதாவது 1941 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது இங்கே உள்ள பேர்ள் ஹாபர் என்ற இயற்கைத் துறைமுகம்.
விசுவாசம் மிக்க போராளி: 'ஆனந்தி' (சுப்பிரமணியம் சதானந்தன்)!
சிலர் தாம் சார்ந்த அமைப்புக்கு அல்லது நிறுவனத்துக்கு விசுவாசமாக இறுதிவரை வெளிச்சத்துக்கு வராமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள். எவ்விதத்தேவையற்ற பிரச்சினைகளிலும் சிக்காமல் , எல்லோருடனும் அன்புடன் பழகும் இவர்கள் கடமையே கண்ணாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வகையான மனிதர்களில் ஒருவராகவே அண்மையில் மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளில் இயங்கிக்கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சதானந்தன் (ஆனந்தி) அவர்களை நான் அறிந்துகொண்டிருக்கின்றேன். புரிந்துகொண்டிருக்கின்றேன். இவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எவற்றையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஆரம்பத்தில் இவர் காந்திய அமைப்பிலும் இயங்கிக்கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. பழகியதில்லை. ஆனால் ஒருமுறை இவரிடமிருந்து இயக்க இலச்சினை பொறிக்கப்பட்ட நன்றிக்கடிதமொன்றினைப் பெற்றிருக்கின்றேன். 86-89 காலகட்டம். இவர் தமிழகத்தில் இயக்கத்தளப்பொறுப்பாளராக இயங்கிக்கொண்டிருந்தாரென்று நினைக்கின்றேன். கனடாவில் வெளியான 'புரட்சிப்பாதை'க் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான எனது 'மண்ணின் குரல்' நாவல் நூலுருப்பெற்றபோது அனுப்பியிருந்தேன். அதற்கு நன்றி தெரிவித்து வந்த கடிதம் அது. தட்டச்சு செய்யப்பட்டிருந்த கடிதத்தில் 'ஆனந்தி' என்று கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார். அது இன்னும் என்னிடமுள்ளது.
வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் நீலாவணனின் 'பல்லிகள்'! & எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்! - வ.ந.கிரிதரன் -
என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.
'வெண்டிப்பிஞ்சின் இருபுறமும் விரல்கள் வந்து முளைத்ததுபோல்' பல்லியின் உடல் வாகு இவருக்குத் தென்படுகின்றது. 'பாசி மணி பதித்தது போல் பளபளக்கும்' பல்லிகளின் விழிகள் அமைந்திருக்கின்றன. இவ்விதம் பல்லியின் உடலமைப்பை ஆரம்பத்தில் வர்ணிக்கும் கவிதை பின்னர் அவற்றின் கூடலை வர்ணிக்கின்றது. அதனை வாசிக்கையில் இலேசானதொரு புன்னகை அரும்பாமல் போகாது. 'பூச்சியுண்ட போதை கொண்டு , புருஷனைப்போய் வளைத்துக்கொண்டு , கீச்சுமூச்சு மூட்டு'தாம். 'கிசுகிசுத்து'ப் பேசுதாம் பெண் பல்லி. 'அதற்காகத்தானடியேய் ஆடை அவிழ்த்தோம் என் ஆண் கதையாதே காதலில் கட்டுண்டு' கிடக்குமாம். நிச்சயம் சொல்லுங்கள் இவ்வரிகளைப் படிக்கையில் உங்கள் இதழ்களில் புன்னகை படர்கிறதா இல்லையா?