மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (2) - ஈழக்கவி -
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” (2023) நூல் ‘அடையாளம்’ (Adaiyaalam India) பதிப்பக வெளியீடாக 256 பக்கங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. 'சோக்ரடீஸ் சிந்தனைகளை தமிழ்ப் பண்பாட்டு மரபில் இணைத்த பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும்' இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் ஐ முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். Philosophy என்பது தமிழில் மெய்யியல், தத்துவம் எனப்படுகின்றது. ஈழத்து தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்ற சொல்லே உபயோகத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தத்துவம் என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. ‘க்ரியாவின் தமிழ் அகராதி’ Philosophy என்பதை ‘தத்துவம்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சாமிநாத சர்மா. ரி.எம்.பி. மகாதேவன் போன்றவர்கள் தந்துள்ள நூல்களுக்கு இந்திய தத்துவம், கிரேக்க தத்துவம், மேற்கத்திய தத்துவம் என்றே பெயரிடப்பட்டுள்ளன. மெய்யியல் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா தன்னுடைய ‘விமரிசன முறையியல்’ (1989) நூலின் இந்திய பதிப்பிற்கான (1992) முன்னுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். “விமரிசன முறையியல் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளிவரும் இந்நூலின் பூர்வநாமம் “விமரிசன மெய்யியல்” என்பதாகும். மெய்யியல் என்பதற்கு முறையியல் என்றதொரு விளக்கம் உண்டென்பதாலும், தமிழக வாசகர்களுக்கு மெய்யியல் என்ற பதப்பிரயோகம் அதிக பரிச்சயமற்றதென்பதாலும் பெயர் மாற்றம் செய்யவேண்டியதாயிற்று.” பேராசிரியர் அனஸ் இன் “மெய்யியல் - கிரேக்கம் முதல் தற்காலம் வரை” (2006) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு (2013) இந்தியாவில் (அடையாளம் பதிப்பகம்) வெளியானபோது, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” என்பதே இந்நூலினதும் நாமமாக இருக்கின்றது. தத்துவம் எனும் போது அது வெற்றுப்பேச்சு, விதண்டாவாதம் அல்லது வறட்டுச் சிந்தனை அல்லது விளங்கா வியாக்கியானம் என்பதாகவே கவனக்குவிப்புப் பெறுகின்றது. Philosophy என்பது வறட்டுச் சிந்தனைகளின் தொகுப்பல்ல; அது வாழ்க்கை நெறிகளின் பகுப்பும் தொகுப்பும் ஆகும். சோக்ரடீஸ் இன் மெய்யியல் இதனையே உணர்த்தியுள்ளது.