வாசிப்பு அனுபவம்: பெண் ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பேசும் முருகபூபதியின் “ யாதுமாகி “! - விஜி இராமச்சந்திரன் – மெல்பன் -
பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும். இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.
இந்நூலில் இடம்பெறும் முதல் பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், ஆறு தசாப்த காலம் தமிழ் எழுத்துலகில் சில முக்கியமான படைப்புக்களை தந்தவர். அவர் களப்பணி ஆற்றி எழுதிய நாவல்கள் பற்றியும், அவரது துயரமான இறுதி நாட்கள் பற்றியும் எழுதியுள்ளார். அடுத்த ஆளுமை அருண். விஜயராணி. 1970 களில் இலங்கை வானொலியில் யாழ்ப்பாண மண்ணின் மொழி வாசனையோடு விசாலாட்சி பாட்டி என்ற தொடரை எழுதி புகழ்பெற்றவர். அங்கதம் தோய்ந்த நடையில் சமூக சீர்திருத்த சிறுகதைகள், நாடகங்கள் எழுதியவர். மத்திய கிழக்கு, லண்டன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர். அடுத்த ஆளுமை கமலினி செல்வராசன். இயல்பிலேயே கலை இலக்கிய நடன இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தவர். இலங்கை வானொலியில் கணவர் சில்லையூர் எழுதி இயக்கிய நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். ஆதர கதாவ, கோமாளிகள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கலை இலக்கிய மேடைகளிலும் தோன்றியவர். கணவர் இறந்த பின்னரும் நெற்றித் திலகத்துடன் வலம் வந்த புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். கணவரின் மறைவுக்குப் பின் அவரது கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். பலதுறைகளில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி 61வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியையும் இந்த நூலின் வாயிலாக அறிகின்றோம்.