படித்தோம் சொல்கின்றோம்: வி.எஸ். கணநாதன் எழுதிய நிம்மதியைத் தேடி ( கதைத்தொகுதி )! வாசகருக்கு புதிய அனுபவங்களைத் தரும் நூல்! - முருகபூபதி -
“நேற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும். செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில், தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும். “ இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் அவர்கள் வெளியிட்டிருந்த சத்தியம் மீறியபோது என்ற கதைத்தொகுதி பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தபோது குறிப்பிட்டிருந்தேன். தற்போது வி. எஸ். கணநாதன், நிம்மதியைத் தேடி என்ற மற்றும் ஒரு கதைத்தொகுப்பினை வரவாக்கியுள்ளார்.
கிழக்கிலங்கை மகுடம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கான முகப்போவியத்தை மெல்பன் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்துள்ளார்.
“ இன்று சிறுகதைகளின் வடிவ உத்திகள் பல்வேறு தளங்களில் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், கணநாதன் தனது கதைசொல்லும் உத்தியாக வாசகர்களுடன் உரையாடுவது போன்ற வடிவத்தை தன் எழுத்து நடையாக மாற்றியுள்ளார் “ என்று இந்நூலை பதிப்பித்திருக்கும் மகுடம் வி. மைக்கல் கொலின் குறிப்பிட்டுள்ளார்.
நிம்மதியைத் தேடி நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் வரலாறுகளையும் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டிருப்பவை.
கணநாதன், தனது வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களை, படைப்பிலக்கியமாக்கி வருபவர். ஆனால், அந்த அனுபவங்களை சந்திக்கும்போது, பின்னாளில், அவற்றை படைப்பிலக்கியமாக்கவேண்டும் என நினைத்திருப்பாரோ தெரியாது.