அஞ்சலிக்குறிப்பு: இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -
யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை. அதன் நிறுவனர் அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக வந்தது. அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.
2003 ஆம் ஆண்டு எமது மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களுக்கு சாகித்திய ரத்தினா விருது கிடைத்த சமயத்தில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வெள்ளவத்தையில் ஶ்ரீதரசிங் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்துடன் நடந்தது. அந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது, பாக்கியம் அம்மாவை அழைத்து, அவரது கணவர் பூபாலசிங்கம் அவர்களின் படத்துக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டேன். அந்தப்படத்தையே நான் ராஜெனின் குறிப்பிலிருந்து பார்த்து, பாக்கியம் அம்மாவுக்கு மனதிற்குள் அஞ்சலி செலுத்தினேன்.
எமது தமிழ் சமூகத்தில் பொதுவாழ்க்கையில் அதிலும் இடதுசாரி முகாமிலிருந்து இயங்கும் எந்தவொரு ஆண்மகனுக்கும் வாய்க்கும் மனைவி சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிதானமும் மிக்கவராக இருக்கவேண்டும்.
வடபுலத்தில் நயினா தீவை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள் பூபாலசிங்கம் தம்பதியர். நயினை நாகபூஷணி அம்பாளை குலதெய்வமாக போற்றியவர்கள். இவர்களின் குடும்பம் அந்த ஆலயத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், குடும்பத்தலைவர் பூபாலசிங்கம், இடதுசாரி இயக்கத்திலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வந்திருப்பவர். தங்களுக்கெல்லாம் இலக்கிய நூல்களை இலவசமாகத் தந்து படிக்கவைத்து எழுத்தாளராக்கிவிட்டவர்தான் புத்தகக் கடை பூபாலசிங்கம் என்று மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லி வந்திருப்பதுடன் தனது வாழ்க்கை சரித நூலிலும் பதிவுசெய்துள்ளார்.